Press "Enter" to skip to content

சைரன் – திரை விமர்சனம்: விறுவிறுப்பும் வேகமும் ஜெயம் ரவிக்கு கைகொடுத்ததா?

உதவூர்தி டிரைவரான திலகன் வர்மன் (ஜெயம் ரவி) சிறையில் அடைப்பட்டு கிடக்கிறார். உடல்நிலை சரியில்லாத தந்தையைப் பார்க்க அவருக்கு பரோல் வழங்கப்படுகிறது. அவர் வெளியே வந்த நேரத்தில் தொடர்ந்து கொலைகள் நடக்க, சந்தேகப் பார்வை திலகன் பக்கம் திரும்புகிறது. இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்துகிறார் காவல் துறை அதிகாரியான நந்தினி (கீர்த்தி சுரேஷ்). இறுதியில் அந்தக் கொலைகளைச் செய்தது யார்? அதற்கான காரணம் என்ன? திலகன் சிறை சென்றது ஏன்? – இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘சைரன்’.

வழக்கமான பழிவாங்கும் கதையை முடிந்த அளவுக்கு எங்கேஜிங்காக கொண்டு செல்ல முயன்றியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ். காவல் துறையின் சைரனுக்கும், ஆம்புலன்ஸின் சைரனுக்கும் இடையிலான அதிகாரத்துக்கும், உண்மைக்குமான மோதல் கவனிக்க வைக்கிறது. தந்தை – மகள் சென்டிமென்ட், ஒன்லைன் நகைச்சுவைகள், கொலை, விசாரணை, நடுநடுவே வரும் ஃப்ளாஷ்பேக் ஹின்ட் என முதல் பாதி அயற்சியில்லாமல் கடக்கிறது. ஜெயம் ரவி – யோகிபாபு கெமிஸ்ட்ரியும், நகைச்சுவையும் படத்துக்கு பலம்.

விசாரணையை மையமிட்டு நகரும் இடைவேளைக்குப் பின்னான காட்சிகளில் வரும் ஃப்ளாஷ்பேக்கும், அதற்கான காரணமும், சம்பிரதாயமாக அணுகப்பட்டிருப்பதும், கவுரக் கொலையை பேசும் இடங்களில் அதற்கான ஆழம் இல்லாததும் மைனஸ். “சாதி இல்லன்னு ஒருத்தன் சொன்னா அவன் எந்த சாதினு தேட்றதவிடுங்க”, “நான் சிறைல இருக்குறது தான் என் பொண்ணுக்கு சந்தோஷம்னா அவளுக்காக நான் அதையும் பண்ணுவேன்” போன்ற வசனங்கள் கவனம் பெறுகிறது.

தொடக்கத்தில் இருந்த சென்டிமென்ட் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். ஆங்காங்கே சில புள்ளிகளை வைத்து அதனை ஒவ்வொன்றாக இணைத்து நடத்தும் விசாரணைக் காட்சிகள், திரைக்கதைக்கு அச்சாணி.

.உண்மையில் உருகும் தந்தையாக உருக்கமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பெப்பர் சால்ட் தோற்றத்திலும், துள்ளலான உதவூர்தி ட்ரைவராக இளமையான தோற்றத்திலும் அலட்டல் இல்லாத நடிப்பால் ஈர்க்கிறார் ஜெயம் ரவி. அப்பாவித்தனமாக யோகிபாபுவிடம் பேசும் காட்சிகள், மகளின் அன்புக்காக தவிக்கும் காட்சிகளில் அட்டகாசமான நடிப்பு.

கீர்த்தி சுரேஷ் காவல் துறை கதாபாத்திரத்துக்கு பொருந்த போராடுகிறார். காட்சிக்கு காட்சி வரும் தேவையற்ற கோபமும், ரகட்டாக காட்டிக்கொள்ள மேற்கொண்ட முயற்சிகளும் பெரிய அளவில் பலனளிக்கவில்லை. அவர் முழு நடிப்பை கொடுத்தபோதும், கதாபாத்திர வடிவமைப்பின் பலவீனத்தால் பெரிய தாக்கம் கொடுக்கவில்லை.

அனுபமா பரமேஸ்வரன் சிறிய காட்சிகள் வந்தாலும் கவனம் பெறுகிறார். யோகிபாபுவின் டைமிங் நகைச்சுவைகள் படத்தை தாங்குகின்றன. சமுத்திரகனி கொடுக்கப்பட்டதை மிகையில்லாமல் செய்திருக்கிறார். மகளாக நடித்திருக்கும் யுவினா பார்த்தவியின் குறையில்லாத நடிப்பு கதாபாத்திரத்தின் அடர்த்தியை கூட்டுகிறது.

ஜீ.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் நினைவில் நிற்காமல் நழுவ, சாம்.சி.எஸின் பின்னணி இசை விறுவிறுப்பு கூட்டுகின்றது. கதைக்கு தேவையான பங்களிப்பை செலுத்தும் செல்வகுமார் எஸ்.கேவின் ஒளிப்பதிவில் திருவிழா காட்சியும், உதவூர்தி சண்டைக்காட்சியும் சிறப்பு மென்ஷனுக்கு தகுதி வாய்ந்தவை.

முதல் பாதி சம்பவங்களின் நடுவே ஃப்ளாஷ்பேக்கை கச்சிதமாக பொருத்தியது, விறுவிறுப்பை கூட்டி, கதையை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் ரூபனின் ‘கட்ஸ்’ படத்தை எடிட்டிங் டேபிளில் கூடுதல் மெருகூட்டியிருக்கின்றன. நிறைய காட்சிகள் மேலோட்டமாகவும், அழுத்தமில்லாமல் சொல்லப்பட்டிருந்தபோதும், நகைச்சுவை, காதல், சென்டிமென்ட், சண்டை என வெகுஜன திரைப்படம்வுக்கான அம்சங்களுடன் உருவாகியிருக்கும் படம் ‘சைரன்’ ஒலியுடன் ஆம்புலன்ஸின் வேகத்தில் போரடிக்காமல் கடந்துவிடுகிறது.

[embedded content]

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »