Press "Enter" to skip to content

நாடு முழுவதும் போதுமான அளவு தடுப்பூசி கிடைப்பதில் அரசு உறுதி – பிரதமர் மோடி தகவல்

நாளுக்கு நாள் புதிய உச்சம் தொடும் வைரசின் வீரியத்தை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

புதுடெல்லி:

நாடு முழுவதும் போதுமான அளவு தடுப்பூசி கிடைக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக ஆளுநர் களுடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி கூறினார்.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் புதிய உச்சம் தொடும் வைரசின் வீரியத்தை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

குறிப்பாக தொற்றில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க பிரதமர் மோடி தனிக்கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறார். இதற்காக அவர் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள், மாநில முதல்-மந்திரிகளுடன் என அடுத்தடுத்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.

இந்த வரிசையில் நேற்று மாநில ஆளுநர் களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களின் ஆளுநர் கள் பங்கேற்று, தங்கள் மாநிலங்களில் பாதிப்பு நிலவரங்களை எடுத்துரைத்தனர்.

இந்த கூட்டத்தில் பேசும்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

10 கோடி தடுப்பூசி டோஸ்கள் என்ற மைல்கல்லை வேகமாக எட்டிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. கடந்த 4 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி திருவிழாவில் இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, புதிய தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

நாடு முழுவதும் போதுமான அளவுக்கு தடுப்பூசி கிடைக்கச்செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது.

கடந்த ஆண்டு வைரசை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் பங்கேற்பு சிறப்பாக இருந்தது. அதை இந்த ஆண்டும் உறுதிப்படுத்த வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் சமூக குழுக்கள், அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இதற்கு ஆளுநர் கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.

மாநில அரசுகளுடன் சமூக நிறுவனங்கள் தடையின்றி ஒத்துழைப்பதை உறுதி செய்ய ஆளுநர் கள் தீவிரமாக செயல்படலாம். தங்கள் சமூக நெட்வர்க் மூலம் உதவூர்தி, வெண்டிலேட்டர்கள், ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களை அதிகரிக்க முடியும்.

தடுப்பூசி, சிகிச்சை போன்றவை தொடர்பான செய்திகளை பரப்பி, ஆயுஷ் தொடர்பான பரிகாரங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். பல்கலைக்கழகங்களில் மாணவர்களுடனான சந்திப்புகள் மூலம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும்.

மக்கள் பங்கேற்பில் ஆளுநர் கள் ஒரு முக்கிய தூணாக இருப்பதுடன், மாநில அரசுகளுடன் இணைந்தும், அரசை வழிநடத்தியும் ஆளுநர் கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் மாநிலங்கள் தேசிய உறுதிப்பாட்டை வலுப்படுத்த முடியும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஹர்சவர்தனும் பங்கேற்றனர்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசும்போது, ‘கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் கடந்த ஆண்டு நாம் கற்றுக்கொண்ட பாடத்தில் மிகவும் முக்கியமானது, இணைந்து செயல்படுவதன் மூலம் தொற்றை ஒழிக்க முடியும் என்பதாகும். அந்தவகையில் நமது அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு குழுவாக இணைந்து செயல்பட வேண்டும்’ என கூறினார்.

மேலும் கடந்த 14 நாட்களாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள புதிய பாதிப்புகளில் 85 சதவீத தொற்றுக்கு காரணமான 10 மாநிலங்களில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »