Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று: ஏன் வெனிசுலாவுக்கு பேரழிவாக இருக்கும்?

வெனிசுவேலா அரசுத் தொலைக்காட்சி வழக்கமாக அரசின் தினசரி செயல்பாடுகள், செய்தியாளர் சந்திப்புகள், அதிபர் நிகோலஸ் மடூராவின் நீண்ட உரைகள் பற்றி முழுமையாக செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கும்.கிராமப்புற இசையும் கூட அதில் இடம் பிடித்திருக்கும்.

ஆனால் கொரோனா வைரஸ் பாதித்த இந்தச் சூழலில், பாடல் வரிகள் கொஞ்சம் மாறியுள்ளன. பாரம்பரிய இலனேரோ இசைக் கலைஞர்கள் வெனிசுவேலாவின் பரந்த பசுமையான காட்சிகள் பற்றி, அதன் மீது மக்களுக்கு ஏற்படும் காதலைப் பற்றி பாடுவதில்லை. மாறாக, கைகளைக் கழுவுதல், வீட்டிலேயே இருத்தல், முகக்கவசம் அணிதல் என தங்கள் வரிகளை மாற்றிக் கொண்டுவிட்டனர்.

“வெனிசுவேலா அழகான தாய்நாடே, கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், அமைதியாக இருங்கள்” என்று யிசிட்ரோ சலோம் குதிரை மேய்ப்பாளரின் தொப்பியை அணிந்து, வீணை போன்ற இசைக் கருவியை வாசித்தபடி பாடுகிறார். “நாம் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பதால், என்ன செய்ய வேண்டும் என நமக்கு தெரிந்துள்ளது. நமக்கு கொரோனா வைரஸ் வராமல் இருக்க வேண்டுமானால், நாம் விழிப்புடன், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்பதாக அவருடைய பாடல் உள்ளது.

வெனிசுவேலா பல ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியாலும், மிக அதிகமான பணவீக்கத்தாலும் பாதிக்கப்பட்டு, அரசியல் குழப்பங்களுக்கு ஆளாகியுள்ள நாடாக இருக்கிறது.

நாட்டில் சுகாதார வசதிகள் ஏற்கெனவே தரைமட்ட அளவில் உள்ள நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் அந்த மக்களின் அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

முடக்கநிலையை வேகமாக அமல் செய்தது

மார்ச் மாத மத்தியில் கோவிட்-19 நோய் பாதிப்பு முதன்முறையாக ஒருவருக்கு கண்டறியப்பட்டதும், அது மேலும் பரவாமல் இருக்க நாடு முழுக்க தனிமைப்படுத்தல் நிலையை அதிபர் மடூரா அறிவித்தார்.

“அதிபர் ஒரு விஷயத்தைச் சொல்வார். ஆனால் அமலுக்கு வரும் போது அது வேறு மாதிரி இருக்கும்,” என்று கரகாஸில் சூப்பர் மார்க்கெட்டில் காசாளராக இருக்கும் 33 வயதான மெபிஸ் நோகுவேரா கூறுகிறார்.

“இவ்வளவு ஆண்டுக் காலத்தில் சுகாதார வசதிகள் மிக மோசமாக உள்ளன. இப்போது நோய்த் தொற்று பரவும் நிலையில், நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோமா என்று தெரியவில்லை.” என்கிறார் அவர்.

மருத்துவமனை வசதிகள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை பரவலாக உள்ள நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு, பிரச்சனையை மேலும் தீவிரமாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

“ வெனிசுவேலாவுக்கு சுமார் 2,500 தீவிர சிகிச்சை படுக்கைகள் தேவை என்ற நிலையில், நாட்டில் சுமார் 80 தீவிர சிகிச்சை படுக்கைகள் மட்டுமே உள்ளன,” என்று ஜூலியா மாநிலத்தைச் சேர்ந்தவரும், முதுநிலை மருத்துவ இயக்குநர்களின் தேசிய போர்டின் தலைவருமான டாக்டர் பிரெட்டி பச்சனோ கூறுகிறார்.

“இதுமட்டுமின்றி மருத்துவமனைகளில் தொடர்ச்சியாக மின் விநியோகம், நம்பக் கூடிய அளவில் வென்டிலேட்டர் வசதிகளும் கிடையாது. இவையெல்லாம் சேர்ந்தால் நரகத்தைப் போன்ற ஒரு சூழ்நிலை உருவாகி நாட்டில் மரணங்கள் அதிகரிக்கும்.” என்கிறார் அவர்.

அன்றாட வாழ்க்கை

இந்த நெருக்கடி வருவதற்கு முன்பே, பல மில்லியன் பேர் சிரமங்களுடன் தான் வாழ்ந்து வருகின்றனர். தனிமைப்படுத்தல் நிலையால், இந்த நிலைமை இன்னும் மோசமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“நாங்கள் எல்லாக் கட்டணங்களையும் செலுத்தியாக வேண்டும். ஒவ்வொரு மாதமும் நகராட்சி வரிகளைக் கட்ட வேண்டும்,” என்று இனிப்பகம் நடத்தி வரும் கிறிஸ்டியன் குரோஸ் தெரிவித்தார்.

“இருந்தாலும் என் பெரிய கவலை உணவு பற்றியது தான். வருமானம் இல்லாமல் எவ்வளவு நாட்களுக்கு தாக்குபிடிக்க முடியும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. வருமானம் இல்லாவிட்டால் அடிப்படைத் தேவைகளைக் கூட எங்களால் வாங்க முடியாது.”

வெனிசுவேலாவில் பெரும்பாலானவர்கள் அமைப்புச்சாரா தொழில்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர்கள். 40 முதல் 50 சதவீத தொழிலாளர்கள் இந்தப் பிரிவில் இருப்பதாக பொருளாதார ஆலோசனை அமைப்பு ஒன்றின் இயக்குநர் ஹென்கெல் கார்சியா தெரிவித்தார்.

“அடுத்த சில வாரங்கள் பதற்றம் நிறைந்ததாகவே இருக்கும். சமூக இடைவெளி பராமரித்தல் காரணமாக வெனிசுவேலாவில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், நாட்கள் போகப் போக சிக்கல்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.” என்கிறார் கார்சியார்.

பொருளாதாரத்துக்கு உத்வேகம் ஊட்டுதல்

பெட்ரோல் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், மக்களின் தினசரி பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. உலகில் அதிக எண்ணெய் வளம் மிக்க நாடான வெனிசுவேலாவில், குறைந்து வரும் எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள் மற்றும் அமெரிக்காவின் தடை காரணமாக இப்போது பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் விடியலுக்கு முன்னதாக முக்கிய துறைகளில் பணியாற்றுபவர்கள் – டாக்டர்கள் மற்றும் செவிலியோர் உள்ளிட்டோரும் – எரிபொருள் நிலையங்களில் மிச்சமிருக்கும் எரிபொருள்களை வாங்குவதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதுபோன்ற காத்திருப்பு வரிசைகள் வெனிசுவேலாவில் சாதாரணமாகிவிட்டன. ஆனால் சில காலம் முன்பு வரையில் கரகாஸில் அப்படியில்லை. நாட்டின் மற்ற பகுதிகளைவிட, இந்தப் பகுதியில் எப்போதுமே பெட்ரோலியப் பொருள்கள் வழங்கல் நிலை நன்றாகவே இருக்கும்.

ஜோஸ் டாவிலா என்பவர் கரகாஸ் தென்கிழக்கில் வீடுகளுக்குக் குடிநீர் வழங்கி வருகிறார். இப்போது வியாபாரம் குறைந்துவிட்டதால் வாரத்தில் மூன்றரை நாட்கள் மட்டுமே அவர் வேலை பார்க்கிறார்.

உணவகங்களும், அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. அத்துடன், தன்னுடைய வேலையை முழுமையாகச் செய்வதற்குத் தேவையான அளவுக்கு பெட்ரோல் வாங்க முடியாதவர்களில் அவரும் ஒருவர்.

“நகரில் பாதுகாப்பாக சென்று வருவது கஷ்டம்,” என்கிறார் அவர். முகக்கவசம் மற்றும் கையுறைகள் கிடைப்பது கடினமாக உள்ளது. “அவற்றை வைத்திருப்பவர்கள், அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளனர்’சம்.’ என்று அவர் குறிப்பிட்டார்.

எண்ணிக்கைகளின் உண்மைத்தன்மை

மில்லியன் கணக்கானவர்கள் இப்போது தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இதையடுத்து மக்கள் மீது மடூரா இன்னும் அதிக கட்டுப்பாடு செலுத்த முடியும். ஆனால் நிலைமையை சமாளிக்க அரசுக்கு திறன் உள்ளதா என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து உண்மையான தகவலை வெளியிட அரசு தயாராக இருக்குமா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

கடந்த மாத இறுதியில், கொரோனா வைரஸ் பற்றி செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் டார்வின்சன் ரோஜாஸ் கைது செய்யப்பட்டார். “வெறுப்பை பரப்புகிறார்” என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வைரஸ் பற்றி வெளிப்படையாகப் பேசினால் டாக்டர்களும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். “பல டாக்டர்கள் நேரடியாக அல்லது மறைமுகமாக மிரட்டப்பட்டுள்ளனர்” என்கிறார் மருத்துவர் பச்சனோ.

நோய்த் தாக்குதல் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறித்தும், மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான அளவில் முழு உடல் பாதுகாப்புக் கவச உடை இல்லாதது குறித்து வெளியில் கூறியதற்காக மருத்துவர் பச்சனோவும் சிக்கலில் மாட்டிக் கொண்டார். “நோய்த் தாக்குதல் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களைக் கையாள்வதற்குத் தேவையான அடிப்படை துணிகள் கேட்பதற்குக் கூட மருத்துவ அலுவலர்கள் அச்சப்படுகின்றனர்.” என்று அவர் தெரிவித்தார்.

நெருக்கடி தெரிகிறது

இந்த வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த வெனிசுவேலா அரசுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது இது ஒருபுறம் இருக்க. இருக்க அந்நாடு வேறு நாடுகளின் அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மடூரா அரசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேலும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளார்.

அமெரிக்க சட்டத் துறையினரால் மடூரா மீது போதை மருந்து கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் அவரைப் பிடிக்க 15 மில்லியன் டாலர் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால அரசு ஒன்றை உருவாக்கவும் அமெரிக்க வெளியுறவுத் துறை யோசனைகளை முன்வைத்துள்ளது. ஆனால் மடூரா அதற்கு இடமளிக்கவில்லை.

“ஆட்சி மாற்றம் பற்றிப் பேசுவதற்கான நேரம் இதுவல்ல” என்று கரகாஸில் உள்ள சர்வதேச நெருக்கடி குழுமத்தின் நிர்வாகி பில் கன்சன் கூறுகிறார்.

20 ஆண்டுகளாக இந்த அரசு நீடித்து வரும் நிலையில், நல்ல சூழ்நிலை இருந்தாலுமேகூட, ஆட்சி மாற்றம் என்பது சவால்கள் நிறைந்தது.

“நோய்த் தொற்று காலத்தின் இடைவெளியில் அந்த யோசனை ஏற்கப்படாது, அது மிகவும் மோசமானது என்பது போல எனக்குத் தோன்றுகிறது.” என்கிறார் அவர்.

லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுவேலாவின் பொருளாதாரம் ஏற்கனவே சிக்கலில் இருக்கும்போது, “அநேகமாக அரசு திணறும் நிலையில் தான் உள்ளது” என்கிறார் திரு. கன்சன். “பெரிய அளவில் மக்களிடம் அமைதியின்மை ஏற்படுமானால், அதைக் கட்டுப்படுத்தும் நிலையில் அரசு நிர்வாகம் இல்லை. அநேகமாக அதுதான் அரசுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »