Press "Enter" to skip to content

“விஜய் அரசியல் முடிவில் மகிழ்ச்சி; பா.ரஞ்சித் மீது மரியாதை உள்ளது” – சந்தோஷ் நாராயணன் பகிர்வு

சென்னை: விஜய்யின் அரசியல் முடிவை வரவேற்பதாகவும், பா.ரஞ்சித் மீது தனக்கு எப்போதும் மரியாதை உள்ளது என்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் சந்தோஷ் நாராயணனின் ‘நீயே ஒளி’ இசைக்கச்சேரி வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சந்தோஷ் நாராயணன், “நடிகர் விஜய்யின் அரசியல் முடிவு எனக்கு சந்தோஷமளிக்கிறது. தனிப்பட்ட முறையில் எனக்கு அவரை நன்றாக தெரியும். அந்த வகையில் பார்க்கும்போது, அவரின் நேர்மை அரசியலிலும் பிரதிபலித்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சியளிக்கும். அவரின் கொள்கைகளை பொறுத்து வாக்குகள் தீர்மானிக்கப்படும்” என்றார்.

பாடகர் அறிவு குறித்து பேசிய அவர், “நீயே ஒளி பாடலை அறிவு எழுதியிருந்தார். அவருக்கு நான் செய்தி அனுப்பியிருந்தேன். என்னை ப்ளாக் செய்திருப்பார் போல, பார்க்கவில்லை. அனைவருக்கும் நான் அழைப்பு கொடுத்திருக்கிறேன். வந்தால் மகிழ்ச்சி. ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் விவகாரம் காரணமாக சில கோபம் இருக்கலாம். மாறிவிடும்” என்றார்.

பா.ரஞ்சித் குறித்து பேசுகையில், “ரஞ்சித் தான் இந்த நிகழ்ச்சி குறித்து முதலில் ட்வீட் செய்திருந்தார். திரைப்படத்தில் ஒரு கூட்டணி அமைத்து படம் பண்ணும் நாட்கள் முடிந்தவிட்டதாக நினைக்கிறேன். அந்தந்த படத்துக்கு எது செட் ஆகுமோ அப்படித்தான் வேலைசெய்கிறார்கள். அதற்காக அந்தப் படத்தில் இணைந்து பணியாற்றாதவர்கள் சண்டையிட்டு கொண்டார்கள் என்றெல்லாம் இல்லை.

உதாரணமாக, கார்த்திக் சுப்பராஜும் நானும் நல்ல நண்பர்கள். ஆனால், அனிருத்தும் நானும் அவரது படத்தில் மாறி மாறி வேலை செய்து வருகிறோம். படங்கள் நிறைய வருகிறது. மற்றபடி சண்டைகள் எல்லாம் இல்லை. பா.ரஞ்சித் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அது எப்போதும் இருக்கும். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். ‘தங்கலான்’ பயங்கரமாக இருக்கும் என நினைக்கிறேன். ஜி.வி.பிரகாஷ் சிறப்பாக இசையமைத்திருப்பார் என நினைக்கிறேன். பார்ப்போம்” என்றார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »