Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): டிரம்ப் v/s உலக சுகாதார அமைப்பு – முற்றிய மோதல்; நிதியுதவியை நிறுத்திய அமெரிக்க அதிபர்

உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வரப்படும் நிதியை நிறுத்திட தனது அரசின் நிர்வாகத்துக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தனது அடிப்படை பணியிலிருந்து உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

முதலில் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடங்கிய சமயத்தில் அந்த பிரச்சனையை சமாளிப்பதில் தவறான நடவடிக்கைகள் எடுத்ததாகவும், இந்த வைரஸ் தொற்று பரவல் குறித்த உண்மைகளை மூடிமறைத்தாகவும் ஐ.நா. அமைப்பான உலக சுகாதார நிறுவனம் மீது டிரம்ப் குற்றம்சுமத்தியுள்ளார்.

சீனாவுக்கு சாதகமாக உலக சுகாதார நிறுவனம்

சீனாவுக்கு சாதகமாக உலக சுகாதார நிறுவனம் பாரபட்சமாக நடந்து கொள்வதாக டிரம்ப் முன்னரே கூறியிருந்தார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் அமெரிக்க அதிபர் மீதே அங்கு விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், ”கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் தவறான நிர்வாகம் செய்தது மற்றும் இந்த தொற்று குறித்த உண்மைகளை மூடிமறைத்தது என உலக சுகாதார அமைப்பின் பணிகள் குறித்து மறுஆய்வு செய்யப்பட்டு வரும்வேளையில், இந்த அமைப்புக்கு வழங்கப்படும் நிதியினை நிறுத்திடுமாறு எனது நிர்வாகத்துக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

”தனது அடிப்படை பணியினை செய்ய தவறிவிட்ட உலக சுகாதார அமைப்பே நடந்த தவறுக்கு பொறுப்பாகும்” என்று மேலும் கூறினார்.

400 மில்லியன் அமெரிக்க டாலர்கள்

உலக சுகாதார அமைப்புக்கு மிகவும் அதிக அளவில் நிதி அளித்து வரும் அமெரிக்கா, கிட்டத்தட்ட 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்த ஆண்டு அந்த அமைப்புக்கு வழங்கியிருந்தது. இது அமெரிக்காவின் மொத்த பட்ஜெட்டில் 15 சதவீதத்துக்கு சற்றுதான் குறைவாகும்.

”கோவிட் – 19 நோய்த்தொற்றின் கடும் பரவலை தொடர்ந்து, அமெரிக்காவின் பெருந்தன்மை மற்றும் தாராள குணம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதோ என எங்களுக்கு அதிக கவலை ஏற்பட்டுள்ளது” என்று டிரம்ப் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் இதுவரை 5,92,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் முதலில் இந்த தொற்றின் தாக்கம் தோன்றியபோது, அது குறித்து போதுமான அளவில் ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டதாக டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

சீனாவின் வெளிப்படைத்தன்மை

”சீனாவுக்கு ஆரம்பத்திலேயே மருத்துவ நிபுணர்களை அனுப்பி, அங்குள்ள நிலைமையை நன்கு ஆராய்ந்து செயல்பட்டிருந்தால் மற்றும் சீனாவின் வெளிப்படைத்தன்மை இல்லாத நிலையை எடுத்துரைத்து இருந்தால், இந்த தொற்று ஆரம்பத்திலேயே குறைந்த அளவு உயிரிழப்புகளுடன் கட்டுப்படுத்தப்பட்டிருக்கக்கூடும்” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

”ஆயிரக்கணக்கான உயிர்களை இது காப்பாற்றி இருக்கக்கூடும். மேலும் உலக அளவில் பொருளாதார இழப்புகளையும் தவிர்த்திருக்கலாம். ஆனால், சீனா அளித்த உத்தரவாதங்களை எந்த ஆய்வும் செய்யாமல் அப்படியே எடுத்துக்கொண்டு சீன அரசை உலக சுகாதார நிறுவனம் ஆதரித்தது” என்றார் டிரம்ப்.

அதேவேளையில், ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான சீனாவின் நடவடிக்கைகளை டிரம்ப் பாராட்டி பேசியதையும், அமெரிக்காவில் இந்த வைரஸால் பெரிய ஆபத்து எதுவும் ஏற்படாது என அவர் குறிப்பிட்டதையும் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருபவை. ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் தற்போதைய எண்ணிக்கை மேம்படுத்தப்படாமலும் இருக்கலாம்.

மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் மொத்தம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள்
மகாராஷ்டிரம் 2337 229 160
டெல்லி 1510 30 28
தெலங்கானா 1173 58 11
தமிழ்நாடு 879 133 3
மத்தியப் பிரதேசம் 730 51 50
உத்திரப் பிரதேசம் 657 49 5
குஜராத் 617 55 26
ஆந்திரப் பிரதேசம் 473 14 9
கேரளம் 379 198 3
ஜம்மு & காஷ்மீர் 270 16 4
கர்நாடகம் 258 65 9
ஹரியாணா 199 34 3
மேற்கு வங்கம் 190 36 7
ராஜஸ்தான் 176 14 12
பிகார் 66 26 1
புதுவை 55 18 1
உத்திராகண்ட் 35 7 0
இமாச்சல பிரதேசம் 32 13 1
சத்தீஸ்கர் 31 10 0
அசாம் 31 0 1
ஜார்கண்ட் 24 0 2
சண்டிகர் 21 7 0
லடாக் 15 10 0
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் 11 10 0
கோவா 7 5 0
பஞ்சாப் 7 1 0
மணிப்பூர் 2 1 0
மிசோரம் 1 0 0
ஒடிஷா

தகவல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »