Press "Enter" to skip to content

தென் கொரிய தேர்தல்: அதிபர் மூன் ஜே இன் கட்சி அபார வெற்றி – கொரோனா நடவடிக்கைக்கு ஆதரவு

தென் கொரியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் மூன் ஜே இன் மீண்டும் அபார வெற்றி பெற்றுள்ளார்.

கொரோனா வைரஸ் பிரச்சனையை அரசாங்கம் எதிர்கொண்ட விதத்தை மக்கள் பாராட்டும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் அமைந்திருப்பதாக பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்று தொடங்கிய பிறகு தேசியத் தேர்தல் நடந்த சில நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. தேர்தல் வாக்குப் பதிவின்போது கடுமையான பாதுகாப்பு மற்றும், சமூக விலகல் நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டன.

கிட்டத்தட்ட எல்லா வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், மூன் ஜே இன்னின் ஜனநாயக கட்சிக்கு தேசிய சட்டமன்றத்தில் உள்ள 300 இடங்களில் 163 இடங்கள் கிடைத்துள்ளன.

அந்தக் கட்சியின் சகோதரக் கட்சியான பிளாட்ஃபார்ம் கட்சிக்கு 17 இடங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் ஆளும் தரப்புக்கு 180 இடங்கள் கிடைத்துள்ளன.

கட்சி மாறி யுனைட்டட் ஃப்யூச்சர் கட்சியில் நின்ற தே யோங் ஹோ வெற்றி பெற்றவர்களில் முக்கியமான சிலரில் ஒருவர். இவர் லண்டனில் உள்ள தென் கொரிய தூதரகத்தில் பணியாற்றியவர்.

இந்த தேர்தலில் 35 கட்சிகள் போட்டியிட்டாலும், உண்மையான போட்டி இடதுசாரி சார்புள்ள ஆளும் ஜனநாயக கட்சிக்கும், பழமைவாத போக்குள்ள எதிர்க்கட்சியான யுனைட்டட் ஃபயூச்சர் கட்சிக்கும் இடையில்தான் இருந்தது. கடந்த 16 ஆண்டுகளில் இடதுசாரி சாய்வுள்ள கட்சிகள் பெரும்பான்மை இடங்களைப் பிடிப்பது இதுவே முதல் முறை. இப்போதுள்ள நிலையில், யுனைட்டட் ஃப்யூச்சர் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து மொத்தமாக 103 இடங்கள் பிடிக்க வாய்ப்புள்ளது.

எப்படி வாக்களித்தார்கள்?

கொரோனா வைரஸ் சிக்கலுக்கு இடையில் நடந்த தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்கு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஒவ்வொரு வாக்காளரும், வாக்குச்சாவடியில் வாக்கினை செலுத்தும் முன் சேனிடைசர் திரவத்தால் கைகளை சுத்தம் செய்துகொள்ளவேண்டும், கைகளிளில் பிளாஸ்டிக் கையுறை அணிந்துகொள்ளவேண்டும், முகக்கவசம் அணிந்துகொள்ளவேண்டும். பிறகு ஒவ்வொருவரும் அடுத்தவரிடம் இருந்து குறைந்த்து 3 அடி இடைவெளியில் நிற்கவேண்டும்.

பிறகு அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும். யாருடைய உடல் சூடாவது 37.5 டிகிரி செல்ஷியசுக்கு மேல் இருந்தால் அவர்கள், அதற்கென அமைக்கப்பட்ட சிறப்பு வாக்குச்சாவடிக்கு அனுப்பப்படுவார்கள். அந்த சிறப்பு வாக்குச்சாவடியில் ஒவ்வொருவர் வாக்களித்த பிறகும், நுண்மி நீக்கம் செய்யப்படும்.

தென் கொரியா முழுவதும் 60 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் பிரச்சனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும், 66 சதவீதம் பேர் வாக்களித்தனர். இது கடந்த 18 ஆண்டுகளில் மிக அதிகமான வாக்குப் பதிவு சதவீதம். முதல் முறையாக 18 வயது ஆனவர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட முதல் தேர்தலும் இதுதான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »