Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்மி (வைரஸ்): ’சிரமமான காலத்தை கடப்பது எப்படி?’’ – விவரிக்கும் நியூயார்க் மருத்துவ பணியாளர்

வேறெந்த நாட்டை விடவும் அதிக அளவிலான, நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் இருக்கும் நாடாக அமெரிக்கா உள்ளது. உலக ஆரோக்கிய சிக்கலில் முன்னணியில் உள்ள நாடு என்ற விரும்பத்தகாத தனித்துவமும் கிடைத்துள்ளது.

நகரம் முழுக்க இருந்து வரும் மக்களைக் காப்பாற்றும் முயற்சியில், ஒரு நாளுக்கு 16 மணி நேரங்கள் வேலை பார்க்கும் சூழ்நிலையில் அந்தோணி இப்போது உள்ளார். தங்கள் உயிருக்காகவும், குடும்பத்தினருக்காகவும் கவலைப்படும் சகாக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டியதும் அவருடைய பணிப் பொறுப்பில் சேர்ந்து கொண்டுள்ளது.

நியூயார்க்கில் துணை மருத்துவக் குழுவின் தலைவராகவும், நியூயார்க் அவசர மருத்துவ சேவைகள் தீயணைப்புத்துறை அதிகாரிகள் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருக்கும் அந்தோணி, பிபிசியின் அலைஸ் கட்டியுடன் பேசினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை – தன் தொழிலில் மிகவும் சிரமமான நாள் என அவர் குறிப்பிடுகிறார் – நடந்தவை பற்றி அவர் பேசினார்.

முந்தைய நாள் எல்லா அழைப்புகளையும் கவனித்துவிட்டோம் என்ற நிம்மதியில் இரவு நன்றாகத் தூங்கினேன். ஐந்து மணி நேரம் நல்ல தூக்கம். காலையில் எழுந்து குளிக்கும் போது செய்தியைக் கேட்டேன். கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஆனாலும் உலக நாடுகள் உறுதியாக இருந்தன. புரூக்ளின், சன்செட் பூங்காவில் வேலைக்கு நான் தயாராக வேண்டும். 16 மணி நேர ஷிப்டு காலை 6 மணிக்குத் தொடங்கும்.

என் சீருடையை அணிந்து கொண்டு, ரேடியோ கருவியை எடுத்துக் கொண்டு, என் பொருட்களை கிருமி நீக்கம் செய்யும் வேலையைத் தொடங்கினேன். ரேடியோக்களை, வாகனங்களை, சாவிகளை, பைகளை, மற்றும் இதர துணிகளை நாங்கள் துடைக்க வேண்டும். அவற்றின் மீது இந்த வைரஸ் செயல்தன்மையுடன் இருக்கும். எதுவுமே பாதுகாப்பானதல்ல – உங்களுடன் வேலை பார்ப்பவர்களும் தான்.

போரின் போது குண்டு வருவதை பார்ப்பீர்கள், எதிரி எங்கே இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். இந்தப் போரில் கண்ணுக்குத் தெரியாத குண்டுகளை எதிர்த்துப் போரிட வேண்டும் – நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரும் உங்களைத் தாக்கும் துப்பாக்கிக் குண்டுகளைப் போன்றவர்கள் தான்.

அன்று காலை 6.02 மணிக்கு நான் பணிக்குச் சென்று பதிவு செய்தேன். காலையில் சாப்பிடுவதற்கு எனக்கு கொஞ்சம் உணவு கிடைத்தது. காலை 7 மணிக்கு ரேடியோ பரபரப்பாகிவிட்டது. நள்ளிரவில் இருந்து ஏற்கெனவே 1,500க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துவிட்டன. இருதய செயலிழப்பு நோயாளியை கவனிக்கும் பணி எனக்கு ஒப்படைக்கப்பட்டது.

குழுவின் தலைவர் என்ற வகையில் நான் மருத்துவ மற்றும் அவசர தேவை மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் குழுவுடன் சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவி செய்து, தேவையான கருவி வசதிகளை செய்து தர வேண்டும். தினமும் 6,500க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருவதால், இப்போதெல்லாம் நிறைய கருவிகள் இருப்பதில்லை.

உலகில் மிகவும் பரபரப்பாக இருக்கும் அவசரநிலை மருத்துவ சேவைகள் நடைமுறை (இ.எம்.எஸ்.) நியூயார்க் நகரில் மட்டும் தான் இருக்கிறது. தினமும் சராசரியாக 4,000 பேரை கவனிக்க வேண்டியுள்ளது. சில சமயங்களில் வெப்ப அலை அல்லது சூறாவளி போல எண்ணிக்கை அதிகரிக்கலாம். ஆனால் இதற்கு முன்பு மிகவும் பரபரப்பாக இருந்தது 9/11 சம்பவத்தின் போது தான். அன்றைய நாளில் எங்களுக்கு 6,400 அழைப்புகள் வந்தன. அது நின்றுவிடவில்லை. ஒவ்வொரு நாளும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது.

மார்ச் 20 ஆம் தேதி வாக்கில் எண்ணிக்கை அதிகரித்ததைக் கவனித்தோம். 22ஆம் தேதி வெடிகுண்டு வெடித்தது போல எண்ணிக்கை உயர்ந்தது.

அந்த அளவுக்கு எண்ணிக்கை உயர்வை நாங்கள் பார்த்தபோது, அதைக் கையாள்வதற்கு ஏற்ற வகையில் வசதிகள் செய்திருக்கவில்லை. “நம்மிடம் இருக்கும் வசதிகளை வைத்துக் கொண்டு இதை நாம் எப்படி கையாளப் போகிறோம்?’ என்பது போலத்தான் இருந்தோம். `ஆனது ஆகட்டும்’ என்ற நிலையில் இருந்தோம்.

இப்போதுள்ள நிலையில், இ.எம்.எஸ். துறை அலுவலர்களில் 20 சதவீதம் பேர் நோயுற்றுள்ளனர். நிறைய பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிலர் ஐ.சி.யூ.வில் உள்ளனர். இருவர் வென்டிலேட்டர்களில் இருக்கிறார்கள். இந்த நோய் அறிகுறிகளுடன் 700க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பு வளையத்தில் இருக்கிறார்கள்.

நாங்கள் அந்த வீட்டுக்கு சென்று சேர்ந்தோம். எனது முகக்கவச உறை, கவுன், கையுறைகளைப் போட்டுக் கொண்டேன்.

அங்கு ஓர் ஆண் இருந்தார். ஐந்து நாட்களாக அவருக்கு காய்ச்சல் இருமல் இருப்பதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர். நாங்கள் சி.பி.ஆர். தொடங்கினோம். அவர் சுவாசிப்பதற்காக தொண்டை வழியே ஒரு குழாயை மருத்துவ அலுவலர்கள் செருகியதை கண்காணித்தேன். நரம்பு வழியே மருந்து செலுத்தும் சிகிச்சையும் தொடங்கியது.

நாங்கள் 30 நிமிட நேரம் சிகிச்சை அளித்தோம். ஆனால் அவர் இறந்துவிட்டார். குழுவினர் திரும்ப வாகனத்துக்கு வருவதை நான் உறுதி செய்தேன். முதலில் எல்லாவற்றையும் கிருமிநீக்கம் செய்தோம். புறப்படுவதற்கான பட்டனை நான் அழுத்தினேன்.

20 நிமிடங்களுக்குப் பிறகு, மற்றொரு இருதய செயலிழப்பு நோயாளி பற்றி தகவல் வந்தது. அதே அறிகுறிகள், அதே சிகிச்சை நடைமுறைகள், முடிவும் அதே மாதிரி. இந்த வைரஸ் நுரையீரலைத் தாக்குகிறது: உங்கள் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில்லை. எனவே மற்ற செயல்பாடுகள் செயல் இழக்கத் தொடங்கி, பின்னர் உறுப்பு செயலிழப்பு நிகழ்கிறது.

பட்டனை அழுத்தினோம். வேறொரு நோயாளி பற்றி தகவல் வந்தது.

அது முடிந்ததும் பட்டனை அழுத்த, இன்னொருவர்.

நாங்கள் பார்த்தவற்றில் ஒருவர் மட்டுமே கோவிட்-19 நோயாளி அல்ல என்று கருதுகிறேன். ஏனெனில் அது தற்கொலை. நினைத்துப் பாருங்கள்: நான் அங்கே இருந்தேன். எனக்கு ஆறுதலாக இருந்தது. இவர் இறந்துவிட்டார், இது தற்கொலை. அது வழக்கமானது தான் என நான் ஆறுதல்பட்டேன்.

இப்போது மணி காலை 11. இருதய செயலிழப்பு நோயாளிகள் ஆறு பேரை பார்த்தாகிவிட்டது. சாதாரண நாட்களில், மருத்துவக் குழுவினர் வாரத்திற்கு, இதுபோன்ற இரண்டு அல்லது மூன்று நோயாளிகளை பார்ப்பார்கள். உங்களுக்கு வேலை அதிகம் உள்ள நாட்கள் இருக்கும். ஆனால் ஒருபோதும் இப்படி கிடையாது, ஒருபோதும் இருந்ததில்லை.

எனக்கு ஏழாவது அழைப்பு வந்தது.

நாங்கள் நடந்து சென்றோம். அங்கே ஒரு பெண் தரையில் அமர்ந்திருந்தார். தனது தாயாருக்கு அவர் சி.பி.ஆர். செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். தன் தாயார் சுவாசிக்க முடியவில்லை என்றும் “அறிகுறிகள் உள்ளன” என்றும் அந்தப் பெண் என்னிடம் கூறினார்.

அவரைக் காப்பாற்றும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டோம். மருத்துவ அலுவலர்கள் தங்கள் பணியை செய்தபோது, நான் அவருடைய மகளுடன் பேசினேன். என்ன நடந்தது என்பதை அவர் விளக்கினார். கடந்த சில தினங்களாக தன் தாயாருக்கு உடல் நலக் குறைவு இருந்ததாக அவர் தெரிவித்தார். தங்களால் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள முடியவில்லை என்றும், ஆனால் அவருக்கு “அது” இருப்பதாக நினைப்பதாகவும் கூறினார்.

“இங்கே குடும்பத்தில் நீங்கள் மட்டும் தான் இருக்கிறீர்களா?” என்று நான் கேட்டேன். ஆமாம் என்று பதில் அளித்த அவர், நீங்கள் வியாழக்கிழமை வந்து என் தந்தைக்கு சிகிச்சை அளித்தீர்கள் என்றும் தெரிவித்தார். அவருக்கும் இந்த அறிகுறிகள் இருந்தன, அவர் இறந்துவிட்டார் என்றும் குறிப்பிட்டார்.

மரத்துப்போன நிலையில் அவர் இருந்தார்.

அடுத்த அறைக்கு நான் சென்றேன். உயிர் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளதாக மருத்துவ அலுவலர்கள் கூறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் சென்றேன். அவர் கண்கள் மேல்நோக்கி இருந்தன. 17 ஆண்டு கால அனுபவத்தில் அதன் அர்த்தம் எனக்குத் தெரியும். அவர் இறந்துவிட்டதாக மருத்துவ அலுவலர்கள் கூறினர்.

எனவே, மூன்று நாட்கள் இடைவெளியில் அவருடைய பெற்றோர் இருவரும் இறந்துவிட்டதாக நான் அந்த மகளிடம் சொல்லியாக வேண்டும்.

அவருடைய தந்தையின் உடலே இன்னும் அடக்கம் செய்யப்படவில்லை. எனவே இந்தப் பெண்மணி இரட்டை இறுதிச் சடங்குகள் செய்தாக வேண்டும். அதற்கு இவருக்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். ஏனெனில் இப்போது இறுதிச் சடங்குகள் நடைபெறுவதில்லை.

அதன் பிறகு நான் வெளியே சென்றேன். குளிர்ச்சியான காற்று எனக்கு தேவைப்பட்டது. நாங்கள் ஓரிரு நிமிடம் அங்கு அமர்ந்து எங்களைத் தேற்றிக் கொள்ள முயற்சி செய்தோம். விநோதமாக, அதுபற்றி நாங்கள் அதிகம் விவாதிக்கவில்லை. வழக்கமாக மருத்துவ அலுவலர்கள் அப்படி விவாதிப்பது வழக்கம்.

அடுத்த அழைப்புக்கு நாங்கள் தயாராக வேண்டும். பட்டனை நாங்கள் அழுத்தினோம்.

எங்களுக்கு அடுத்த அழைப்பு வந்தது, அடுத்தது, அதற்கடுத்து இப்படியே போனது. மாலை 6 மணிவாக்கில் நான 10 பேரை பார்த்துவிட்டேன்.

அது ஒரு ஆசியப் பகுதி குடும்பம். தங்கள் அங்கிள் இறந்துவிட்டார் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. நம்பவில்லை என்பதை அவர்களுடைய கண்களில் என்னால் பார்க்க முடிந்தது. நான் ஏதாவது செய்ய வேண்டும், மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். நாங்களே விரும்பினாலும், அப்படி அழைத்துச் செல்ல முடியாது என்று அவர்களிடம் தெரிவித்தேன். உயிர் இருப்பதற்கான அறிகுறி எதுவுமே இல்லாதவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை தருவதில்லை என்று விளக்கினேன்.

“நீங்கள் தான் அவரைக் காப்பாற்ற வேண்டும், நீங்கள் தான் அவரைக் காப்பாற்ற வேண்டும்,” என்று அவர்கள் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அவருடைய இருதயத்தை மீண்டும் செயல்பட செய்ய வைக்க முடியாதா என்று அவருடைய மகன் என்னிடம் கேட்டார்.

முகக்கவச உறை அணிந்திருப்பதில் கஷ்டமான விஷயம் என்னவென்றால், என் முகத்தில் பாதியை அது மறைத்துக் கொள்ளும். நான் பேசுவதை மட்டுமே அவர்களால் கேட்க முடியும். என் முகத்தை அவர்களால் பார்க்க முடிந்திருந்தால், என் உணர்வுகளை அந்தக் குடும்பத்தினர் புரிந்து கொண்டிருக்க முடியும்.

இப்போது அவர்களால் என் கண்களை மட்டுமே பார்க்க முடியும். என் கண்களில் அச்சம், பயம் இருந்தது. எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று இந்தக் குழந்தையை என்னால் சமாதானப்படுத்த முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.

அந்தோணியும் அவருடைய குழுவும்: “நாங்கள் பார்க்கும் விஷயங்களை சில நேரம் எளிதில் மறந்துவிட முடியாது.”

பெற்றோர்கள் இருவரையும் இழந்துவிட்ட மகளின் வீட்டில், மருத்துவ அலுவலர்களுடன் நான் இருக்கிறேன். அவர்கள் வெளியில் வந்து நான் சுவரில் ஒட்டுப் பகுதியில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்கள்.

10 குடும்பங்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை என்று நான் சொல்லியாக வேண்டும்.

குழப்பங்களுடன் நான் அமர்ந்திருந்தேன். என் தொழில் அனுபவத்தில் இதுபோன்ற ஒரு நாளை நான் சந்தித்தது இல்லை. உணர்வு ரீதியாக நான் சோர்ந்துவிட்டேன். உணர்வுகள் அற்றுப் போய்விட்டன.

நாங்கள் பார்க்கும் சில விஷயங்களை எளிதில் மறந்துவிட முடியாது. இதில் இருந்து மக்கள் வேறு மாதிரியாகப் போகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் இருந்து பெரும்பாலான இ.எம்.எஸ். அலுவலர்கள் வெளியில் வருவதற்கு வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது. சிலர் வேண்டுமானால் சூரிய உதயத்தையும், மலர்களையும், தெளிவான தருணங்களையும் ரசிக்கலாம். ஆனால் எங்களில் பெரும்பாலானோருக்கு, கண்களை மூடினால், இந்தக் காட்சிகள் தான் நினைவுக்கு வரும்.

மருத்துவ அலுவலர்கள் என்னைப் பார்த்துவிட்டு, அருகில் வந்து அமர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் என் கைகளைப் பிடித்துக் கொள்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் தேற்றிக் கொள்கிறோம்.

அன்றைய நாளில் ஐந்தாவது இருதய செயலிழப்பு நோயாளி அவர். எங்கள் உணர்வுகள் எப்படி உள்ளது என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். சிறிது நேரம் நாங்கள் அதை உணர்ந்து பார்க்கிறோம். பிறகு வாகனத்தில் ஏறி, மீண்டும் பட்டனை அழுத்துகிறோம்.

இரவு 9.30 மணி. அன்றைய பணி முடிய இன்னும் அரை மணி நேரம் உள்ளது. மற்றொரு இருதய செயலிழப்பு நோயாளி. அதே அறிகுறிகள் – சில நாட்களாகக் காய்ச்சல் மற்றும் இருமல்.

அவருக்கு நாங்கள் சிகிச்சை அளித்தோம். அன்றைய நாளின் 12வது குடும்பத்தினரிடம் போய், எங்களை மன்னித்துவிடுங்கள், இனிமேற்கொண்டு எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று நான் கூற வேண்டியதாயிற்று. ஒருநாளும் இவ்வளவு உடைந்து போனதில்லை. பிறகு நான் வீட்டுக்குச் செல்ல ஆயத்தமானேன்.

நான் தனியாக வாழ்கிறேன், குழந்தைகள் கிடையாது. நான் தனியாக இருப்பதற்காக மகிழ்ச்சி அடைந்தது அந்த ஒரு நாள் மட்டுமே. ஏனெனில் பலரும் அதற்காகத்தான் கவலைப்பட்டார்கள்.

நான் நோயுற்று சாகும்படியான ஒரு வேலையில் நான் சேர்ந்திருக்கிறேன். தங்கள் பாசத்துக்குரியவர் இந்தப் பணியில் நோயுற்று மரணிக்கும் வாய்ப்பு உள்ளது என்று தெரிந்தே அவர்களுடைய குடும்பத்தினர் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், அந்த மரணத்தை தங்களுக்கும் அவர் வீட்டுக்குக் கொண்டு வருவதை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இப்போதைக்கு சிலர் தங்கள் கார்களிலேயே தூங்குவது எனக்குத் தெரியும். ஏனெனில் இந்த வைரஸ் தாக்குதலை தங்கள் குடும்பத்தினருக்கும் ஏற்படுத்திவிட வேண்டாம் என்ற எண்ணம் அவர்களுக்கு உள்ளது.

வேலையின் போது தாங்கள் இறந்துவிட்டால், தங்கள் குடும்பத்தினரை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று அவர்கள் கவலைப்பட்டது, எனக்கு மிகுந்த அழுத்தத்தைக் கொடுத்தது.

சிகிச்சை அளிப்பதில் நான் 16 ஆண்டு கால அனுபவம் பெற்றிருக்கிறேன். புத்திசத்தைப் பின்பற்றுகிறேன், தியானம் செய்கிறேன். ஆனால் தொடர்புகளை விடுவித்துக் கொள்வதில் இப்போது எனக்கும் சிரமம் இருக்கிறது. இதுபோன்ற நாட்களில் ஏற்படும் மன அழற்சி உங்களுடனேயே தங்கிவிடுகிறது. மறுநாளும் அடுத்த 16 மணி நேர வேலைக்கு நீங்கள் செல்ல வேண்டும், மீண்டும் இதேபோல நிகழும் என்பது உங்களுக்குத் தெரியும்.

மருத்துவ அலுவலர்கள் இந்தத் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இந்த முறை இல்லாவிட்டால், அடுத்தவரை நாம் காப்பாற்றிவிடலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். மக்களின் உயிரைக் காப்பாற்றுவதில் நாங்கள் நல்ல சேவையாற்றுவோம். ஆனால், இந்த வைரஸ் தாக்குதலைப் பொருத்த வரை நிலைமை, எங்களுக்கு எதிரானதாக இருக்கிறது. இதற்கு எதிராகப் போராடுவதில் நம்பிக்கை குறைந்து கொண்டே போகிறது. எங்கள் சக பணியாளர்களையும் தாக்கும், கண்ணுக்குத் தெரியாத எதிரியாக இது இருக்கிறது. இப்போதைய நிலையில் நம்பிக்கை தகர்ந்து கொண்டிருக்கிறது.

நகரம் முழுக்கவே இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »