பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான பாலாவின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை விளம்பர ஒட்டி வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் பாலா, தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில் இவர் அடுத்ததாக மலையாளத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘ஜோசப்’ என்ற படத்தின் தமிழ் மறுதயாரிப்பை தயாரிக்கிறார்.
இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை விளம்பர ஒட்டியை நடிகர் சிவகார்த்திகேயன், இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்திற்கு ‘விசித்திரன்’ என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது.
இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் ஆர்கே. சுரேஷ், பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். பத்மகுமார் இயக்கி உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Source: Malai Malar