Press "Enter" to skip to content

இந்திய அணியில் ரோகித் சர்மாவை சேர்க்காதது ஆச்சரியம் அளிக்கிறது – ஷேவாக் வேதனை

இந்திய அணியில் ரோகித் சர்மாவை சேர்க்காதது ஆச்சரியம் அளிப்பதாக இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் கருத்து தெரிவித்துள்ளார்

புதுடெல்லி:

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது காலில் காயமடைந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டனும், இந்திய அணியின் துணை கேப்டனுமான ரோகித் சர்மா அவசரம் காட்டாமல் நன்றாக குணம் அடைந்த பிறகு களம் திரும்ப வேண்டும் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி ஆலோசனை தெரிவித்து இருந்தனர். இதற்கிடையே தான் காயத்தில் இருந்து குணமடைந்து உடல்தகுதியை எட்டிவிட்டதாக கூறிய ரோகித் சர்மா நேற்று முன்தினம் நடந்த ஐதராபாத்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் களம் இறங்கி விளையாடினார். அவரது காயம் தீவிரமானது என்று கூறிதான் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் அவர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இப்போது ஐ.பி.எல். போட்டியில் ஆடுவது அவரது காயத்தன்மை குறித்து பல்வேறு சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் கருத்து தெரிவிக்கையில், ‘ரோகித் சர்மாவின் காயத்தின் நிலை குறித்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. தேர்வு குழுவில் அவர் அங்கம் வகிக்காவிட்டாலும் கூட அணியை தேர்வு செய்வதற்கு முன்பாக ரவிசாஸ்திரியிடம் ஆலோசித்து அவரது கருத்தை நிச்சயம் கேட்டு இருப்பார்கள். ரோகித் சர்மா உடல் தகுதியுடன் இல்லை என்று கிரிக்கெட் வாரியம் நினைத்தாலும் அவரை அணியில் வைத்து கொண்டு அவரது உடல் தகுதி முன்னேற்றம் குறித்து கண்காணித்து பிறகு முடிவு எடுத்து இருக்கலாம். ஐ.பி.எல். அணிக்காக விளையாட தயாராக இருக்கும் ஒரு வீரரை நாட்டு அணிக்காக தேர்வு செய்யாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த தவறான நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது. ரோகித் சர்மாவை இந்திய அணியில் வைத்து இருக்க வேண்டும்’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »