Press "Enter" to skip to content

கோபா அமெரிக்க கால்பந்து – அர்ஜென்டினா வெற்றி 3-0 என்ற கோல் கணக்கில் ஈக்வடாரை தோற்கடித்தது

அர்ஜென்டினாவின் வெற்றிக்கு கேப்டனும், உலகின் தலைசிறந்த வீரருமான லியோனல் மெஸ்சி முக்கிய காரணமாக இருந்தார். அவரது ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது.

கொய்னியா:

47-வது கோபா அமெரிக்கா கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இதன் கால்இறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கியது.

பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் சிலியையும், பெரு பெனால்டி ஷூட்டில் பராகுவேயையும் தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்று இருந்தன.

இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு நடந்த கடைசி கால்இறுதியில் அர்ஜென்டினா- ஈக்வடார் அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

அர்ஜென்டினாவின் வெற்றிக்கு கேப்டனும், உலகின் தலைசிறந்த வீரருமான லியோனல் மெஸ்சி முக்கிய காரணமாக இருந்தார். அவரது ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. முதல் 2 கோல் அடிக்க அவர் உதவியாக இருந்தார். 3-வது கோலை அவர் அடித்தார்.

40-வது நிமிடத்தில் ரோட்ரிக்கோ டி பவுலும், 84-வது நிமிடத்தில் மார்டினசும், 93-வது நிமிடத்தில் பிரீ கிக் மூலம் மெஸ்சியும் கோல் அடித்தனர். இந்த ஆட்டத்தில் ஈக்வடார் வீரர் ஹின்கேப், 92-வது நிமிடத்தில் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

அர்ஜென்டினா அரை இறுதியில் கொலம்பியாவுடன் மோதுகிறது. முன்னதாக நடந்த கால் இறுதியில் கொலம்பியா பெனால்டி ஷூட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் உருகுவேயை தோற்கடித்தது. ஆட்டத்தின் முடிவிலும், கூடுதல் நேரத்திலும் கோல் விழாததால் பெனால்டி ஷூட் கடை பிடிக்கப்பட்டது.

பிரேசில்-பெரு அணிகள் மோதும் முதல் அரை இறுதி 6-ந்தேதியும், அர்ஜென்டினா- கொலம்பியா மோதும் 2-வது அரை இறுதி 7-ந்தேதியும் நடக்கிறது.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »