Press "Enter" to skip to content

அசாமில் பூர்வகுடி முஸ்லிம்களை கணக்கெடுப்பதால் வங்காளி முஸ்லிம்கள் அஞ்சுவது ஏன்? – பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், DILIP SHARMA/BBC

“நான் பெங்காலி வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம். சிலர் எங்களை மியான் முஸ்லிம்கள் என்றும் அழைக்கிறார்கள். அரசாங்கம் யாரை பூர்வகுடி முஸ்லிம்கள் என்று கருதுகிறது என்று எனக்குத் தெரியவில்லை? கிராமத்தைச் சேர்ந்த சிலர் கோரியா-மோரியா முஸ்லிம்களின் கணக்கெடுப்புப் பற்றி பேசுகிறார்கள். இவை அனைத்தும் முஸ்லிம்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.”

இப்படித்தான் தங்களின் தற்போதைய நிலையை விவரித்தார், 60 வயதான முகமது உமர் அலி.

அசாமின் போடோலாந்து பகுதியில் உள்ள தமுல்பூர் மாவட்டத்தின் தொலைதூர கிராமமான தேபர்கானில் வசிக்கும் முகமது உமர் அலி, கட்டுமானத் தொழிலாளியாகப் பணியாற்றி எட்டு பேர் கொண்ட தன் குடும்பத்தை நடத்தி வருகிறார்.

ஆனால், சமீப நாட்களாக, அவரது கிராமத்தில் ‘சுதேசிகள்’ அதாவது ‘பழங்குடி முஸ்லிம்கள்’ பற்றிய சமூக-பொருளாதார கணக்கெடுப்பு தொடர்பான விவாதம் அவரைக் கவலையடையச் செய்துள்ளது.

“உண்மையில், அரசாங்கம் எங்களை என்ன செய்ய விரும்புகிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. முன்பு, எங்கள் பெயர்களை என்ஆர்சி-யில் (NRC) சேர்க்க நாங்கள் ஓட வேண்டியிருந்தது. இப்போது மீண்டும் சுதேசி என்ற பெயரில் முஸ்லிம்களிடம் இருந்து ஆவணங்களைக் கேட்கிறார்கள். இது என்ன என்று எங்களுக்குத் தெரியவில்லை,” என்றார் அவர்.

தொடர்ந்து பேசிய அவர்,”ஆவணங்கள் சரிபார்க்கப்படும் என்று நாங்கள் பயப்படவில்லை, ஆனால் ஒவ்வொரு முறையும் நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய தொந்தரவின் அளவைக் கண்டுதான் நாங்கள் பயப்படுகிறோம். என்ஆர்சி நேரத்தில், நான் எனது வேலையை விட்டுவிட்டு எனது ஆவணங்களை சரிபார்க்க கிராமத்திலிருந்து 80 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டியிருந்தது.

“இப்போது எங்கள் வாழ்க்கை இந்த ஆவணங்களை மட்டுமே சார்ந்துள்ளது. வெள்ளத்தின் போது உயிரைக் காப்பாற்றுவதை விட இங்குள்ள மக்கள் தங்கள் ஆவணங்களைச் சேமிக்க முயற்சி செய்கிறார்கள்,” என்றார் முகமது உமர் அலி.

அஸ்ஸாம் முஸ்லிம்கள்

பட மூலாதாரம், DILIP SHARMA/BBC

‘பூர்வகுடி முஸ்லிம்கள்’ யார்?

அசாம் அரசாங்கத்தின் அமைச்சரவை சமீபத்தில் மாநிலத்தின் பூர்வகுடி முஸ்லிம் மக்களின் சமூக-பொருளாதார கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்தது. அம்மாநில ஆளும் பாஜக அரசு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து சமூகங்களை ‘பூர்வகுடிஅசாமிய முஸ்லிம்கள்’ என்று அங்கீகரித்துள்ளது.

கோரியா, மோரியா, ஜோலா, தேசி மற்றும் சையத் ஆகிய முஸ்லிம் சமூகங்கள் பூர்வீக முஸ்லிம்களாக அசாம் அரசாங்கம் அங்கீகரித்திருந்தது. அவர்களில், கோரியா, மோரியா, ஜோலா சமூகங்கள் தேயிலைத் தோட்டங்களைச் சுற்றி குடியேறினர், அதேசமயம் பூர்வீக முஸ்லிம்களாகவும் இவர்கள் அசாமில் வாழ்கின்றனர்.

நம்மிடம் பேசிய சையத் ஒரு அசாமிய முஸ்லிமாக கருதப்படுகிறார். இந்த ஐந்து சமூகங்களும் அன்றைய கிழக்கு பாகிஸ்தானிலிருந்து (இப்போதைய வங்கதேசம்) குடியேறிய வரலாறு இல்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், இந்த அரசாங்க கணக்கெடுப்பு வெளிவந்த பிறகு, வங்காள வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்கள் மத்தியில் மீண்டும் அச்சம் மற்றும் பதற்றம் நிலவுகிறது. குவஹாத்தியில் இருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேபர்கானில் சுமார் 500 முஸ்லிம் குடும்பங்கள் குடியேறியுள்ளன, அவர்களில் பெரும்பாலானவர்கள் வங்காள வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்கள்.

புத்திமாரி ஆற்றில் வரும் வெள்ளம் இங்குள்ள மக்களின் வீடுகளை பலமுறை நாசமாக்கியுள்ளது. இந்தக் கிராமத்துக்குச் செல்ல, சுமார் இரண்டு கிலோமீட்டர் மண் சாலையைக் கடந்து செல்ல வேண்டும், இது அவர்களின் அன்றாட போராட்டத்தின் சாட்சி.

அசாமில், வங்காள வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்கள் பேச்சுவழக்கில் மியான் என்று அழைக்கப்படுகிறார்கள். அசாமில், மியான் முஸ்லிம்கள் என்றால் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து (தற்போதைய வங்கதேசம்) வந்த முஸ்லிம்கள் என்று அர்த்தம்.

முன்பு சிலர் சாருவா என்றும் சிலர் பொம்பொம்வா என்றும் அழைத்தனர். பின்னர் அவர்களுக்கு மியான் என்ற வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கினர்.

இந்த மியான் முஸ்லிம் மக்களின் வாக்குகள் தனக்கு தேவையில்லை என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறி வருகிறார்.

தேபர்கானில் வசிக்கும் 65 வயதான அவேத் அலியும் இந்த கணக்கெடுப்பைப் பற்றி கவலைப்படுகிறார். “முஸ்லிம்கள் கணக்கெடுப்பின் நோக்கம் தெரியவில்லை. ஆனால், இதெல்லாம் நம்மை சிக்கலில் தள்ளுவதற்காகவே செய்யப்படுகிறது” என்கிறார்.

“நம்முடைய அல்லாஹ் ஒருவனாக இருந்தால் நம்மை இப்படிப் பிரிப்பதில் என்ன பயன்? அரசாங்கத்தின் நோக்கம் என்னவென்று தெரியாதபோது, கவலைப்படுவது நியாயமானது,” என்றார் அவேத் அலி.

மியான் சமூகத்தைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான், பூர்வகுடி முஸ்லிம்களில் கணக்கில் கொள்ளப்படாததால் மிகுந்த கோபத்தில் இருக்கிறார். 52 வயதான முஜிபுர் பிபிசியிடம் பேசுகையில், “நாங்கள் அசாமின் முஸ்லிம்கள், எங்கள் தாய் மொழி அசாமிய மொழி. இன்னும், பழங்குடி முஸ்லிம்களில் எங்களைக் கணக்கிடவில்லை. மியான் முஸ்லிம்களை துன்புறுத்துவதற்காக அரசியல் செய்யப்படுகிறது. அரசாங்கம் என்ஆர்சியை உருவாக்கியது. இப்போது கணக்கெடுப்பு என்ற பெயரில் எங்களை துன்புறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்கிறது,” என்றார்.

கெளரியா சமூகத்தைச் சேர்ந்த 51 வயதான இலேசினி மியான் முஸ்லிம் ஒருவரைத் திருமணம் செய்துள்ளார். ஏழு குழந்தைகளுடன் தேபர்கானில் வசிக்கும் இலேசினி பிபிசியிடம் பேசுகையில், “அரசு என்ன கணக்கெடுப்பு வேண்டுமானாலும் எடுக்கலாம். எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் இருக்கும் நிலையில் நாங்கள் நலமாக இருக்கிறோம். என் கணவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நாங்கள் இப்போது எந்த அரசாங்க சிக்கலிலும் சிக்க விரும்பவில்லை,” என்றார் இலேசினி.

அசாம் முஸ்லிம்கள்

பட மூலாதாரம், DILIP SHARMA/BBC

அசாமில் அரசு எப்படி கணக்கெடுப்பு நடத்தும்?

இந்த ஐந்து முஸ்லிம் குழுக்களையும் பூர்வகுடி முஸ்லிம்களாக அடையாளம் காண அசாம் அரசாங்கம் முன்னதாக ஆறு துணைக் குழுக்களை அமைத்தது. அந்த துணைக் குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் சமூகம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

“பழங்குடி” முஸ்லிம்களின் சமூக-பொருளாதார மதிப்பீட்டை நடத்தும் பொறுப்பை சிறுபான்மை விவகாரங்கள் இயக்குநரகத்திடம் அரசாங்கம் ஒப்படைத்துள்ளது.

இந்த கணக்கெடுப்பு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிறுபான்மை விவகாரங்கள் இயக்குநரகத்தின் இயக்குனர் சையத் தஹிதுர் ரஹ்மான், “நாங்கள் ஒரு நிலையான செயல்பாட்டு நெறிமுறையை தயார் செய்து, கணக்கெடுப்பு தொடர்பாக அரசுக்கு அனுப்பியுள்ளோம். இந்த நிலையான செயல்பாட்டு நெறிமுறையை சமர்ப்பித்தால் எங்கள் குழு மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியை தொடங்கும். முதலில் நாங்கள் அதை ஒன்று அல்லது இரண்டு மாவட்டங்களில் தொடங்குவோம்,” என்றார் ரஹ்மான்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த கணக்கெடுப்பு தொடர்பாக வங்காள வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்துமா இல்லை என்பது எங்களுக்குத் தெரியாது. தற்போது, பூர்வீக முஸ்லிம்களை அடையாளம் காண மட்டுமே வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்த சில வழிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன,” என்றார் சையத் தஹிதுர் ரஹ்மான்.

உண்மையில், மியான் முஸ்லிம்களின் கணக்கெடுப்பு ஒரு பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் கௌரியா போன்ற பழங்குடி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மியான் முஸ்லிம்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களை அடையாளம் காண வேண்டும் என்றால், மியான் முஸ்லிம்கள் மத்தியிலும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

அசாம் முஸ்லிம்கள்

பட மூலாதாரம், DILIP SHARMA/BBC

அசாமில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடி முஸ்லிம்கள்

மாநிலத்தில் உள்ள 1 கோடியே 7 லட்சம் (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி) முஸ்லிம்களில், 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பூர்வகுடி முஸ்லிம்கள் எனக் கூறப்படுகிறது. இந்த பூர்வகுடி முஸ்லிம்களின் எண்ணிக்கை குறித்து உறுதியான ஆவணங்கள் யாரிடமும் இல்லை. மாநிலத்தில் உள்ள பூர்வகுடி முஸ்லிம்களின் வாழ்க்கை முறை, உடை மற்றும் அடையாளம், வங்காளி வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது.

ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள மரியானி நகரத்தில் வசிக்கும் ஜாகிர் ஹுசைன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இளங்கலை படித்து வருகிறார். இவர் வங்காளி வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்களிடமிருந்து தன்னை வித்தியாசமாகக் கருதுகிறார்.

இந்த கணக்கெடுப்பு குறித்து ஜாகிர் கூறுகையில், “நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அசாமியர்கள், யாரும் எங்களை வங்கதேசத்தினர் என்று அழைப்பதில்லை. இந்த கணக்கெடுப்பு எங்கள் தலைமுறைக்கு முக்கியமானது. ஏனெனில் கணக்கெடுப்புக்குப் பிறகு, பூர்வகுடி முஸ்லிம்களை அடையாளம் காண்பது எளிதாகிவிடும், இது முன்பே நடந்திருக்க வேண்டும்,” என்றார்.

சடோ அசோம் கோரியா-மோரியா-தேசி ஜாதிய பரிஷத்தின்(Sadou Asom Goria-Moria-Desi-Jatiya Parishad) தலைவர் நூருல் ஹக் கூறுகையில், ” பல தசாப்தங்களாக மாநிலத்தின் பழங்குடி முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. மியான் முஸ்லிம்கள் எங்களை முஸ்லிம்களாகக் கருதுவதில்லை. எங்கள் சமூகம் பாதுகாப்பற்றது. நாங்கள், முஸ்லிம்களாகவோ, அசாமிகளாகவோ இல்லாத சூழ்நிலையில் இருக்கிறோம். சிறுபான்மையினர் என்ற பெயரில் அரசு இதுவரை எந்த வளர்ச்சியைச் செய்தாலும் மியான் முஸ்லிம்கள் மட்டுமே பயனடைந்துள்ளனர். வங்காள வம்சாவளியைச் சேர்ந்த 70 லட்சம் முஸ்லிம்கள் இருப்பதால், அரசியல் அதிகாரம் அவர்களிடம் மட்டுமே உள்ளது,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த கணக்கெடுப்பு பழங்குடி முஸ்லிம்களுக்கு மட்டுமே. வங்காள வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்கள் இதில் சேர்க்கப்பட மாட்டார்கள். மியான் முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் தங்களை ஜோலாஹா சமூகம் என்று அழைத்துக்கொண்டு பழங்குடியினராக மாற முயற்சிக்கின்றனர். ஆனால், இந்த விஷயங்கள் அரசுக்குத் தெரியவில்லை. ஆனால் நாம் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

ஆற்றங்கரைப் பகுதிகளில் வங்காள வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்களிடையே அசாமிய கலாசாரத்தை வளர்க்க பாடுபடும் சார் சபோரி பரிஷத் தலைவர் மருத்துவர் ஹபீஸ் அகமது கூறுகையில், இந்த கணக்கெடுப்பு முஸ்லிம்களை பிளவுபடுத்தும் அரசியலின் ஒரு பகுதி என்றார்.

அவர் பேசுகையில், “பூர்வகுடி முஸ்லிம்களின் வரையறையை நிர்ணயிக்காமல் அரசாங்கம் ஒரு கணக்கெடுப்பை நடத்த விரும்புகிறது. அத்தகைய கணக்கெடுப்பின் சட்டபூர்வமான செல்லுபடியாகுமா, நீதிமன்றத்தில் நிற்குமா என்று சொல்வது கடினம்” என்றார்.

அசாம் முஸ்லிம்கள்

பட மூலாதாரம், DILIP SHARMA/BBC

கணக்கெடுப்பில் என்ன மாதிரியான சிக்கல் உள்ளது?

பழங்குடி முஸ்லிம்களுக்காக நீண்ட காலமாக வாதாடி வரும் குவாஹாத்தி உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் நெகிபுர் ஜமான் பேசுகையில், ​​”பாஜக அரசு பழங்குடியின முஸ்லிம்களுக்காக 100 கோடி ரூபாய் வரவு செலவுத் திட்டம் நிர்ணயித்தது. ஆனால், கணக்கெடுப்பு பணி தொடங்காததால், இந்தப் பணம் செலவழிக்கப்படவில்லை. பழங்குடியின மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை” என்றார்.

நெகிபுர் ஜமான் இந்த கணக்கெடுப்பின் சிக்கலான தன்மையை விளக்கினார்.

“இது ஒரு சமூக-பொருளாதார கணக்கெடுப்பு, எனவே இது அனைத்து முஸ்லிம்களுக்கும் நடத்தப்படும். பழங்குடி முஸ்லிம்கள் என்று வரும்போது, ​​அவர்களின் முன்னோர்கள் தொடர்பான ஆவணங்கள் கேட்கப்படும். கோரியா- மோரியா சமூகத்தை அடையாளம் காண்பது எளிதாக இருக்கும். ஆனால் தேசி சமூகத்தினர் மியான் முஸ்லிம்களுடன் கலந்துள்ளனர். அத்தகைய சூழ்நிலையில் வங்காள முஸ்லிம்களில் அசாமிய முஸ்லிம்களை அடையாளம் காண்பது பெரும் சவாலாக இருக்கும்

இந்த சமூகம் பல ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் மதத்திற்கு மாறிய கோச் ராஜ்வன்ஷி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்று அசாமிய முஸ்லிம்களைப் பற்றி கூறுகின்றனர். இது தவிர, பூர்வகுடி முஸ்லிம்கள் மியான் முஸ்லிம்களுடன் உறவுகளையும் திருமணங்களையும் வைத்திருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் அவர்களை அடையாளம் காண்பது அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக அமையும்,” என்றார் நெகிபுர் ஜமான்.

அசாம் மாநில பாஜக தலைவர் பிரமோத் சுவாமி

பட மூலாதாரம், ANI

மியான் முஸ்லிம்களின் பயம் பற்றி பாஜக என்ன சொல்கிறது?

பூர்வகுடி முஸ்லிம்களை அடையாளம் காண இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக பாஜக கூறுகிறது. வங்காளி வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்கள் இதில் பயப்படவோ பீதி அடையவோ தேவையில்லை என்றும் பாஜக கூறுகிறது.

அசாம் மாநில பாஜக தலைவர் பிரமோத் சுவாமி கூறும்போது, ​​’பழங்குடியின’ முஸ்லிம்களுக்கு சில வசதிகளை வழங்கவே அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. எனவே, அவர்களை அடையாளம் காண சமூக-பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

“இதற்கு ஏன் யாரும் பயப்பட வேண்டும்? பாஜக ஆட்சியில் மியான் முஸ்லிம்களுக்கு மாற்றான்தாய் நடத்தப்படுவதாக சிலர் பொய்ப் பிரசாரம் செய்கின்றனர். அதேசமயம், மத்திய, மாநில அரசுகளின் அனைத்துத் திட்டங்களிலும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் அதிகளவில் பயனடைந்துள்ளனர்,” என்றார்.

அசாம் அரசின் இந்த முடிவை, பராக் பள்ளத்தாக்கு பகுதியில் குடியேறிய முஸ்லிம்களின் சில குழுக்கள் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு தொடர்ந்தன.

மணிப்புரி முஸ்லிம்கள், அசாமின் கச்சார் மாவட்டத்தில் வாழும் பங்கல்கள் மற்றும் பட்டியல் பழங்குடி பிரிவின் கீழ் வரும் முஸ்லிம்கள், இந்த ஐந்து பழங்குடி முஸ்லிம்களின் குழுவில் சேர்க்கப்படவில்லை. எனவே, அசாம் அரசுக்கு சட்டரீதியான தடைகளும் எழுந்துள்ளன.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »