Press "Enter" to skip to content

ஆக்கி இந்தியா தலைவர் பதவியை ராஜினாமா செய்தார், முஸ்தாக் அகமது

ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் பதவியை முகமது முஸ்தாக் அகமது நேற்று ராஜினாமா செய்தார்.

புதுடெல்லி:

ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவராக பீகாரை சேர்ந்த முகமது முஸ்தாக் அகமது கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவி காலம் 2022-ம் ஆண்டு செப்டம்பர் வரை உள்ளது. அவர் ஏற்கனவே 2010 முதல் 2014-ம் ஆண்டு வரை பொருளாளராகவும், 2014 முதல் 2018-ம் ஆண்டு வரை பொதுச்செயலாளராகவும் இருந்தார். ஆக்கி இந்தியா அமைப்பில் அவர் தொடர்ந்து 3-வது முறையாக பதவி ஏற்றது சர்ச்சையை கிளப்பியது. 

தேசிய விளையாட்டு கொள்கை விதிமுறையின்படி தேசிய விளையாட்டு சம்மேளன நிர்வாகிகள் தொடர்ச்சியாக 2 முறைக்கு மேல் பதவி வகிக்கக்கூடாது. இரண்டு முறை தலா 4 ஆண்டு காலம் பதவி வகித்த பிறகு ஒரு முறை இடைவெளி விட்டு தான் மீண்டும் பொறுப்புக்கு வர முடியும். தேசிய விளையாட்டு கொள்கையின் பதவி கால வழிகாட்டுதல் விதிமுறையை மீறி ஆக்கி இந்தியா தலைவராக தேர்வான முகமது முஸ்தாக் அகமதுவை அந்த பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் சமீபத்தில் உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் பதவியை முகமது முஸ்தாக் அகமது நேற்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா, ஆக்கி இந்தியாவின் அவசர செயற்குழு கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவருக்கு பதிலாக சீனியர் துணைத்தலைவராக இருந்த மணிப்பூரை சேர்ந்த ஞானேந்திர நிகோம்பாம் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »