Press "Enter" to skip to content

இந்திய தேயிலைக்கு எதிராக வெளிநாட்டு சதி – பிரதமர் மோடி

இந்திய தேயிலைக்கு எதிராக வெளிநாடுகளில் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

திஸ்பூர்:

அசாம் மாநிலத்தில் இன்னும் 3 மாதத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அசாம் மாநிலத்துக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார். கடந்த 2 வாரங்களில் அவரது இரண்டாவது அசாம் பயணம் இதுவாகும். 

தேகியாஜுலி நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் விஸ்வநாத், சாரைதியோ ஆகிய மாவட்டங்களுக்கான 2 மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அதை சொன்னால் சிலர் துடுக்குத்தனம் என்று கருதலாம். அது என்னவென்றால், ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழியைப் பயிற்று மொழியாக கொண்டு படிக்கும்வகையில், குறைந்தபட்சம் தலா ஒரு மருத்துவ கல்லூரியும், ஒரு தொழில்நுட்ப கல்லூரியும் நிறுவ வேண்டும் என்பதுதான்.

அசாம் மாநிலத்தில் மே மாதம் புதிய அரசு அமைந்த பிறகு அதற்கான பணிகள் தொடங்கும். இந்த பணி மெதுவாக தொடங்கினாலும், அதை யாரும் தடுக்க முடியாது. இதன்மூலம் உட்புற பகுதிகளுக்கும் மருத்துவ வசதிகள் கிடைப்பதுடன், மக்களின் உடல்நல பிரச்சினைகளை தாய்மொழியிலேயே பேசி புரிந்து கொள்ளக்கூடிய நிறைய மருத்துவர்கள் கிடைப்பார்கள்.

அசாம் மாநிலத்தின் உட்புற பகுதிகளில் சுகாதார வசதிகளே இல்லாத நிலை காணப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் வந்துவிட்டன. மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 725-ல் இருந்து 1,600 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், சுதந்திரம் பெற்றதில் இருந்து 2016-ம் ஆண்டுவரை வெறும் 6 மருத்துவ கல்லூரிகளே இங்கு இருந்தன.

தலைநகர் கவுகாத்தி அருகே எய்ம்ஸ் மருத்துவமனை வரப்போகிறது. அதன்பிறகு கவுகாத்தி நகரம், ஒட்டுமொத்த வடகிழக்கு பகுதிகளுக்கும் மருத்துவ மையமாக மாறிவிடும். கொரோனா தாக்கம், நாட்டுக்கு சுகாதார சவால்களை முன்வைத்தது. ஆனால், நாம் அதை முறியடித்துள்ளோம். நமது கொரோனா தடுப்பூசி போடும் பணிகள், உலக நாடுகளின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு மருத்துவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவை அவதூறு செய்ய நினைப்பவர்கள், இந்திய தேயிலையையும் விட்டு வைக்கவில்லை. இந்திய தேயிலை பற்றி அவதூறு செய்ய வெளிநாடுகளில் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆவணங்கள் வெளியாகி உள்ளன. அசாமின் வளர்ச்சிக்கும், இ்ங்குள்ள தேயிலை தோட்டங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே, இந்த வெளிநாட்டு சதிக்கு அசாம் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »