Press "Enter" to skip to content

சீன போர் விமானங்களை விரட்ட புறப்பட்ட மலேசிய போர் விமானங்கள் – திகிலூட்டும் பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images

தங்கள் நாட்டு வான் பகுதிக்குள் சீன விமானப்படை விமானங்கள் அத்துமீறி ஊடுருவியதாக மலேசியா அரசு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் சீன தூதரை அழைத்து விளக்கம் கேட்கப்படும் என்றும் மலேசிய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

தென் சீன கடல் பகுதியில் சீன விமானப்படையினரின் சந்தேகத்துக்குரிய நடமாட்டம் தொடர்பாக மலேசிய விமானப்படை எச்சரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை சீன விமானப்படையின் 16 ஜெட் விமானங்கள் மலேசிய நாட்டின் கிழக்கு சராவாக் மாகாண வான் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது. அங்கு சில நிமிடங்கள் வட்டமிட்ட சீன விமானங்கள் பின்னர் திரும்பிச் சென்றன.

இந்த செயல்பாட்டை தங்கள் நாட்டின் தேசிய இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்று மலேசியா கண்டித்துள்ளது.

ஆனால், சர்வதேச சட்டப்படியே தமது படையினர் செயல்பட்டதாக சீனா கூறியுள்ளது.

தென் சீன கடல் பகுதியில் உள்ள இடங்களுக்கு சீனா உரிமை கோருவதை மலேசியா, ஃபிலிப்பைன்ஸ், ப்ரூனை, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகள் எதிர்க்கின்றன. பல தசாப்தங்களாக இந்த பிரச்னை உள்ளபோதும், சமீபத்திய ஆண்டுகளில்தான் சீனாவின் செயல்பாடுகளால் அந்த கடல் பகுதியில் பதற்றம் தீவிரமாகியிருக்கிறது.

தென் சீன கடல் பகுதியில் நைன் டேஷ் லைன் என்ற பகுதிக்கு உரிமை கோரும் சீனா, அங்கு ஏற்கெனவே கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அமைதி நோக்கங்களுக்காகவே அந்த இடங்களில் தமது முகாம்கள் நிறுவப்பட்டுள்ளதாக சீனா கோரினாலும், அதன் செயல்பாடு சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என்று அந்த கடல் பகுதியை ஒட்டியுள்ள நாடுகளின் அரசாங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

சீன போர் விமானங்களை விரட்ட புறப்பட்ட மலேசிய போர் விமானங்கள் - திகிலூட்டும் பின்னணி என்ன?

மலேசிய விமானப்படை தகவலின்படி, சராவாக் மாகாணத்தின் வான் பரப்பில் தரையில் இருந்து 27 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த சீன விமானங்கள், 110 கி.மீ தூரத்துக்கு மலேசிய எல்லைக்குள் வந்து போயுள்ளன. அவற்றை இடைமறித்துப் பேசுவதற்கு மலேசிய விமானப்படை மேற்கொண்ட முயற்சிகளுக்கு அவை செவிசாய்க்கவில்லை என்று மலேசிய விமானப்படை கூறியுள்ளது.

இதையடுத்து லபுவான் விமானப்படை தளத்தில் உள்ள மலேசிய போர் விமானங்கள், உடனடியாக விண்ணில் சீறிப்பாய்ந்து சீன விமானங்களை தேடி புறப்பட்டன. ஆனால், அதற்குள் அந்த விமானங்கள் திரும்பிச் சென்றன.

இந்த விவகாரம் தொடர்பாக சீன அரசிடம் புகார் செய்யப்படும் என்று மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிஷம்முதின் ஹுசேன் தெரிவித்துள்ளார். மலேசிய வான் பரப்பு மற்றும் தேச இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சீன விமானப்படையின் செயல் உள்ளது என்று கண்டிப்பதற்காக சீன தூதரும் அழைக்கப்பட்டிருப்பதாக மலேசிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் எந்தவொரு நாடுகளுடனும் நட்புறவாக இருக்கிறோம் என்பதற்காக எங்களுடைய தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்வோம் என்று கருதி விடக்கூடாது,” என்று அமைச்சர் ஹிஷாம்முதின் அறிக்கையொன்றில் கூறியுள்ளார்.

இதேவேளை, சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களுக்கு வரையறுக்கப்பட்ட வான் பகுதியிலேயே சீன விமானப்படையினர் பயிற்சி செய்ததாக கூறியுள்ளது.

இந்த பயிற்சின்போது சர்வதேச சட்டத்தின்படியே சீன விமானப்படை செயல்பட்டுள்ளது. அது எந்தவொரு நாட்டின் எல்லைக்குள்ளும் நுழையவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளாக தென் சீன கடல் பகுதியில் வாழ்விட வசதியற்ற பாரசெல் தீவுகள் மற்றும் ஸ்ப்ராட்லேஸ் தீவுகளில் சீனாவின் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக அதன் அண்டை நாடுகள் கூறி வருகின்றன. அந்த தீவுகளில் தனக்கே உரிமை உண்டு என்று கோரும் சீனா, பல நூற்றாண்டுகளாக அவற்றுடன் தமது நாட்டுக்கு தொடர்பு உள்ளதாகவும் கூறி வருகிறது.

கடந்த மார்ச் மாதம், தமது நாட்டு கடல் பகுதிக்குள் சுமார் 200 சீன மீனவ படகுகள் நுழைந்து மீன்பிடித்ததாக ஃபிலிப்பைன்ஸ் அரசு முறையிட்டது. அந்த படகுகளின் அருகே சென்று பார்த்தபோது அவை மீனவ படகுகள் போல தோன்றவில்லை என்றும் அவை சீன கடல்சார் ஆயுதம் தாங்கிய படையினருடையது போல இருந்தாதகவும் ஃபிலிப்பைன்ஸ் தெரிவித்தது. ஆனால், அந்த கருத்தை சீனா கண்டுகொள்ளவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »