Press "Enter" to skip to content

சிஷ்யரை காலணியால் அடித்ததற்கு மன்னிப்புக் கோரினார் பாடகர் ராஹத் ஃபதேஹ் அலிகான்

கராச்சி: தனது சிஷ்யரை காலணியால் அடித்து துன்புறுத்தும் காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக மன்னிப்புக் கோரியுள்ளார் பாடகர் ராஹத் ஃபதேஹ் அலிகான்.

பிரபல பாகிஸ்தானி பாடகர் ராஹத் ஃபதேஹ் அலிகான். புகழ்பெற்ற கவ்வாலி பாடகர் ஃபதேஹ் அலிகானின் பேரனான இவர் இந்தியிலும் ஏராளமான ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இந்த சூழலில், இவர் தனது உதவியாளர்களில் ஒருவரான நவீத் என்பவரை தனது காலணியால் கடுமையாக தாக்கும் காணொளி அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் அவரது செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதன் எதிரொலியாக இங்கிலாந்து அரசர் சார்லஸின் பிரிட்டிஷ் ஆசிய அறக்கட்டளையின் தூதர் பொறுப்பிலிருந்து ராஹத் ஃபதேஹ் அலிகான் நீக்கப்பட்டார். மேலும் அவருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக் கொள்வதாக அந்த அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், இந்தச் சம்பவத்துக்கு மன்னிப்புக் கேட்டு ராஹத் ஃபதேஹ் அலிகான் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “நான் ராஹத் ஃபதேஹ் அலிகான். இன்று என்னுடைய செயலுக்காக நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.இறைவனிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன். ஒரு மனிதனாகவும், ஒரு கலைஞனாகவும் நான் இப்படி செய்திருக்க கூடாது. இப்போது மிகுதியாகப் பகிரப்படும் இந்த காணொளி 9 மாதங்கள் பழையது. அப்போதே நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன். உடனே அவர் அழுதபடி, ‘உஸ்தாத் ஜி, ஏன் இப்படி பேசுகிறீர்கள்?’ என்றார். நான் அவருடைய குரு. அந்த சமயத்தில் நான் அவருடைய அப்பாவாக நடந்து கொண்டேன்.

நவீத் உடைய தந்தை எங்களுடைய குடும்பத்துக்கு கடந்த 40 ஆண்டுகாலமாக வேலை செய்கிறார். அவருடைய தந்தையும் எங்களுடைய குடும்பத்தில் ஒருவர். நான் அவரது குடும்பத்துக்கு செய்யும் உதவிகளை ஊடகம்வில் சொல்ல விரும்பவில்லை. காரணம் நான் அவற்றை விளம்பரத்துக்காக செய்யவில்லை. நவீத் என்னுடைய சிஷ்யர். நான் அவரை அடித்ததற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டேன். ஆனால் மக்கள் அதைவைத்து என்னை கேலி செய்துவருகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் நான் அவரிடம் எனக்கான புனித நீரை கொண்டு வரச் சொன்னேன். அந்த சூழலில் தீவிரத்தை யாரும் புரிந்துகொள்ளவில்லை” என்று ராஹத் ஃபதேஹ் அலிகான் கூறியுள்ளார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »