Press "Enter" to skip to content

தென்ஆப்பிரிக்காவில் கோட்டைவிட்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கெட்டியாக பிடித்த வெங்கடேஷ் அய்யர்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வெங்டேஷ் அய்யர் தனது திறமையை நிரூபித்தார்.

ஐ.பி.எல். 2021 பருவத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்களில் ஒருவர் வெங்கடேஷ் அய்யர். மிதவேக பந்து வீச்சுடன் சிறப்பாக மட்டையாட்டம் செய்ததால் இந்திய அணியில் வெங்கடேஷ் அய்யருக்கு இடம் நிச்சயம் என கிரிக்கெட் விமர்சகர்கள் உறுதியாக தெரிவித்தனர்.

இந்திய அணி டிசம்பர்- ஜனவரியில் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மூன்றிலும் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது இந்திய அணி. முதல் ஒருநாள் போட்டியில் வெங்கடேஷ் அய்யர் அறிமுகம் ஆனார். அவர் 7 பந்தில் 2 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 2-வது போட்டியில் 22 ஓட்டங்கள் அடித்தாலும் 33 பந்துகளை எதிர்கொண்டிருந்தார். இதனால் 3-வது போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதனால் மீண்டும் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்காது என யூகிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெறாத வெங்கடேஷ் அய்யருக்கு, மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இடம் கிடைத்தது.

இந்த முறை எப்பாடியாவது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியில் நிரந்தரமாக இடம் பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கினார்.

முதல் போட்டியில் இந்தியா 158 இலக்கை  18.5 சுற்றில் எட்டியது. இதில் சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை துவம்சம் செய்தார். வெங்கடேஷ் அய்யர் ஆட்டமிழக்காமல் 13 பந்தில் 2 பவுண்டரி, 1 சிக்சர் விளாசி முத்திரை பதித்தார்.

2-வது போட்டியில் இந்தியா 13.4 சுற்றில் 106 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது  களம் இறங்கி, 18 பந்தில் 33 ஓட்டங்கள் விளாசி இந்தியா 186 ஓட்டங்கள் எடுக்க உதவியாக இருந்தார்.

நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் இந்தியா 13.5 சுற்றில் 93 ஓட்டங்கள் என்ற நிலையில், சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை துவம்சம் செய்தார். வெங்கடேஷ் அய்யர் 19 பந்தில் 35 ஓட்டங்கள் விளாசி அசத்தினார். இந்த ஜோடி 37 பந்தில் 91 ஓட்டங்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டியில் சொதப்பிய வெங்கடேஷ் அய்யர் டி20-யில் அசத்தியுள்ளார். இதனால் தொடர்ந்து இந்திய டி20 அணியில் அவருக்கு இடம் கிடைக்கலாம். ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பதால், அங்கு மிதவேகப்பந்து வீச்சு எடுபடும் என்பதால் இந்திய அணியில் வெங்கடேஷ் அய்யருக்கு ஒரு இடம் உண்டு என்பதை அடித்து கூறலாம்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »