Press "Enter" to skip to content

மிருகவதை தடுப்பு விதிகளில் திருத்தம் : மத்திய அரசுக்கு சுப்ரீம் நீதிமன்றம் அறிவுறுத்தல்

கால்நடைகள் பறிமுதலுக்கு வகை செய்யும் மிருகவதை தடுப்பு விதிகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் அல்லது திரும்பப்பெற வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லி:

மிருகவதை தடுப்பு சட்டம் 1960-ன் கீழ் மிருகவதை தடுப்பு விதிகளை மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு வெளியிட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட எருமை வியாபாரிகள், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மிருகவதை தடுப்பு விதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கால்நடைகள் கட்டாயப்படுத்தப்பட்டு கோசாலைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், பறிமுதல் செய்யப்படும் கால்நடைகளை நம்பியே தங்கள் வாழ்வாதாரம் உள்ள நிலையில், மிருகவதை தடுப்பு விதிகள் மிருகவதை தடுப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளதாகவும் அவர்களது மனுவில் தெரிவிக்கப்பட்டது.

அந்த மனுவை சுப்ரீம் நீதிமன்றம் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசு நிலைப்பாட்டைத் தெரிவிக்க சுப்ரீம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது எருமை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் மூத்த வக்கீல் சஞ்சய் ஹெக்டே ஆஜராகி, இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடைபெற்ற விசாரணையின்போது மத்திய அரசின் நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்க வேண்டும் என வாதிட்டார்.

மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜெயந்த் கே சூட் ஆஜராகி, கால்நடைகள், விலங்குகளுக்கு எதிரான சித்ரவதைகள் அதிகரித்து வருகின்றன. அதனால், கால்நடைகள் பாதுகாப்பு விதிகள் குறித்த அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

அதற்கு தலைமை நீதிபதி போப்டே, கால்நடைகள், விலங்குகள் மக்களின் வாழ்வுக்கு ஆதாரமாக இருந்துவருகின்றன. இங்கு பூனைகள், நாய்கள் குறித்து விவாதிக்கவில்லை. கால்நடைகளைச் சார்ந்து மக்கள் வாழ்ந்து வருவதால், மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் தண்டிக்கப்படும் முன்னரே அவரது கால்நடைகள், விலங்குகளை பறிமுதல் செய்யக்கூடாது. கால்நடைகள் பாதுகாப்பு விதிகள் முரணாக உள்ளன. அந்த விதிகளில் திருத்தம் மேற்கொள்ளுங்கள் அல்லது அதற்கு தடைவிதிக்க வேண்டி வரும் என தெரிவித்தார்.

அப்போது ஜெயந்த் கே சூட், இந்த விவகாரத்தில் மத்திய அரசிடம் கருத்துகள் கேட்டு தெரிவிக்க வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 11-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »