Press "Enter" to skip to content

தமிழ்நாடு அரசின் LGBTQIA+ வரைவுக் கொள்கைக்கு திருநங்கை, திருநம்பியர் எதிர்ப்பு ஏன்?

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை LGBTQIA+ சமூகத்தின் முன்னேற்றத்திற்காக வரைவுக் கொள்கையை வகுத்துள்ளது. அதுதொடர்பாக, தமிழ்நாடு முழுவதும் மண்டல வாரியாக கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் பங்கேற்கும் திருநங்கை, திருநம்பியர் ஆகிய இரு தரப்பினரும் வரைவுக் கொள்கைக்கு எதிர்ப்பை பதிவு செய்து இருக்கின்றனர்.

LGBTQIA+ என்ற ஒற்றைக் குடையின் கீழ் அனைத்து பாலின சிறுபான்மையினரையும் இணைத்து வரைவு கொள்கை உருவாக்குவதால் திருநங்கைகள் சந்திக்கும் பாதிப்பு என்ன?

LGBTQIA+ வரைவு கொள்கை – பின்னணி என்ன?

மதுரையைச் சேர்ந்த ஒரு தன்பாலின ஈர்ப்பு இணையருக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் விசாரித்தார். அப்பொழுது எல்.ஜி.பி.டி சமூகத்தினரை பாதுகாக்க அரசு வரைவுக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தியிருநதார்.

அதன்படி, தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் சார்பில் திருநர் மற்றும் LGBTQIA+ சமூகத்தினருக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முன்னுரிமை அளிப்பது தொடர்பாக ஆராய கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21-ஆம் தேதி 11 பேர் கொண்டக் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவால் தயார் செய்யப்பட்ட வரைவுக் கொள்கை மீதானக் கருத்து கேட்புக் கூட்டம் சென்னை, விழுப்புரம், மதுரை, திருச்சி, கோவை என ஐந்து மண்டலங்களில் நடத்தப்பட்டது.

இந்தக் கருத்து கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து திருநங்கைகளும் தங்களுக்கு வரைவு கொள்கைத் தனியாக வகுக்க வேண்டும் என்று கோரினர்.

‘இட ஒதுக்கீடு நீண்ட காலப் போராட்டம்’

கருத்துக்கேட்புக் கூட்டம்

மதுரையைச் சேர்ந்த திருநங்கை செயல்பாட்டாளர் ப்ரியா பாபு பிபிசியிடம் பேசும் போது,”அசாம், கேரளம், கர்நாடகம் மாநிலங்களில் திருநங்கைகளுக்கு 1% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய திருநங்கைகள் தொடர்ச்சியாக இட ஒதுக்கீட்டுக்காக போராடி வருகிறோம். இந்த நிலையில் சமூக நலத்துறை வழியாக வரைவுக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அதில் திருநங்கை, திருநம்பி மற்றும் தன் பாலின ஈர்ப்பாளர்கள் என அனைவரையும் ஒன்றாக சேர்த்து LGBTQIA+ சமூகத்திற்கென பொதுவான வரைவுக் கொள்கையை வகுத்து இருக்கிறது. இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

திருநங்கை, திருநம்பி ஆகியோர் உடல் ரீதியான பல்வேறு மாற்றங்களை சந்திக்கின்றனர். அவர்கள் தங்களது வாழ்க்கையை தொலைத்து சமூகத்தால் ஒதுக்கப்பட்டு ஒரு குழுவாக இணைந்து வாழ துவங்குகின்றனர்.

ஆனால், லெஸ்பியன்ஸ் ( பெண் தன் பாலின ஈர்ப்பாளர்கள்) , பை செக்ஸுவல்ஸ்(இரு பாலின ஈர்ப்பாளர்கள்) , கே( ஆண் தன்பாலின ஈர்ப்பாளர்) போன்றவர்கள் பொது வெளியில் சொன்னால் மட்டுமே தெரியக் கூடியவர்கள். தன் பாலின ஈர்ப்பாளர்களுடன் திருநங்கைகள், திருநம்பியரைச் சேர்ப்பது ஏற்புடையதாக இருக்காது”, என்றார்.

கருத்துக் கேட்புக் கூட்டம்

‘கணக்கெடுப்பு இல்லாமல் வரைவு கொள்கை தீர்வு தராது’.

எல் ஜி.பி.டி சமூக செயல்பாட்டாளர் கோபி சங்கர்

இது குறித்து பிபிசியிடம் பேசிய தேசிய மாற்றுப்பாலினத்தவர் ஆணையத்தைச் சேர்ந்த கோபி சங்கர் கூறும் போது, “இந்தியாவில் மாற்று பாலினத்தவர் பற்றிய முழுமையான கணக்கெடுப்பு இல்லை. அதேபோல் தமிழ்நாட்டில் வாழும் திருநங்கைகள், திருநம்பிகள், மாற்று பால் இனத்தவரின் கணக்கீடு இல்லாமல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசு இந்த வரைவுக் கொள்கையை தயாரிப்பது அவர்களுக்கு எந்தப் பலனையும் தராது.

முதலில் பால் அடையாளம், பாலின அடையாளத்தின் அடிப்படையில் இவர்களைப் பிரிக்க வேண்டும்.

அரசு ஏற்படுத்தி இருக்கும் 11 பேர் அடங்கிய குழு திருநங்கை, எல்.ஜி.பி.டி செயல்பாட்டாளர்களிடம் கலந்து ஆலோசனை செய்து வரைவுக் கொள்கை தயார் செய்தால் மட்டுமே இது அனைவருக்குமானதாக இருக்கும். ஆனால், தற்பொழுது நியமிக்கப்பட்ட குழுவினர் யாரிடமும் பேசாமல் அவர்களாக இந்த வரைவை தயார் செய்து இருப்பது எந்த விதத்திலும் ஒரு முழுமையான கொள்கையை உருவாக்காது.

திருநங்கைகள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்னைகளும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளும் வெவ்வேறாக இருக்கின்றன. எனவே ஒரே வரைவாக இருந்தாலும் தனித்தனியான பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் பற்றிய பத்திகள் வரைவுக் கொள்கையில் இடம் பெறுவது அவசியம்.

இடையிலிங்க குழந்தைகளுக்கான தேவையற்ற அறுவைச் சிகிச்சை செய்வதை மால்டா நாட்டிற்கு அடுத்தபடியாக கடந்த 2019- ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தடை செய்து அரசாணை வெளியிட்டது. ஆனால் அதன் நோக்கத்திற்கு எதிராக இந்த வரைவுக் கொள்கை அமைக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.”, என்றார்.

LGBTQIA+ வரைவு கொள்கையில் அரசின் முடிவு என்ன?

சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி

LGBTQIA+ வரைவுக் கொள்கையை சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி மண்டல வாரியாக சென்று அந்தச் சமூகத்தை சேர்ந்தவர்களிடம் எடுத்துக் கூறி கருத்து கேட்கிறார்.

சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி பிபிசியிடம் பேசும் போது, “தமிழ்நாடு முழுவதும் 8,000 திருநங்கைகள் இருக்கின்றனர். ஆணிலிருந்து பெண்ணாக மாறியவர்களுக்கு ஆதார், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் மூன்றாம் பாலினத்தவராக மாற்றுவதில் சிரமம் இருப்பதாக பலரும் கூறி இருக்கின்றனர்.

LGBTQIA+ வரைவுக் கொள்கை குறித்து 5 மண்டலங்களில் உள்ள அந்த சமூகத்தினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. இதில் திருநங்கைகள் தரப்பில் தனியான வரைவுக் கொள்கை வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்பட்டன “, என்றார்.

தமிழ்நாடு அரசு பணியில் இட ஒதுக்கீடு?

“தமிழ்நாடு அரசின் சார்பில் உருவாக்கப்பட்ட வரைவில் கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம், பள்ளிகளில் முன்னுரிமை என்ற அடிப்படையிலேயே இந்த வரைவுக் கொள்கை உருவாக்கப்பட்டு அதற்கான கருத்து கேட்புக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

திருநங்கைகள் 2 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் எனக் கோரியிருக்கின்றனர். இன்னமும் சில பணிகள் முடித்த பிறகு வரைவு அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும். அரசு இறுதி முடிவை எடுக்கும்.”, என்று சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி கூறினார் .

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »