Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சிகிச்சை: காசநோய் தடுப்பூசி கோவிட்-19 வராமல் தடுக்குமா? – தமிழக அரசு பரிசோதனை

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் 60-65 வயதுடையவர்களுக்கு பிசிஜி (BCG) தடுப்பூசியை அளிப்பதன் மூலம், உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த முடிவுசெய்துள்ளது தமிழக அரசு. முதியவர்களிடம் பிசிஜி தடுப்பூசி எப்படி செயல்படுகிறது?

Bacille Calmette-Guérin தடுப்பூசி எனப்படும் பிசிஜி தடுப்பூசி காசநோயைத் தடுக்கவும் மூளைக் காய்ச்சலைத் தடுக்கவும் பல தசாப்தங்களாக தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் பிறந்தவுடன் அளிக்கப்படும் இந்தத் தடுப்பூசி, மனித செல்களின் நினைவகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, நோய்த் தடுப்பாற்றலை அளிக்கிறது.

இந்த நிலையில், அந்தத் தடுப்பு மருந்தினை முதியவர்களுக்கு அளித்துப் பரிசோதிக்க தமிழக அரசின் அனுமதியை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) கோரியிருந்தது. தற்போது இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக தேசிய காசநோய் ஆராய்ச்சி நிலையத்தில் இதற்கான சோதனை விரைவில் துவங்கப்படவுள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

பிசிஜி தடுப்பூசி எப்படிச் செயல்படுகிறது?

“பிசிஜி தடுப்பூசியைப் பொறுத்தவரை நீண்ட கால நோக்கில் வழங்கப்படும் ஒரு தடுப்பூசி. இந்தத் தடுப்பூசியில் மட்டுப்படுத்தப்பட்ட பேக்டீரியா உடலில் செலுத்தப்படுகிறது. உடலில் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தவரை இரு விதங்களில் ஏற்படுகிறது. ஒன்று humoral எதிர்ப்பு சக்தி. மற்றொன்று டி – செல்கள் மூலம் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி. இந்த பிசிஜி தடுப்பு மருந்து உள்ளே செலுத்தப்பட்டவுடன் டி – செல்கள் மூலமான எதிர்ப்பு சக்தி உருவாகும். இதனை நோய் எதிர்ப்பு செல்கள் நினைவில் கொள்ளும். மீண்டும் அதே போன்ற கிருமிகள் உடலில் நுழைய முயன்றால், அந்த நினைவகம் தூண்டப்பட்டு பெரிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி, உடலைப் பாதுகாக்கும்” என்கிறார் வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் நல நிபுணரான டாக்டர் தீனதயாளன்.

பிசிஜி தடுப்பூசி எப்படிச் செயல்படுகிறது?

பட மூலாதாரம், CHAIDEER MAHYUDDIN

உலகில் உள்ள காசநோயாளிகளில் 3ல் ஒரு பங்குக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். பிசிஜி தடுப்பு மருந்தானது காசநோயைத் தடுப்பதற்காக வழங்கப்படுகிறது. ஆகவே இந்தியாவில் குழந்தை பிறந்தவுடன் இந்த தடுப்பு மருந்து அளிக்கப்பட்டுவிடுகிறது.

இப்போது கொரோனாவை எதிர்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த பிசிஜி தடுப்பு மருந்தை அளித்துப் பரிசோதிக்க ஐசிஎம்ஆர் முடிவுசெய்துள்ளது. இந்தக் காசநோய் தடுப்பு மருந்து எப்படி கோவிட் – 19ஐ எதிர்கொள்ள உதவும்?

“கோவிட் – 19 நோயைப் பொறுத்தவரை, அந்நோய் தாக்கியவுடன் சைட்டோகைன் புயல் ஏற்பட்டு, அதாவது வீக்கத்துடன் கூடிய நோய் எதிர்ப்புசக்தி உருவாவதன் மூலம் நோயாளிகளின் நிலை மோசமடைகிறது. ரத்தத்தில் உள்ள மோனோசைட்கள்தான் (ரத்த வெள்ளை அணுக்களில் ஒரு வகை) சைட்டோகைன்களை வெளியிடுகின்றன. இந்த சைட்டோகைன்களில் ஐஎல் 1, ஐஎல் 6, டிஎன் ஆல்ஃபா போன்ற வகைகள் உண்டு. கோவிட் – 19 தாக்கும்போது இவை ரத்த நாளங்களில் வீக்கத்தை ஏற்படுத்தி, நுரையீரலுக்கு ரத்தம் செல்வதை குறைத்து நிலைமையைச் சிக்கலாக்குகின்றன. ஆகவே, இம்மாதிரி வீக்கத்தை ஏற்படுத்தாத சைட்டோகைன்களை உருவாக்க மோனோசைட்களுக்கு கற்பிக்க வேண்டும். பிசிஜி தடுப்பு மருந்தைப் பொறுத்தவரை, இந்தச் செயலில் ஈடுபடுகிறது,” என்கிறார் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியர் டாக்டர் பரந்தாமன்.

பேராசிரியர் டாக்டர் பரந்தாமன்

தற்போது தமிழ்நாடு அரசு, பிசிஜி தடுப்பு மருந்தை கோவிட் – 19 நோயால் பாதிக்கப்பட்டால், அதிக உடல்நலக் குறைவுக்கு உள்ளாகக்கூடிய பிரினரான 60-65 வயதுக்குட்பட்டோருக்கு அளிக்க முடிவுசெய்துள்ளது. ஆனால், பிசிஜியைப் பொறுத்தவரை கோவிட் – 19ஐ குணப்படுத்தாது. மாறாக, கோவிட் – 19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் வீக்கம் ஏற்படக்கூடிய சைட்டோகன் புயலால் பாதிக்கப்படாமல், வீக்கத்தை உருவாக்காத நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள் என நம்பப்படுகிறது.

தொடக்க நிலையில் உள்ள இந்த ஆய்வின் முடிவுகள், கோவிட் – 19 நோய் மேலாண்மையில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »