Press "Enter" to skip to content

மியான்மர் ராணுவ ஆட்சி எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூடு: குறைந்தது 60 பேர் பலி

பட மூலாதாரம், Getty Images

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் கண்மூடித் தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 90 பேர் வரை கொல்லப்பட்டிருக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாதுகாப்பு படையினர் “ஆயுதமற்ற பொதுமக்களை கொல்கின்றனர்” என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

மியான்மரில் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் ஆட்சிக்கு வந்ததை எதிர்த்து நடந்த போராட்டங்களில் இதுவரை 400 பேர் வரை இறந்திருக்க வாய்ப்பு உள்ளது.

வெள்ளியன்று அரசு தொலைக்காட்சி, “முந்தைய இறப்புகளில் இருந்து மக்கள் தங்கள் தலையிலோ அல்லது முதுகிலோ சுடப்படும் ஆபத்து உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,” என்று எச்சரித்தது.

என்ன நடக்கிறது?

கடுமையான வன்முறை பிரயோகிக்கப்படும் என ராணுவம் தெரிவித்த பிறகும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான போராட்டகாரர்கள் சனிக்கிழமையன்று வீதிகளில் குவிந்தனர்.

`மியான்மர் நவ்` என்ற செய்தி ஊடகம், 40 நகரங்களில் 91 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

`டி இராவாடி` என்ற செய்தித்தளம், 28 இடங்களில் மூன்று குழந்தைகள் உட்பட 59 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

மியான்மர்

பட மூலாதாரம், Getty Images

காவல் துறையினர் போராட்டக்காரர்களுக்கு எதிராக வெடிமருந்துகளை பயன்படுத்தியதாக ஏஎஃப்பி செய்தி முகமையிடம் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.

ராணுவ தலைவர் என்ன சொன்னார்?

“ஜனநாயகத்தை பாதுகாக்க மொத்த நாட்டினோடும் ராணுவம் கை கோர்த்துள்ளது” என ராணுவத் தலைவர் மின் ஆங் லைய்ங் தொலைக்காட்சியில் நேரடி உரையில் தெரிவித்தார்.

“கோரிக்கை வைப்பதற்காக, ஸ்திரத்தன்மையும் பாதுகாப்பும் பாதிக்கும்படி வன்முறையில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ளமுடியாதது” என்றார் அவர்.

ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட ஆங் சாங் சூச்சி மற்றும் அவரின் கட்சியினர் செய்த “சட்டவிரோத நடவடிக்கைகளே” ஆட்சிக் கவிழ்ப்புக்கு காரணம் என்றார் அவர்.

இருப்பினும் துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்யலாம் என ராணுவம் ஆணையிட்டதாக அவர் குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை.

இதற்கு முன்பு போராட்டக்காரர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக ராணுவம் தெரிவித்திருந்தது.

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான ராணுவ எதிர்ப்பை குறிக்கும் ஆயுதப் படை நாளில் மின் ஆங் லைங் உரையாற்றினார். பொதுவாக ஆயுதப் படை நாள் அணிவகுப்பில் வெளிநாட்டினர் கலந்து கொள்வர். இந்த ஆண்டு ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் கலந்து கொண்டார்.

“ரஷ்யா ஓர் உண்மையான நட்பு நாடு” என மிங் தெரிவித்தார்.

எப்படித் தொடங்கியது இந்த கொந்தளிப்பு?

மியான்மர்

பட மூலாதாரம், Getty Images

கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சி மற்றும் மியான்மரின் அதிபர் வின் மின்ட் ஆகியோர் ராணுவத்தினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

அடுத்த ஓராண்டுக்கு ராணுவம் அவசர நிலையை அறிவித்திருக்கிறது. 2020ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, தன் ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது மியான்மர் ராணுவம்.

ஆங் சான் சூச்சிக்கு ஆதரவாக சாலைகளில் இறங்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பலரும் வேலைக்குச் செல்ல மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் கூட்டத்தைக் கலைக்க, மியான்மர் ராணுவம் துப்பாக்கியால் சுட்டு பலரைக் கொன்றுள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஐ.நா மனித உரிமைகள் சபை ஆணையர் மிஷெல் பசெலெட்டின் கணக்குப்படி, 1,700-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் மியான்மர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 29 பத்திரிகையாளர்களும் அடக்கம்.

மியான்மர் – சில குறிப்புகள்

மியான்மர், பர்மா என்று அறியப்படுகிறது. 1948-ம் ஆண்டு இந்த நாடு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. நவீன வரலாற்றில் பெரும்பாலான காலம் இந்த நாடு ராணுவ ஆட்சியில்தான் இருந்தது.

2010-ம் ஆண்டு வாக்கில் இந்தப் பிடி தளரத் தொடங்கியது. இதையடுத்து 2015-ம் ஆண்டு சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்பட்டு, ஆங் சான் சூச்சி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.

2017-ம் ஆண்டு காவலர்கள் மீது ரோஹிஞ்சாக்கள் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலுக்கு மிகக் கடுமையாக ராணுவம் எதிர்வினையாற்றியதால், சுமார் 5 லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்களை நாட்டை விட்டு அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »