Press "Enter" to skip to content

சரோஜா சோப் சரோஜா பொடி சரோஜா கண் மை! – பாலயோகினி

தனது 5 வயதிலேயே ஹாலிவுட்டின் பெரும் நட்சத்திரமாக புகழ்பெற்றவர், சிர்லி டெம்பிள். 1934-38 வரை ஹாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாகக் கலக்கியவர். அப்போதைய அமெரிக்க அதிபரை விட அதிகம் சம்பாதித்தவர் என்பார்கள் அவரை. ஹாலிவுட்டில் அவர் இப்படி பிரபலம் என்றால், தமிழிலும் அப்படி பிரபலமான ஒரு குழந்தை நட்சத்திரம் இருந்தார். அவர், பேபி சரோஜா!

‘தென்னகத்தின் சிர்லி டெம்பிள்’ என்று புகழப்பட்ட அவர், அறிமுகமான படம், ‘பாலயோகினி’. இயக்குநர் கே.சுப்ரமணியத்தின் சகோதரர் கே.விஸ்வநாதனின் மகள்,இந்த பேபி சரோஜா. தென்னிந்திய திரைப்படத்தில் குழந்தைகளுக்கான முதல் படம் இதுதான்.

தமிழ்த் திரையுலகின் தந்தை என அழைக்கப்படும் கே.சுப்ரமணியம் இயக்கிய படமான இதில், பேபி சரோஜாவுடன் சி.வி.வி.பந்துலு, கே.ஆர்.செல்லம், பால சரஸ்வதி, பரதன், மணி பாகவதர், பேபி ருக்மணி, கே.என்.ராஜலக்‌ஷ்மி உட்பட பலர் நடித்தனர். இந்தப் படத்துக்கு முன் சிறுவேடங்களில் நடித்து வந்த கே.ஆர்.செல்லத்துக்கு இதில் முழு நீள கதாபாத்திரம். இதற்குப் பிறகு அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன.

மோதி பாபு, மாருதி சீதாராமய்யா இசை அமைத்தனர். பாபநாசம் சிவன் பாடல்களை எழுதினார். பேபி சரோஜா பாடிய,‘ராதே தோழி’, ‘கண்ணே பாப்பா மிட்டாயி வாங்கி தருவேனே’ உட்பட பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.

இந்த ஒரே படத்தின் மூலம், தனது துறுதுறு நடிப்பால் தமிழகம் முழுவதும் புகழடைந்தார் பேபி சரோஜா. அதோடு மட்டுமல்லாமல், நதியா சேலை, நதியா வளையல் போல,பேபி சரோஜா சோப், சரோஜா பொடி, சரோஜா கண் மை என வியாபாரப் பொருட்களிலும் இடம்பெற்றார் சரோஜா. கைப்பைகள், நோட்டுப்புத்தகங்கள் உட்பட பல பொருட்களில் அவரின் புகைப்படம் அச்சிடப்பட்டது என்கிறார்கள். இந்தப் படத்துக்குப் பிறகு, பேபி சரோஜா மீதான அபிமானத்தால் பல குழந்தைகளுக்கு சரோஜா என்று பெயர் சூட்டினார்கள்.

தமிழ், தெலுங்கில் உருவான இந்தப் படத்தை மெட்ராஸ் யுனைடட் ஆர்டிஸ்ட் கார்பரேஷன் நிறுவனம் தயாரித்தது. தெலுங்கு பதிப்பில் பேபி சரோஜா அதே கேரக்டரில் நடிக்க, மற்ற நடிகர்களில் சிலர் மாற்றப்பட்டனர். மூன்றரை மணி நேரம் ஓடிய இந்தப் படத்துக்கு சைலன் போஸ், கமால் கோஷ் ஒளிப்பதிவு செய்தனர்.

குழந்தைகளுக்கானப் படம் என்றாலும் அந்தக் காலத்திலேயே விதவைகள் படும் கொடுமை, சாதி ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் உட்பட பல விஷயங்களைப் பேசியது, இந்தப் படம். இதில் ஜானகி என்ற விதவை கேரக்டருக்கு நிஜமாக கணவனை இழந்த சீதாலட்சுமி என்ற பெண்ணை நடிக்க வைத்திருந்தார் கே.சுப்ரமணியம். இது அந்தக் காலகட்டத்தில் பேசப்பட்டது.

1937-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படம் அப்போது வரவேற்பைப் பெற்றது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »