Press "Enter" to skip to content

2 நாள் தொடர் விடுமுறை: ‘டாஸ்மாக்’ கடைகளில் அலைமோதிய மதுபிரியர்கள் கூட்டம்

2 நாள் தொடர் விடுமுறை காரணமாக, டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

சென்னை: 

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை தவிர பிற இடங்களில் ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் இயங்கி வருகின்றது. கொரோனா பரவல் இருந்தாலும், ‘டாஸ்மாக்’ கடைகளில் மட்டும் கூட்டம் குறைந்தபாடு இல்லை. எந்த நேரமும் மது பிரியர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் அன்றைய தினம் மட்டும் ‘டாஸ்மாக்’ கடைகள் அடைக்கப்படுகிறது. எனவே சனிக்கிழமை அன்று ‘டாஸ்மாக்’ கடைகளில் நீண்ட கூட்டம் காணப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் சுதந்திர தினவிழா (இன்று), முழு ஊரடங்கு (நாளை) என ‘டாஸ்மாக்’ கடைகள் தொடர்ந்து 2 நாட்கள் அடைக்கப்படுகிறது. இதையடுத்து நேற்று ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால், மதுபிரியர்கள் விரும்பிய மதுபான வகைகள் கிடைக்கவில்லை. விலை உயர்ந்த மதுபானங்களிலும் குறிப்பிட்ட ரகங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. எனவே தாங்கள் விரும்பிய மதுபான வகைகளை வரிசையாக கேட்ட மதுபிரியர்களுக்கு, ஊழியர்கள் வாயில் இருந்து ‘இல்லை’ என்றே பதில் மட்டுமே வந்தது. ஏற்கனவே குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகம் விற்பனை செய்யப்படுவதாக மது பிரியர்கள் தெரிவித்தனர்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »