Press "Enter" to skip to content

சிறந்த பேட்ஸ்மேன்களில் தெண்டுல்கருக்கு 5-வது இடம் வழங்கிய வாசிம் அக்ரம்

தனக்கு எதிராக விளையாடிய சிறந்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் 5-வது இடம் வழங்கியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், முன்னாள் கேப்டனுமான வாசிம் அக்ரம் 104 டெஸ்டுகளில் 414 விக்கெட்டுகளும், 356 ஒரு நாள் போட்டிகளில் 502 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார். இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் உலகின் தலைச்சிறந்த பவுலர்களில் ஒருவராக வலம் வந்தார்.

54 வயதான வாசிம் அக்ரமிடம், அவருடன் இணைந்து மற்றும் எதிராக விளையாடிய வீரர்களில் இருந்து சிறந்த டாப்-5 பேட்ஸ்மேன்களை வரிசைப்படுத்தும்படி யூடியுப் மூலம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்டது.

தனது பட்டியலில் முதலிடத்தை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் அதிரடி வீரர் விவியன் ரிச்சர்ட்சுக்கு வழங்கினார். அவரது கணிப்பில் முன்னாள் வீரர்கள் மார்ட்டின் குரோவ் (நியூசிலாந்து) 2-வது இடமும், பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்) 3-வது இடமும், இன்சமாம் உல்-ஹக் (பாகிஸ்தான்) 4-வது இடமும், சச்சின் தெண்டுல்கர் (இந்தியா) 5-வது இடமும் பெற்றனர்.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து எண்ணற்ற சாதனைகளை படைத்தவரான சச்சின் தெண்டுல்கரை அவர் 5-வது இடத்துக்கு ஓரங்கட்டியதை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

அதே சமயம் தெண்டுல்கருக்கு பின்வரிசை வழங்கியது குறித்து வாசிம் அக்ரம் அளித்த விளக்கத்தில், ‘‘இந்த வரிசையில் நான் தெண்டுல்கரை பின்னால் வைத்திருப்பதற்கு காரணம், அவருக்கு எதிராக நான் 10 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடவில்லை. நானும், வக்கார் யூனிசும் அவருக்கு எதிராக 10 ஆண்டுகளாக பந்து வீசவில்லை. தெண்டுல்கர் தனது 16-வது வயதில் 1989-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு வந்து விளையாடினார். அதன் பிறகு அவருக்கு எதிராக பந்து வீசும் வாய்ப்பு 1999-ம் ஆண்டில்தான் கிடைத்தது.

சார்ஜாவில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட்டில் அவருக்கு பந்து வீசினேன். ஆனால் டெஸ்ட் போட்டி வித்தியாசமானது. கிரிக்கெட்டில் அவர் சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு பவுலராக நான் உச்சத்தில் இருந்தபோது, அவருக்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால்தான் அவரை மதிப்பிடுவது எனக்கு கடினமாக இருக்கிறது’ என்றார்.

விவியன் ரிச்சர்ட்ஸ் குறித்து கூறுகையில், ‘‘ரிச்சர்ட்சின் தனித்துவமான பேட்டிங் தொழில்நுட்பம், ரசிகர்களை வசீகரிக்கும் திறனுக்கு நிகர் வேறுயாரும் கிடையாது. கிரிக்கெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் அவரும் ஒருவர். 1980-களின் மத்தியிலும், 1990 முதல் 2000-ம் ஆண்டு வரையிலும் எல்லா சிறந்த வீரர்களுக்கு எதிராகவும் நான் விளையாடி இருக்கிறேன். அவர்களில் விவியன் ரிச்சர்ட்ஸ் உலகத் தரம் வாய்ந்த வீரர்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »