Press "Enter" to skip to content

“வேலையை விட வற்புறுத்தினார்” – ‘மகாபாரதம்’ நடிகர் மீது ஐஏஎஸ் மனைவி குற்றச்சாட்டு

மும்பை: மகாபாரதம் தொடரின் மூலம் பிரபலமான நடிகர் நிதிஷ் பரத்வாஜ் தன்னை வேலையை விடுமாறும், இல்லையென்றால் விவாகரத்து வேண்டும் என்றும் வற்புறுத்தியதாக அவரது மனைவியும் ஐஏஎஸ் அதிகாரியுமான ஸ்மிதா பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

’மகாபாரதம்’ தொடரில் கிருஷ்ணராக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நிதிஷ் பரத்வாஜ். இவர் அண்மையில் தனது மனைவியும் ஐஏஎஸ் அதிகாரியுமான ஸ்மிதா பரத்வாஜ் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், தன்னுடைய இரட்டை பெண் குழந்தைகளை பார்க்கவிடாமல் தனது மனைவி தடுப்பதாகவும், தன்னிடமிருந்து குழந்தைகளை பிரிக்க அவர்களை தொடர்ந்து வெவ்வேறு பள்ளிகளுக்கு மாற்றுவதாகவும் கூறியிருந்தார்.

தனது கணவரின் புகார்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தனியார் செய்தி ஊடகத்துக்கு ஸ்மிதா பேட்டியளித்துள்ளார். அதில் பேசியுள்ள அவர், “நிதிஷ் என்னை வேலையை விடுமாறு வற்புறுத்தினார். நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்ற காரணத்தால் அவர் என்னிடம் விவாகரத்து கோரினார். நான் விவாகரத்துக்கு தயாரானபோது, பரஸ்பர விவாகரத்துக்காக என்னிடம் பணம் கேட்டார். அதற்கு நான் மறுத்தபோது, தற்போது இந்த புகார் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

தற்போது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. என் மகள்கள் பிறந்தது முதல் நிதிஷ் அவர்களுக்கென்று எந்தச் செலவும் செய்ததில்லை. பள்ளிக் கட்டணமோ அல்லது எந்தவித பராமரிப்புச் செலவுகளுக்கான பணமோ கூட செலவழித்ததில்லை. என் மகள்கள் என் உயிரினும் மேலானவர்கள். என் மூச்சு இருக்கும் வரை அவர்களை எந்த சூழலில் பாதுகாப்பேன்” என்று தெரிவித்தார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »