Press "Enter" to skip to content

“குற்ற உணர்ச்சியாக இருந்தது” – ‘பேட்ட’ கதாபாத்திரம் குறித்து நவாசுதீன் வருத்தம்

மும்பை: ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் பகைவனாக நடித்தது குறித்து பேசிய பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், அந்தப் படத்தில் தான் பலவீனமாக இருந்ததாகவும், அது தனக்கு மிகவும் குற்ற உணர்ச்சியை தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்தப் படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வசூல் ரீதியாக வரவேற்பை பெற்ற இப்படத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் பகைவனாக நடித்திருந்தார். ஆனால், அதில் அவருக்கான பலமான கதாபாத்திரம் வழங்கப்படவில்லை என அப்போதே பலரும் விமர்சித்தனர்.

இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நவாசுதீன், ‘பேட்ட’ படத்தில் பணிபுரிந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் பேசும்போது, “நான் ரஜினியுடன் நடித்த ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு நான் மிகுந்த குற்ற உணர்ச்சியில் இருந்தேன். காரணம், என்ன செய்கிறேன் என்றே தெரியாத ஒரு விஷயத்துக்காக நான் பணம் பெற்றுக் கொண்டதாக எனக்கு தோன்றியது.

நான் அவர்களை முட்டாள்கள் ஆக்கிவிட்டேன். ஏனெனில், நான் அங்கு வெறுமனே வாயசைத்துக் கொண்டுதான் இருந்தேன். அங்கு நடந்த பல விஷயங்கள் எனக்கு புரியவில்லை. நான் பணம் பெற்றுக் கொண்ட ஒரு விஷயத்தில் நான் மிகவும் பலவீனமாக இருந்தேன். என்னால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை. அது எனக்கு மிகவும் குற்ற உணர்ச்சியாக இருந்தது” என்று தெரிவித்தார்.

கடந்த மாதம் தெலுங்கில் வெளியான ‘சைந்தவ்’ படத்தில் நவாசுதின் சித்திக், விகாஸ் மாலிக் என்ற பகைவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வெங்கடேஷ் நாயகனாக நடித்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »