Press "Enter" to skip to content

தமிழ்நாடு வரவு செலவுத் திட்டம்: அபாய நிலைக்குச் சென்றுவிட்டதா தமிழ்நாட்டின் கடன்? – நிபுணர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், DIPR

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவால் திங்கட்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில் புதிதாக பல சமூக நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், மாநிலம் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியும் பல இடங்களில் வெளிப்பட்டது.

முதல் முறையாக நிதி நிலை அறிக்கை சில கருத்துருக்களை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டதாக நிதியமைச்சர் தெரிவித்தார். அதன்படி, சமூக நீதி, கடைக்கோடி தமிழர் நலன், உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், மகளிர் நலன்காக்கும் சமத்துவப் பாதை, பசுமை வழிப் பயணம், தாய்த்தமிழும் பண்பாடும் ஆகிய ஏழு அம்சங்களை மனதில் வைத்து இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

நிதிநிலை அறிக்கையின் ஆரம்பத்திலேயே நிதி நெருக்கடி, இயற்கைப் பேரிடர், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படும் மத்திய அரசு ஆகியவற்றுக்கு நடுவில் இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் எந்தெந்த விதங்களில் மாநிலம் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ்நாடு வரவு செலவுத் திட்டத்தின் அடிப்படையான தகவல்கள்:

தமிழ்நாடு வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடர்

பட மூலாதாரம், DIPR

தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய் ரூ. 3,03,814 கோடி. செலவைப் பொறுத்தவரை, ரூ. 4,12,504 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட 11.7 சதவீதம் அதிகம்.

மொத்த வருவாயில் மாநிலத்தின் சொந்த வருவாய் 75.6 சதவீதம். மீதமுள்ள வருவாய் மத்திய அரசின் வரிப் பங்கீடாகவும் திட்ட உதவிகளாகவும் வழங்கப்படுகின்றன.

செலவுகளைப் பொறுத்தவரை, மாநில அரசு வாங்கிய கடனுக்கான வட்டியாக மட்டும் 63,772 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. ரூ. 84,932 கோடி ஊதியத்திற்கு செலவிடப்படுகிறது. ஓய்வூதியத்திற்கு ரூ. 37,664 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. ரூ. 1,46,908 கோடி உதவித் தொகை மற்றும் மானியங்களாகச் செலவிடப்படுகிறது.

இதில் மூலதனச் செலவினங்களாக 47,681 கோடி செலவிடப்படுகிறது. அதில் அதிகபட்சமாக சாலைகள் மற்றும் பாலங்களுக்காக மட்டும் ரூ. 17,890 கோடி செலவிடப்படுகிறது.

நிதிப் பற்றாக்குறையைப் பொறுத்தவரை இந்த நிதியாண்டில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.45 சதவீதமாக இருந்தது. வரும் நிதியாண்டில் இது 3.44 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செலவுகளைப் பொறுத்தவரை, கல்வித் துறைக்கு 52,254 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. மருத்துவத் துறைக்கு ரூ. 20,198 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. நகர்ப்புற வளர்ச்சிக்கு ரூ. 41, 733 கோடி செலவிடப்படுகிறது.

தமிழ்நாடு வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடர்

பட மூலாதாரம், DIPR

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு இழப்பீடு அளிக்கும் விவகாரம்

கடந்த சில ஆண்டுகளில் இல்லாத நெருக்கடிகள் சிலவற்றை தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு எதிர்கொண்டிருக்கிறது. உதாரணமாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு இழப்பீட்டு நிதி அளித்த விவகாரம்.

அதாவது தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வாரியம் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும்போது கடன் வாங்கி அதனைச் சமாளிக்க முடியும். ஆனால், மின்வாரியம் எதிர்கொள்ளும் நிதி நிலையின் காரணமாக அதனைச் செய்ய முடியவில்லை. ஆகவே, அந்த பொதுத் துறை நிறுவனத்தை நடத்தும் மாநில அரசே இந்தத் தொகையை அளிக்க வேண்டும் என மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது.

அந்த நிபந்தனையை மாநில அரசு ஏற்காவிட்டால் மாநில அரசின் கடன் வரம்பிலிருந்து அந்தத் தொகை கழிக்கப்படும். ஆகவே இந்த நிதி ஆண்டில் மின் வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு 17,117 கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறது. வரும் நிதி ஆண்டில் 14,442 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டியிருக்கும். இந்த நிபந்தனையை தளர்த்தும்படி, மாநில அரசு கோரிக்கை விடுத்திருக்கிறது.

இது தவிர, இந்த நிதி ஆண்டில் சென்னையிலும் தென் மாவட்டங்களிலும் பெய்த கன மழையின் காரணமாக மாநில அரசு 2,041 கோடி ரூபாயை நிவாரண பணிகளுக்காக செலவிட வேண்டியிருந்தது. இதுவும் இந்த ஆண்டில் ஒரு கூடுதல் செலவாக அமைந்தது. இதுபோக, இந்தப் பேரிடர்களின் காரணமாக வரி வருவாயின் வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்ட 20.6 சதவீதத்தில் இருந்து 13.26 சதவீதமாகக் குறைந்தது.

அடுத்ததாக வேறு சில நெருக்கடிகளும் இந்த நிதிநிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. சென்னையில் தற்போது பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்த பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) திட்டம், மாநில அரசின் நிதி, மத்திய அரசின் நிதி, கடனுதவி ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

ஆனால், மத்திய அரசு தன் பங்கு நிதியை விடுவிக்க மறுப்பதாக மாநில அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இது தொடர்பாக சமீபத்தில்கூட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிய நிலையில், நிதி நிலை அறிக்கையிலும் இந்த விவகாரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக மட்டும் மாநில அரசு கூடுதலாக 9,000 கோடியைச் செலவழித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

“தமிழ்நாட்டின் இந்த நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரை, ஒருங்கிணைந்த வளர்ச்சியை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாகத்தான் தெரிகிறது. குறிப்பாக, 2030க்குள் எட்டு லட்சம் வீடுகளைக் கட்டுவதற்கான திட்டம் மிக முக்கியமானது. தவிர, தொழிற்சூழலும் சிறப்பாகவே இருக்கிறது” என்கிறார் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான எஸ். பாலச்சந்திரன்.

தவிர, மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படும் சூழலில் இதைவிட சிறந்த நிதிநிலை அறிக்கையைத் தர முடியாது என்கிறார் அவர். “மாநிலம் இரண்டு பேரிடர்களை சமீபத்தில் சந்தித்தது. மத்திய அரசு எந்த நிவாரண உதவியையும் செய்யவில்லை. இதுபோன்ற மிக மோசமான சூழலில், பேரிடர் நிவாரண நிதியின் மத்தியத் தொகுப்பில் இருந்து நிதியுதவி செய்ய முடியும்.

ஆனால், மாநிலத்திற்கு வழக்கமாக அளிக்க வேண்டிய தொகையை அளித்துவிட்டு நிறுத்திக்கொண்டார்கள். இம்மாதிரியான பாரபட்சமான நிலைக்கு நடுவில் முடிந்ததை திட்டமிட்டிருக்கிறார்கள். இது எந்த அளவுக்கு செயலாக்கம் பெறுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்” என்கிறார் எஸ். பாலச்சந்திரன்.

உற்பத்தித் துறையிலிருந்து சேவைத் துறையை நோக்கி தமிழ்நாடு அரசின் கவனம் திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்க விஷயம் என்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

“தமிழ்நாட்டில் உற்பத்தித் துறையில் வேலை செய்ய ஆட்கள் இல்லை. இந்த நிலையில், மாநில அரசின் கவனம் சேவைத் துறைகள் மீது திரும்பியிருப்பது மிக முக்கியமானது. குறிப்பாக, குளோபல் கேபபிலிட்டி மையங்களை அமைக்க அழைப்பு விடுத்திருப்பதும், உயர் சம்பளத்தில் குறிப்பிட்ட அளவை மாநில அரசு ஏற்பதாகச் சொல்லியிருப்பதும் மிக முக்கியமானது. இது தவிர, சென்னையைத் தவிர்த்த மாநிலத்தின் பிற பகுதிகளின் மீதும் கவனம் செலுத்தப்பட்டிருப்பது மிக முக்கியமானது” என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

ஆனால், சில பலவீனமான அம்சங்களையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். கடன்தொகையைப் பொறுத்தவரை, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்திற்குள் இருப்பது நல்லது என்ற நிலையில், அந்தக் கடன் தற்போது 26 சதவீதத்தை நெருங்கியிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால், சமூக நலத் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடுவது, மிக முக்கியமான முதலீடு என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

தமிழ்நாட்டில் வரும் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 1,08,690 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.44 சதவீதமாக இருக்கும்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »