Press "Enter" to skip to content

“அப்பாவிடம் கேட்கப்பட்டது கஷ்டமாக இருந்தது” – ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

சென்னை: “விமான நிலையத்தில் அப்பாவிடம் (ரஜினி) செய்தியாளர்கள், இசை வெளியீட்டு விழாவில் நான் பேசியது ‘லால் சலாம்’ படத்தின் விளம்பர யுக்தியா என கேட்டுள்ளனர். அவரிடம் அப்படி கேட்டிருக்க தேவையில்லை. அது கஷ்டமாக இருந்தது. என்னிடம் கேட்டிருக்கலாம்” என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்தின் பட விளம்பரம் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “ஒரு ஊரில் நடக்கும் கிரிக்கெட் மேட்ச். அந்த போட்டியில் நடக்கும் பிரச்சினையால் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. விளையாட்டு வினையாக முடிந்தால் என்ன நடக்கும் என்பது தான் படம் சொல்லும் விஷயம். பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள் என்பதால் ‘வை ராஜா வை’ படத்துக்குப் பிறகு இடைவெளி எடுத்துக்கொண்டேன்.

இந்தப் படம் அரசியல் பேசுகிறதா என்றால், ஆம் படம் மக்கள் சார்ந்த ஒரு சிறிய அரசியலைப் பேசுகிறது. அரசியல் எல்லாவற்றிலும் இருக்கிறது. அது நாம் பார்வையை பொறுத்து மாறுகிறது. நீங்கள் செய்யும் வேலைக்கு நேர்மையாகவும், நம்பிக்கையாகவும் இருந்தால் மலையைக் கூட கட்டி இழுத்துவிடலாம். செந்தில் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரைச் சுற்றிதான் படம் நகரும். கதாபாத்திரமாகவே அவர் வாழ்ந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் சண்டையே போடவில்லை என்பதை பெருமையாக சொல்லிக்கொள்வேன். பொதுவாக பெரும்பாலான படப்பிடிப்பு செட்களில் ஏதோ ஒரு பிரச்சினை வரும். ஆனால் எங்களுக்கு அது நிகழவில்லை. அதற்கு காரணம் எங்களின் குழு.

படம் வந்ததும், ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரிஜனல் சவுண்ட் ட்ராக் வெளியாகும். 90-ஸ் ரஹ்மானின் கம்பேக்கை இந்தப் படத்தில் பார்க்க முடியும். படத்தை ஒரு மியூசிக்கல் படமாக மாற்றிவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். அப்பா குறித்து இசை வெளியீட்டு விழாவில் பேசிவிட்டேன். இப்போது பேச வேண்டாம் என நினைக்கிறேன். ஒரு விஷயத்தை இப்போது சொல்ல ஆசைப்படுகிறேன். இசை வெளியீட்டு விழா அன்று நான் என்ன பேசப் போகிறேன் என்பது கூட அப்பாவுக்கு (ரஜினி) தெரியாது.

நான் அதிகம் பேசமாட்டேன் என்ற தைரியத்தில் அமர்ந்திருந்தார். ஆனால் நான் அவருக்கு அதிர்ச்சி கொடுத்துவிட்டேன். விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரிடம், இசை வெளியீட்டு விழாவில் பேசியது ‘லால் சலாம்’ படத்தின் விளம்பர யுக்தியா என கேட்டுள்ளனர். இப்படியான எந்த ஐடியாவும் எங்களுக்கு இல்லை. அப்படி பேசி படம் ஓட வேண்டும் என்ற தேவையுமில்லை. என்னையும் சரி, என் சகோதரியையும் சரி, எங்களின் சொந்த கருத்துரிமையை ஊக்குவிக்கும் ஒருவர் அப்பா. அவரிடம் அப்படியொரு கேள்வி கேட்டது கஷ்டமாக இருந்தது” என்றார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »