Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): “மலேசியாவில் தொற்று பரவல் குறைவாகவே உள்ளது”

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட சரிபாதி பேர் குணமடைந்துள்ளனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட அதிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மருத்துவ வல்லுநர்கள் யூகித்ததைவிட மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறைவாகவே உள்ளது என்று சுகாதார அமைச்சின் பொதுச்செயலர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

இன்று மலேசியாவில் புதிதாக 134 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அங்கு பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,817ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து கொரோனா கிருமி பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 77ஆக உள்ளது. இது ஒட்டுமொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 1.6 விழுக்காடாகும்.

இன்று ஒரே நாளில் 168 பேர் வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2,276 பேர் குணமடைந்திருப்பதாகவும் இது ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 47.3 விழுக்காடு எனவும் டாக்டர் நூர் ஹிஷாம் சுட்டிக் காட்டினார்.

“பொது நடமாட்ட கட்டுப்பாட்டை ஆணையால் பலன் கிடைத்துள்ளது”

பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு 27 நாட்கள் ஆகும் நிலையில், இதன் பலனாகத்தான் வைரஸ் தொற்றியோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் குறிப்பிட்ட நூர் ஹிஷாம், மருத்துவ வல்லுநர்கள் எதிர்பார்த்ததைவிட கொரோனா வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை மலேசியாவில் வெகு குறைவாக உள்ளது என்றார்.

“ஜே.டி. மோர்கன் ஏப்ரல் 14ஆம் தேதியன்று மலேசியாவில் ,6,300 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது நாட்டில் 4,817 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 14ஆம் தேதி முடிவில் இந்த எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருக்கக்கூடும்.

“எனவே வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மலேசியா கணிக்கப்பட்டதைவிட மிகச் சிறப்பாகச் செயலாற்றி வருகிறது. வைரஸ் தொற்றியோரின் எண்ணிக்கை குறைவது பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால்தான் சாத்தியமானது. இந்த ஆணையின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்கள் மூலம் நாம் எதிர்பார்த்த சாதகமான அறிகுறிகள் தற்போது தென்படத் துவங்கியுள்ளன.

“எனினும் புதிதாக நோய்த் தொற்றியோரின் எண்ணிக்கையை முற்றிலுமாக குறைக்கவேண்டி உள்ளது. எனவே, பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் இந்த மூன்றாம் கட்டம் மிக முக்கியமானது. நாட்டில் கோவிட் 19 நோயை முடிவுக்குக் கொண்டுவர சுகாதார அமைச்சு மட்டுமல்லாமல் நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்,” என்று டாக்டர் நூர் ஹிஷாம் வலியுறுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் 83,488 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளதா என பரிசோதனை நடத்தப்பட்டது என்று குறிப்பிட்டுள்ள அவர், இவர்களில் 5.8 விழுக்காட்டினருக்கு மட்டுமே வைரஸ் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். எனினும் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் அனைவருக்குமே பரிசோதனை நடத்தப்படுகிறது என்றார் அவர்.

சிகையலங்கார கடைகள் திறக்க அனுமதியில்லை`

பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருப்பதால் சிகை அலங்காரம் மற்றும் கண் கண்ணாடிக் கடைகள் இயங்க அனுமதி இல்லை என மலேசிய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி நிபுணர்களின் ஆலோசனையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மலேசிய அரசு நாட்டு மக்களின் குரலை எப்போதும் கேட்கும் என்றும் இந்த விவகாரத்தில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் கருத்துகளையும் அரசு கேட்டறிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

“மக்கள் எழுப்பும் அனைத்துக் கேள்விகளுக்கும் அரசு பதிலளிக்கும். சிகையலங்காரக் கடைகள், அழகு நிலையங்கள், கண்ணாடிக் கடைகள் தொடர்பில் இனி பிரச்சினைகள் ஏதும் இருக்காது,” என்றார் இஸ்மாயில் சப்ரி.

இரு தினங்களுக்கு முன்னர் சிகையரங்காரக் கடை திறப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என தகவல் வெளியானது. ஆனால் இதற்கு சில தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாமும் அரசாங்கம் இம்முடிவைத் தற்காலிகமாக தள்ளி வைக்கும் என்று கேட்டுக் கொண்டார்.

ஏப்ரல் 28ஆம் தேதி வரை மலேசியாவில் அனைவருக்கும் இலவச இணைய சேவை:

பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நீடிக்கும் வரை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அரசாங்கம் இலவச இணைய சேவைகளை வழங்கும் என்று பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட பொருளாதார ஊக்கத் திட்ட அறிக்கையில் இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து இந்த சிறப்பு தொகுப்புக்காக அரசாங்கம் 600 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

கூடுதலாக, இணைய வேகம் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகளின் தரம் குறையாமல் இருக்க 400 மில்லியன் ரிங்கிட் கூடுதல் முதலீடு செய்யப்படும் என்றும் பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »