Press "Enter" to skip to content

2011 உலக கோப்பையில் சூதாட்டப் புகார்: இலங்கை முன்னாள் மந்திரி மீது ஜெயவர்தனே பாய்ச்சல்

2011-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையை நாங்கள் பணத்திற்காக விற்று விட்டோம் என்ற முன்னாள் மந்திரியின் குற்றச்சாட்டுக்கு ஜெயவர்தனே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கபில்தேவ் தலைமையில் இந்தியா முதல் முறையாக 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு மகேந்திர சிங் டோனி இந்திய அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்தார். 

2011-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த போட்டியில் அவரது அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தியது. இந்த நிலையில் 2011-ம் ஆண்டு மும்பையில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சூதாட்டம் (மேட்ச் பிக்சிங்) நடந்ததாக இலங்கை முன்னாள் விளையாட்டு மந்திரி அலுத்காமகே தற்போது குற்றம்சாட்டி உள்ளார். 

2011 உலக கோப்பை இறுதி போட்டியில் நாங்கள் பணத்துக்காக கோப்பையை விற்று விட்டோம். அப்போது நான் விளையாட்டுத்துறை மந்திரியாக இருந்தேன். இந்த விவகாரத்தில் கிரிக்கெட் வீரர்களின் பெயரை உள்ளே இழுக்க நான் விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இலங்கை முன்னாள் விளையாட்டு மந்திரியின் இந்த குற்றச்சாட்டுக்கு ஜெயவர்தனே கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவரது இந்த குற்றச்சாட்டு அபத்தானது என்று பாய்ந்துள்ளார். 

இது தொடர்பாக ஜெயவர்தனே தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் தேர்தல் வர இருக்கிறது. அதற்காக இப்போதே சர்க்கஸை தொடங்கி விட்டார்கள். சூதாட்டத்தில் யார் ஈடுபட்டார்கள் என்பதற்கான பெயர் விவரங்களையும், ஆதாரங்களையும் அவர் வெளியிட வேண்டும்.

இவ்வாறு ஜெயவர்தனே அவர் கூறினார்.

ஜெயவர்தனே இறுதிப் போட்டியில் சதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் அந்த போட்டியின் கேப்டனாக இருந்த சங்ககராவும் ஆதாரங்களை கொடுக்க வேண்டும் என்று இலங்கை முன்னாள் விளையாட்டு மந்திரியை விமர்சித்துள்ளார்.

இலங்கையில் ஆகஸ்டு 5-ந்தேதி தேர்தல் நடக்கிறது. அலுக்காமகே தற்போது காபந்து மந்திரியாக இருக்கிறார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »