Press "Enter" to skip to content

மும்பையில் விளையாடுவது எங்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்காது – ரோகித் சர்மா

விரலில் காயமடைந்த சூர்யகுமார் யாதவ் அதில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மேற்கொண்டுள்ளார் என மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.

மும்பை:

10 அணிகள் பங்கேற்கும் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை மறுதினம் (சனிக்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. கொரோனா பரவலால் அதிகமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கும் பொருட்டு இந்த முறை அனைத்து ஆட்டங்களும் மராட்டிய மாநிலத்தில் நடத்தப்படுகிறது. மும்பை, நவி மும்பையில் 55 லீக் ஆட்டங்களும், புனேயில் 15 லீக் ஆட்டங்களும் இடம் பெறுகிறது.

மும்பையில் பெரும்பாலான போட்டிகள் நடப்பதால் உள்ளூர் அணியும், 5 முறை சாம்பியனுமான மும்பை இந்தியன்சுக்கு அது கூடுதல் அனுகூலமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கணினிமய மூலம் பேட்டி அளித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா இது தொடர்பான கேள்விக்கு அளித்த பதில் வருமாறு:-

நீங்கள் ஏலத்தை பார்த்து இருப்பீர்கள். இது கொஞ்சம் புதிய அணி. அணிக்கு நிறைய பேர் புதிதாக வருகை தந்துள்ளனர். அதாவது அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில் 70-80 சதவீதம் பேருக்கு இதற்கு முன்பு மும்பையில் விளையாடிய அனுபவம் கிடையாது. அதனால் மும்பையில் விளையாடுவது எங்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை. தற்போதைய மும்பை அணியில் நான், சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட், இஷான் கிஷன், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மட்டுமே மும்பை மண்ணில் விளையாடி இருக்கிறோம். அதுவும் கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரின் போது மற்ற அணிகள் எல்லாம் மும்பையில் விளையாடிய நிலையில், எங்களுக்கு இங்கு ஒரு ஆட்டத்தில் கூட ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சொல்லப்போனால் நாங்களே இப்போது 2 ஆண்டுகள் கழித்து தான் மும்பையில் விளையாட உள்ளோம். எனவே எங்களுக்கு சாதகம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

விரலில் காயமடைந்த சூர்யகுமார் யாதவ் அதில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மேற்கொண்டுள்ளார். அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். விரைவில் அணியுடன் இணைவார். ஆனால் அவர் தொடக்க ஆட்டத்தில் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற தகவலை உங்களிடம் சொல்ல முடியாது. முடிந்த அளவுக்கு அவரை சீக்கிரம் பெறுவதற்கு முயற்சிக்கிறோம். உடல்தகுதி பெற்று விட்டதற்கான ஒப்புதலை தேசிய கிரிக்கெட் அகாடமி வழங்கியதும் அணியுடன் இணைந்து விடுவார்.

‘மன்கட்’ முறையில் ரன்-அவுட் செய்யப்படுவது அதிகாரபூர்வமாகிறது. அதை நாம் பின்பற்றி தான் ஆக வேண்டும். எனவே பந்துவீச்சு முனை பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். பேட்ஸ்மேன் பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆகும் போது, எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேன் முனை மாறினாலும் கூட புதிதாக வரும் பேட்ஸ்மேன் தான் அடுத்த பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்ற புதிய விதிமுறை வரவேற்கத்தக்கது. இது நல்ல உத்வேகத்துடன் பந்துவீசிக் கொண்டிருக்கும் போது பவுலருக்கு அடுத்த மட்டையிலக்குடையும் வீழ்த்துவதற்கு கூடுதல் வாய்ப்பாக அமையும். அது மட்டுமின்றி எதிரணிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதற்கும் நல்ல வாய்ப்பாக இருக்கும்.

இதே போல் டி. ஆர்.எஸ்.-ன்படி இரு முறை அப்பீல் செய்யலாம் என்ற விதிமுறையும் சிறப்பானது. ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் டி.ஆர்.எஸ்.-ன்படி 2 முறை அப்பீல் செய்யும் போது, அது ஐ.பி.எல். போட்டியிலும் இருக்க வேண்டும். எனவே இது அருமையான முடிவு.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

மும்பை இந்தியன்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சை 27-ந்தேதி சந்திக்கிறது. தொடக்க வீரராக தன்னுடன் இணைந்து இஷான் கிஷன் ஆடுவார் என்றும் ரோகித் சர்மா குறிப்பிட்டார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »