Press "Enter" to skip to content

“8 வாரத்துக்கு பிறகே ஓடிடி வெளியீடு” – தமிழக திரையரங்க உரிமையாளர்கள் தீர்மானம்

சென்னை: “4 வாரங்களுக்குப் பின் படங்களை ஓடிடியில் வெளியிட்டு வருகிறோம். இந்த கால இடைவெளி குறைவாக இருப்பதால், பார்வையாளர்கள் சிறிய படங்களை ஓடிடியிலேயே பார்த்துவிடலாம் என முடிவுக்கு வந்துவிட்டனர். இதனால் ஓடிடி வெளியீட்டை 8 வாரமாக மாற்ற வேண்டும் என முடிவெடுத்துள்ளோம்” என திரையரங்கம் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக காலை 11 மணி அளவில் பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது. திரையரங்கிற்கு வரும் மக்களின் எண்ணிக்கை கடந்த 4 மாதங்களாக சரிந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கருதுவது, ஓடிடி வெளியீடு. இந்தியாவில் வெளியாகும் இந்திப் படங்கள் 8 வாரங்களுக்குப் பிறகு தான் ஓடிடியில் வெளியிடப்படுகிறது. தமிழ் திரைப்படத்தில் தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் புரிதலின் அடிப்படையில் 4 வாரங்களுக்குப் பின் ஓடிடியில் வெளியீட்டு வருகிறோம்.

இந்த கால இடைவெளி குறைவாக இருப்பதால், பார்வையாளர்கள் சிறிய படங்களை ஓடிடியிலேயே பார்த்துவிடலாம் என முடிவுக்கு வந்துவிட்டனர். இதனால் தயாரிப்பாளர்களுக்கும், எங்களுக்கும் பாதிப்பு உள்ளது. ஆகவே தயாரிப்பாளர்களுடன் இணைந்து பேசி ஓடிடி வெளியீட்டை 8 வாரமாக மாற்ற வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். விரைவில் இது தொடர்பாக முடிவெடுத்து அறிவிப்போம். திரையரங்குகளுக்கு உள்ளாட்சி வரி 8 சதவீதம் விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பை தமிழக அரசு கைவிட வேண்டும். இது குறித்து முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம்.

தமிழகத்தில் விநியோகஸ்தர்கள் பங்கு தொகையான 80 சதவீதத்தை கேட்கின்றனர். கேரளாவில் 50 ஆண்டுகளாக விநியோகஸ்தர்கள் பங்குதொகை அதிகபட்சம் 60 சதவீதம் தான் அதற்கு மேல் கிடையாது. தமிழகத்திலும் அதிகபட்சமாக 60 சதவீத பங்கு தான் கொடுக்க முடியும். வரும் 1-ம் தேதி முதல் விநியோகஸ்தர்களிடம் பேசி இதை நடைமுறைபடுத்த உள்ளோம். அதேபோல இன்று பல மாநிலங்களில் திரையரங்குகளில் கிரிக்கெட், ஃபுட்பால் போன்றவற்றை ஒளிபரப்பலாம். அதேபோல, தமிழகத்திலும் கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளை திரையரங்குகளில் ஒளிபரப்ப அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்.

திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் அதிக அளவில் வருவதை ஊக்கப்படுத்த சிறு படங்களுக்கான அனுமதிச்சீட்டு விலையை குறைப்பது குறித்து தயாரிப்பாளர்களும் பேசி முடிவெடுப்போம். சிறிய வரவு செலவுத் திட்டம் படங்களுக்கு திரையரங்குகள் ஒதுக்க தயாராக இருக்கிறோம். ஆனால் சிறு படங்களை பார்க்க மக்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. மொத்தம் 1168 திரையரங்குகள் தமிழகத்தில் உள்ளன. சில திரையரங்குகளில் மட்டும் அதிக கட்டணம் வசூலிப்பது புகார் உள்ளது. ஆனால் மற்ற திரையரங்குகளில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது.

ஓர் ஆண்டுக்கு 250 படம் முதல் 300 படங்கள் தமிழகத்தில் வெளியாகிறது.பல நூறு கோடி வசூல் ஆனதாக சில படங்களில் கூறுவது மிகைப்படுதல்தான். அவர்கள் அப்படி மிகைப்படுத்தி கூறுவது விளம்பரமாக நினைக்கிறார்கள். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததற்கு வாழ்த்துகள். எவ்வளவு நல்ல நடிகர் நடித்து இருந்தாலும் நல்ல கதை இருந்தால் தான் படம் ஓடுகிறது” என்றார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »