Press "Enter" to skip to content

வீரர்களுக்கு பதிலாக ‘கில்லர் ரோபோக்கள்’ இனி போரிடுமா?

  • பிபிசி இந்தி குழு
  • புது டெல்லி

பட மூலாதாரம், Getty Images

இரானின் தலைநகர் டெஹ்ரான்.

விஞ்ஞானி மொஹ்சின் ஃபக்ரிசாதேவின் வாகன அணி, தலைநகரின் புறநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. இரானின் மிக மூத்த அணு விஞ்ஞானி அவர். கடுமையான பாதுகாப்பு அரணின் கீழ் அவர் இருந்தார்.

சிறிது நேரம் கழித்து ஃபக்ரிசாதேவின் தேர் மீது தாக்குதல் நடத்தப்பபட்டது. தோட்டாக்கள் சுடப்பட்டன. அவர் உயிரிழந்தார். இது சாதாரண தாக்குதல் அல்ல.

அங்கு தாக்குதல் நடத்தியவர் யாருமே இருக்கவில்லை என்று சம்பவ இடத்தில் இருந்த ஒரு மூத்த அதிகாரி கூறினார். காரில் இருந்த இயந்திர துப்பாக்கிகளிலிருந்து தோட்டாக்கள் சுடப்பட்டன, ஆனால் இயந்திர துப்பாக்கிகளை இயக்க அங்கு யாரும் இருக்கவில்லை. செயற்கை நுண்ணறிவு மூலம் இயந்திர துப்பாக்கி கட்டுப்படுத்தப்பட்டதாக மற்றொரு இரானிய அதிகாரி தெரிவித்தார்.

கணினி மூலமாக கட்டுப்படுத்தப்பட்ட இயந்திர துப்பாக்கி, ஹாலிவுட்டின் “கில்லர் ரோபோ” தொடர் திரைப்படவரிசையின் கதைக்களத்தின் ஒரு பகுதி போலத் தெரிகிறது. அதாவது, சிந்திக்கக்கூடிய மற்றும் இலக்கை குறிவைத்து சுடக்கூடிய ஒரு இயந்திரம்.

வீரர்களுக்கு பதிலாக 'கில்லர் ரோபோக்கள்' இனி போரிடுமா?

பட மூலாதாரம், HAMSHAHRIONLINE

ஆனால் அது சாத்தியமா? அப்படியானால், வரவிருக்கும் நாட்களில், போரில் கூட வீரர்களுக்கு பதிலாக ரோபோக்கள் சண்டையிடுமா என்று மற்றொரு கேள்வி எழுகிறது.

போரில் சண்டையிடும் ரோபோக்கள்

“எந்தவொரு மனிதனின் உதவியும் உத்தரவும் இல்லாமல் இலக்குகளை நிர்ணயிக்கும் மற்றும் அழிக்கும் திறனைக் கொண்ட ஒரு அமைப்பைப் பற்றி நாம் பேசுகிறோம்” என்று அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் ஹைதர் ரோஃப் கூறுகிறார்.

போரில் ரோபோக்களைப் பயன்படுத்தும்போது, நிபுணர்களின் நாவில் உள்ள சொல் ‘ சுய அதிகாரம்’ என்பதை இங்கே புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இயந்திரம் தனது சொந்த முடிவுகளை எடுக்கும் சக்தியை அளித்தல். இது குறித்து விவாதம் நடைபெற்றுவருகிறது. இந்த ஆயுதங்களின் நோக்கமும் விரிவானது. அவை முதன்மை நிலை ஆயுதங்களிலிருந்து டெர்மினேட்டர்கள் வரை வருகின்றன. அத்தகைய ஆயுதங்கள் இன்றும் உள்ளன என்று ஹைதர் கூறுகிறார்.

“நம்மிடம் கடல் சுரங்கங்கள், பலவிதமான தரை சுரங்கங்கள், இணைய தொழில்நுட்பம் மற்றும் இணைய ஆயுதங்கள் உள்ளன. அவை சுய அதிகாரம் கொண்டவை. பின்னர் இஸ்ரேலின் கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை ‘ஹைரோப்’ உள்ளது. ஏவப்பட்ட பின்னர் அது சிக்னல்களை அடிப்படையாகக் கொண்டு தாக்குதலை தீர்மானிக்கும் என்று சொல்லப்படுகிறது. ‘பேட்ரியாட்’ ஏவுகணையை தானியங்கி பயன்முறையில் நீங்கள் இயக்கமுடியும். “என்று அவர் மேலும் தெரிவித்தார்.

போரில் “கில்லர் ரோபோ” வை பயன்படுத்துவதற்கான யோசனையால் பலர் ஆச்சரியப்படலாம். ஆனால் உண்மை என்னவென்றால், அத்தகைய தொழில்நுட்பம் உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டு வருகிறது.

“சீனா தனது ராணுவத்தை வலுப்படுத்த விரும்புகிறது. தனது கடற்படைக் கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் தானியங்கி முறையில் செயல்படச்செய்கிறது. இஸ்ரேல், பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகள் போன்ற போன்ற தரை ஆயுதங்களை மேம்படுத்த முயல்கிறது. ரஷ்யாவும் தரை உபகரணங்களுக்கு நிறைய பணம் செலவழிக்கிறது. அமெரிக்காவின் ஆர்வம், விமானப்படை, ஏர்பேஸ் அமைப்புகள் முதல் ஏவுகணைகள் வரை எல்லா இடங்களிலும் உள்ளது. பிரிட்டனும் தனது விமானப்படை மற்றும் கடற்படையின் திறனை அதிகரிக்க விரும்புகிறது,” என்று ஹைதர் ரோஃப் கூறுகிறார்

நிபுணர்களின் கவலை

வீரர்களுக்கு பதிலாக 'கில்லர் ரோபோக்கள்' இனி போரிடுமா?

பட மூலாதாரம், Getty Images

முக்கியமான விஷயம் என்னவென்றால், தற்போது உருவாக்கப்பட்டு வரும் எல்லா ஆயுதங்களுமே, “கில்லர் ரோபோக்களாக” இருக்காது. ஆனால் சில ஆயுதங்கள் மற்றும் நாடுகளைப் பற்றி ஹைதர் கவலைப்படுவதாகத் தெரிகிறது.

“மேற்கத்திய நாடுகள் ஆபத்துக்களை குறைத்தே செயல்படுகின்றன. அவை சிஸ்டம்களை முழுமையாக சோதிக்கின்றன. ஆனால் ரஷ்யா விரைவாக தயாரிக்கப்பட்ட சாதனங்களை அதிக சோதனைகளை செய்யாமலேயே பயன்படுத்துகிறது. நான் அதைப் பற்றி கவலைப்படுகிறேன்.”என்று அவர் கூறுகிறார்.

சோதிக்கப்படாத சாதனங்களை முன்னரங்கப்பகுதியில் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது, நாசத்திற்கு அழைப்பு விடுப்பது போன்றது என்று ஹைதர் கூறுகிறார்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக இணை பேராசிரியர் டாம் சிம்சன் போரின் விளைவுகளைப் புரிந்துகொள்ள பல ஆண்டுகள் செலவிட்டார். அவர் ஐந்து ஆண்டுகள் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிந்தார். தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அவரது ஆர்வம் தொடர்ந்து உள்ளது.

போர் போன்ற ஆபத்தான இடங்களில் மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்களை நிறுத்துவதற்கான யோசனை பற்றி கருத்துத்தெரிவித்த அவர் அரசுகளின் தார்மீக நிலையை வலுப்படுத்துவதான வாதம், அதற்கு ஆதரவாக செய்யப்படுகிறது என்று கூறுகிறார். தங்கள் வீரர்களின் உயிரைக் காப்பாற்ற இதுபோன்ற அமைப்புகளை உருவாக்குவது அரசுகளின் பொறுப்பாகும். ஆனால் இந்த நுட்பத்தில் ஆபத்துகள் இருப்பதாக டாம் எச்சரிக்கிறார்.

இயந்திரம் தவறு செய்யலாம்!

வீரர்களுக்கு பதிலாக 'கில்லர் ரோபோக்கள்' இனி போரிடுமா?

பட மூலாதாரம், Getty Images

“தொழில்நுட்பம், தவறான முடிவுகளை எடுக்கக்கூடும் என்ற அச்சம் எப்போதுமே உள்ளது. யாருடைய உயிர் போகக்கூடாதோ, அவர்களின் உயிரை அது எடுக்கக்கூடும். இதைப் பற்றி கவலைப்படுவது சரியானதும் கூட. சிப்பாய் ஒரு மனிதனாக இருந்தால், தனது இலக்கு மற்றும் அப்பாவி மக்களை வேறுபடுத்துவதற்கான பொறுப்பு அவன் மீது இருக்கும். ஆனால் ஒரு இயந்திரம் அத்தகைய வித்தியாசத்தை எப்போதுமே வெற்றிகரமாக செய்யும் என்று சொல்லமுடியாது. இப்போது கேள்வி என்னவென்றால், இந்த ஆபத்தை நாம் எந்த அளவிற்கு எடுத்துக்கொள்ளமுடியும் என்பதுதான். ஆபத்துக்கான வாய்ப்பே இருக்கக்கூடாது என்று சிலர் சொல்வார்கள். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. மனித ராணுவம் போரிடும்போது சந்திக்கும் ஆபத்தைக்காட்டிலும் குறைவான ஆபத்து சூழல் நிலவினால்மட்டுமே இந்தத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது என் கருத்து.” என்று சிம்சன் தெரிவிக்கிறார்.

போரின் சில முனைகளில் அதிக ரிஸ்குகளை நாம் எடுக்கலாம் என்று டாம் கருதுகிறார். ஒரு போர் விமானத்தில், விமானியை நீங்கள் கற்பனை செய்துபாருங்கள். அவரிடம் 20 அல்லது 30 தானியங்கி அமைப்புகள் உள்ளன. அவர் வானத்தில் இருக்கும் இடத்தில், எதிரியைத் தவிர வேறு யாரும் இல்லை. அத்தகைய இடத்தில் தானியங்கி அமைப்பு எத்தனை சிறப்பான வெற்றியை பெறுகிறது என்பதை நீங்கள் பர்க்கமுடியும். இது பாதுகாப்பானது ஏனென்றால் அங்கு பொதுமக்கள் அதாவது சிவிலியன்கள் இல்லை,” என்கிறார் அவர்.

தானியங்கி ரோபோக்களை வரிசைப்படுத்துவதற்கு ஆதரவாக மற்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இது மிகவும் நடைமுறைக்கேற்றது. அதாவது, விளக்கிலிருந்து பூதம் வெளியே வந்துவிட்டது. நீங்கள் அத்தகைய ஆயுதங்களை உருவாக்கவில்லை என்றால் வேண்டாம். ஆனால் உங்கள் எதிரிகள் உருவாக்கத்தான் செய்வார்கள்,” என்று டாம் கூறுகிறார்.

திட்டமிடல் என்ன?

வீரர்களுக்கு பதிலாக 'கில்லர் ரோபோக்கள்' இனி போரிடுமா?

பட மூலாதாரம், Getty Images

“இதுபோன்ற ஆயுதங்கள் தடைசெய்யப்படவேண்டும் அல்லது சுய கட்டுப்பாடு வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்படும்போது, 20 ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் எப்படி இருக்கும் என்று கேள்வி கேட்கப்பட வேண்டும். இதுபோன்ற தானியங்கி முறையைக் கொண்ட சில நாடுகள் இருக்கும், ஆனால் தன்னைக் காத்துக் கொள்ளும் அத்தகைய திறன் நமது ராணுவத்திடம் இருக்காது. அந்த சூழலில், சுய கட்டுப்பாட்டுக்கான முடிவு தவறானது என்று அரசிடம் மக்கள் சொல்வார்கள் என்று நான் நினைக்கிறேன். அரசின் முதல் கடமை நாட்டைப் பாதுகாப்பதாகும். பொறுப்புள்ள அரசுகள் ‘இத்தகைய ஆயுதங்களை முதலில் பயன்படுத்துவதில்லை’ என்ற கொள்கையை வகுக்கலாம்,” என்று டாம் சிம்சன் தெரிவிக்கிறார்.

இது, 20 ஆம் நூற்றாண்டின் அணு ஆயுதப் போட்டியை உங்களுக்கு நினைவூட்டக்கூடும். ஆனால், ஆபத்தை எதிர்கொள்ள, அதே போன்ற ஆயுதத்தை ஏன் உருவாக்க வேண்டும் என்று மற்றொரு கேள்வி கேட்கப்படுகிறது.

“நானோ அல்லது மைக்ரோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஒரு அமைப்பைப் பற்றி பேசலாம். ஒரு பகுதியில் 20 முதல் 50 ஆயிரம் சாதனங்களை வரிசைப்படுத்துகிறோம். ஒரு நபர் அல்லது மனிதர்கள் குழுவால் இதை எதிர்த்து சண்டையிட முடியாது. இதை எதிர்க்க உங்களிடம் இதே போன்ற அமைப்பு இல்லாவிட்டாலும்கூட, ஒருவித தானியங்கி அமைப்பு கண்டிப்பாகத் தேவைப்படும்.” என்று இதற்கு டாம் சிம்சன் பதிலளிக்கிறார்.

தடை செய்யக்கோரிக்கை

வீரர்களுக்கு பதிலாக 'கில்லர் ரோபோக்கள்' இனி போரிடுமா?

பட மூலாதாரம், Getty Images

அத்தகைய அமைப்பின் மூலம்தான் ஆபத்தை எதிர்கொள்ள முடியும் என்று டாம் கூறுகிறார். இருப்பினும், மென்பொருள் பொறியாளர் லோரா நோலன் வேறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளார்.

“எதிர்காலத்தில் ரோபோக்களுக்கு இடையே போர் இருக்கும் என்று சிலர் நினைக்கிறார்கள். ரோபோ வீரர்கள் சண்டையிட்டால், அத்தகைய போரில் ரத்தம் சிந்தப்படாது. இது ஒரு சிறந்த கற்பனை என்று நான் நினைக்கிறேன். இந்த இயந்திரங்கள் பெரும்பாலான சூழல்களில் மனிதர்களை எதிர்த்து சண்டையிடவே பயன்படுத்தப்படும். அது மிகவும் வேதனையான சூழ்நிலையாக இருக்கும், “என்று அவர் கூறுகிறார்.

லோரா நோலன் தொழில்நுட்ப நிறுவனமான ‘கூகுளில்’ பணிபுரிகிறார். 2017 ஆம் ஆண்டில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒரு திட்டத்தில் பணிபுரியுமாறு அவரிடம் கேட்கப்பட்டது. ட்ரோன்களில் இருந்து எடுக்கப்பட்ட காணொளி காட்சிகளை பகுப்பாய்வு செய்யும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்குவது இந்த திட்டத்தில் அடங்கும். இது ஆயுதங்களை உருவாக்கும் திட்டம் அல்ல.

ஆனால் லோரா அதைப் பற்றி கவலைப்பட்டார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதோ ஒரு பகுதி, போரின் பாதையில் செல்கிறது என்று அவர் கருத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் ராஜினாமா செய்தார். இதற்குப் பிறகு, அவர் “கில்லர் ரோபோவை” தடை செய்யும் பிரச்சாரத்தில் சேர்ந்தார். கணினிகள் மற்றும் மனிதர்கள் வெவ்வேறு சிந்தனை வழிகளைக் கொண்டுள்ளனர் என்பதே அத்தகைய ஆயுதங்களில் இருக்கும் முக்கியமான சிக்கல் என்று அவர் கருதுகிறார். .

“கணினிகள் கணக்கீடுகளை செய்கின்றன, அதே நேரத்தில் மனிதர்களிடம் ஆராய்ந்து முடிவுகளை எடுக்கும் திறன் உள்ளது. கணக்கீடுகள் திடமான தரவை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் ஆராய்ந்து முடிவெடுக்கும்போது பல விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. இதை விளக்க இந்த உதாரணம் சரியாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட வழியில் மட்டுமே உறுதியாக சட்டத்தை செயல்படுத்தும் ஒரு ரோபோ நீதிபதியின் முன்னிலையில் ஆஜராக நம்மில் பலரும் கண்டிப்பாக விரும்பமாட்டார்கள்,”என்று லாரா கூறுகிறார்.

தொழில்நுட்ப வரம்புகள்

வீரர்களுக்கு பதிலாக 'கில்லர் ரோபோக்கள்' இனி போரிடுமா?

பட மூலாதாரம், Press Association

பிரச்சனை என்னவென்றால், போர்க்களத்திற்கு அருகில் சிவிலியன் பகுதி இருக்கும்பட்சத்தில், அது மிகவும் சிக்கலான பகுதியாக கருதப்படுகிறது. சரியாக ஆய்வுசெய்து, அதன் பின்னரே மிகவும் கடினமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

இயந்திரத்தின் மென்பொருள் எந்த நிலைமைகளை சமாளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளனவோ, அவைகளிடமிருந்து மாறுபட்ட சூழல்கள் ஏற்படும்பட்சத்தில், நிலைமை மிகவும் நிச்சயமற்றதாக இருக்கும் என்று லாரா கூறுகிறார். அதேசமயம், நிலைமைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு மனிதர்கள் முடிவெடுக்கமுடியும். டிரைவர் இல்லாத கார்களின் தொழில்நுட்பத்திலும் இதே போன்ற பிரச்சனை காணப்படுவதாக அவர் கூறுகிறார்.

2018 ஆம் ஆண்டில் அமெரிக்காவில், ஊபர் தானியங்கி கார், சோதனை ஓட்டத்தின்போது, சைக்கிளில் சென்ற ஒரு பெண் மீது மோதியது. இந்த விபத்தில் அந்தப்பெண் உயிரிழந்தார். அந்தப்பெண் மற்றும் அவரது சைக்கிளை, தேர் மீது மோதக்கூடிய ஆபத்தாக காரின் அமைப்பால் அடையாளம் காண முடியவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது. சுய அதிகார ஆயுதங்கள் விஷயத்தில் நிலைமை மேலும் சிக்கலானதாக இருக்கலாம் என்று லாரா வாதிடுகிறார். ஏனெனில் போர் என்பது மிகவும் சிக்கலான சூழ்நிலை. பொறுப்பேற்றல் தொடர்பான கேள்வியும் இங்கே வருகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

“சுய அதிகார ஆயுதம் காரணமாக போர்க்குற்றம் என வகைப்படுத்தப்பட்ட ஒன்று நிகழ்ந்தால்,அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? ஆயுதத்தை பயன்படுத்த உத்தரவிட்ட தளபதி பொறுப்பேற்பாரா? ஒருவேளை இருக்காது. ஏனென்றால் பயிற்சியின்போது ஆயுதம் அப்படி எதையும் செய்திருக்காது. இப்படி நடக்கும் என்பதை பொறியாளர்கள் கூட கற்பனை செய்திருக்க மாட்டார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், பொறியாளர்களின் மீது பொறுப்பை சுமத்துவது கடினமாக இருக்கும்.”

இந்த ஆயுதங்கள் கட்டாயம் தடை செய்யப்பட வேண்டும் என்று தான் கருதுவதாக லாரா கூறுகிறார்.

ஆபத்தோ ஆபத்து

வீரர்களுக்கு பதிலாக 'கில்லர் ரோபோக்கள்' இனி போரிடுமா?

மறுபுறம், செண்டர் ஃபார் நியூ அமெரிக்கன் பாதுகாப்புயின் தொழில்நுட்ப இயக்குனர் பால் ஷோரி, அத்தகைய தொழில்நுட்பம் தொடர்பான மற்றொரு தீவிரமான கேள்வியை எழுப்புகிறார். “வளர்ச்சியுடன் கூடவே தொழில்நுட்பம் நம்மை வேறொரு பாதையில் கொண்டு செல்கிறது. அங்கு வாழ்க்கை மற்றும் இறப்பு தொடர்பான முடிவுகள் இயந்திரங்களிடம் ஒப்படைக்கப்படும். இது மனிதகுலத்தின் முன் இருக்கும்ஒரு தீவிரமான கேள்வி என்று நான் நினைக்கிறேன்.”என்று அவர் சொல்கிறார்.

பால், பென்டகனில் கொள்கை ஆய்வாளராக இருந்துள்ளார். ‘ Army of none, Autonomous weapons and the future of war’ என்ற புத்தகத்தையும் அவர் எழுதியுள்ளார். எதிர்கால போரில் வாழ்க்கை மற்றும் இறப்பு தொடர்பான முடிவுகள் ரோபோவால் எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, அத்தகைய இயந்திரங்கள் இப்போதும் உள்ளன என்று அவர் கூறுகிறார்.

ஏற்கனவே செய்த ப்ரோக்ராமின்படி ட்ரோன்கள் தாங்களாகவே பறக்கின்றன என்று பால் கூறுகிறார். போருடன் தொடர்புடைய திட்டமிடல் மற்றும் புவிசார் அரசியல் அபாயங்களைப் புரிந்து கொள்ளும் அளவுற்கு ரோபோக்களுக்கு ஒருபோதும் போதுமான புத்திசாலித்தனம் இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் போர் விமானங்கள் சிரியாவின் வான் எல்லையில் பறந்தவாறே, தரையில் பயிற்சி செய்துகொண்டிருந்த படையினருக்கு உதவுவதை சமீபத்தில் பார்த்தோம். கடந்த ஆண்டு இந்திய சீன படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் போன்ற ராணுவ தகராறுகளில், சுய அதிகார ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால், அது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அத்தகைய ஆயுதங்கள் தவறான இடத்தை குறிவைத்தால், மோதல் மேலும் மோசமடையக்கூடும். “என்கிறார் பால்.

பங்குச் சந்தையில் சூப்பர் மனிதனின் வேகத்தில், பங்குகளை வாங்கவும் விற்கவும் கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் பால் கூறுகிறார். எல்லோரும் அதன் அபாயங்களையும் பார்த்திருக்கிறார்கள். ‘ஃபிளாஷ் க்ராஷ்’ அதாவது திடீரென விரைவான வீழ்ச்சி, ஏற்பட்டால் யாரும் தலையிட முடியாது. ஏனென்றால் இயந்திரங்கள் மில்லி விநாடிகளுக்கு ஒப்பான நேரத்தில் இதைச் செய்கின்றன. போர் நடந்தாலும் இதேபோல நடக்கலாம். கண்ணிமைக்கும் நேரத்தில், இரண்டு தரப்பினரின் இயந்திரங்களுக்கு இடையில் துப்பாக்கிச் சூடு நடக்கலாம். எதிரி உங்கள் ஆயுதங்களை உங்களை நோக்கியே திருப்பிவிட்டால் சூழ்நிலை இன்னும் மோசமாகிவிடும்.

வீரர்களுக்கு பதிலாக 'கில்லர் ரோபோக்கள்' இனி போரிடுமா?

“இது கண்டிப்பாக நடக்கலாம். எதையும் ஹேக் செய்யலாம். ராணுவம் எல்லோரையும் போலவே பாதுகாப்பற்ற கணினிகளையும் பயன்படுத்துகிறது. தாமாக ஓடும் கார்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. தொலைவில் உட்கார்ந்திருக்கும்போது கூட மின்ஊடுருவாளர்கள், ஸ்டீயரிங் மற்றும் பிரேக்குகளை கட்டுப்படுத்த முடியும் என்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் ஒரு மின்ஊடுருவாளர் ஆயுதங்களைக் கட்டுப்படுத்தினால், சேதம் மிக அதிகமாக இருக்கும்.” என்கிறார் அவர்.

‘கில்லர் ரோபோக்கள்’ தொடர்பான கேள்விகள் இன்னும் உள்ளன என்று பால் கூறுகிறார். இயந்திரங்கள் சரியான இடத்தை குறிவைத்தாலும், மனித உயிரிழப்புக்கு, எந்தவொரு மனிதனும் பொறுப்பாக மாட்டான். போரின் சுமையை யாராவது தங்கள் தோள்களில் சுமக்கவில்லை என்றால், நாம் சமூகத்திற்கு என்ன சொல்வோம்? மனிதகுலத்திற்கு நாம் எவ்வாறு பதிலளிப்போம்? என்று பால் கேள்வி எழுப்புகிறார்.

இன்று போரில் பங்கேற்கும் இயந்திரங்கள் தொடர்ந்து ஒரு பங்கு வகிக்கும் என்பது உறுதி. ஆனால் தொழில்நுட்பத்தின் வரம்புகளை நாம் புரிந்து கொள்ள முடியுமா? முடிவுகளை எடுக்க இயந்திரங்களுக்கு எத்தனை உரிமைகள் வழங்கப்படும்? எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற கேள்விகளுக்கான பதில் என்னவென்றால், தானியங்கி ரோபோக்களுக்கு நாம் அளிக்கும் அதிகாரங்கள்தான் அவற்றிடம் இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »