Press "Enter" to skip to content

ஆஸ்திரேலியா கிறிஸ்துமஸ் தீவில் உள்ள அகதி குடும்பத்தை விடுவிக்குமா அரசு? அதிகரிக்கும் அழுத்தம்

பட மூலாதாரம், HOME TO BILO

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழ் அகதி குடும்பத்தை விடுவிக்க அழுத்தம் அதிகரித்து வருகிறது. அந்த தம்பதியின் பிள்ளைகளில் ஒருவரான மூன்று வயது தாருணிகா உடல் சுகவீனம் அடைந்ததால் பிரதான நிலப்பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

காய்ச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அந்த சிறுமி பெர்த் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை அளவீடுகள் தற்போது நிலையாக உள்ளன என்று அகதி குடும்பத்துக்காக நீதிமன்றத்தில் வழக்காடும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், 10 நாட்களாக நோய்வாய்பட்ட சிறுமிக்கு உரிய நேரத்தில் போதிய சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்காக அவர்கள் அரசின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளனர்.

தாருணிகாவுக்கு உடல்நிலை மோசமானதால் முதலில் அவரை கிறிஸ்துமஸ் தீவில் உள்ள மருத்துவமனையிலேயே அதிகாரிகள் சேர்த்தனர். பின்னர் அவர் பெர்த் நகர மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அவரது தாய் பிரியா நடேசலிங்கம், “மகளுக்கு உடல்நிலை மோசமானது முதல் பாரசிட்டமால் மாத்திரை தாருங்கள் அல்லது மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கோரியதாக கூறினார். கடைசியில் மருத்துவர்கள் பாரசிட்டமால் மாத்திரையும் ஐபுப்ரோஃபென் மாத்திரையும் கொடுத்ததாக தெரிவித்தார்.

கிறிஸ்துமஸ் தீவு

தீவில் உள்ள குடும்பத்துக்கு போதுமான பராமரிப்பு வழங்கப்படுவதாக ஆஸ்திரேலியா அரசு அதிகாரிகள் பிபிசியிடம் கூறினர். தீவில் இருந்தபோதே தாருணிகாவுக்கு போதிய சிகிச்சை மற்றஉம் மருத்துவ ஆலோசனைகள் தரப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

“தனி நபர்களின் மருத்துவ பராமரிப்பு விவகாரத்தில் அவர்களுக்கு போதிய சிகிச்சை தரப்படவில்லை அல்லது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய எல்லை படை முற்றிலுமாக நிராகரிக்கிறது,” என்று அதன் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

அகதிகளின் சட்டப்போராட்டம்

இந்த நிலையில், மூன்று வயது பெண் குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது மற்றும் அதன் குடும்பம் அடைக்கலம் கோரிய வழக்கு தொடர்பான விவகாரம் பொதுமக்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்திருக்கிறது.

தாருணிகாவின் பெற்றோர் இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரி வந்த தமிழ் அகதிகள். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு படகு மூலம் தப்பி வந்தார்கள். குவீன்ஸ்லேண்ட் பகுதியில் உள்ள பிலோவீலா பகுதியில் இவர்கள் குடியேறினார்கள். அங்குதான் நடேஸ் முருகப்பன், பிரியா தம்பதிக்கு கோபிகா (6), தாருணிகா (3) ஆகியோர் பிறந்தனர்.

எனினும், இந்த குடும்பம் பல்வேறு நீதிமன்றங்களில் இவர்களுக்காக சட்டப்போராட்டம் நடந்தது. கடைசியில் இந்த குடும்பம் கிறிஸ்துமஸ் தீவில் 2019ஆம் ஆண்டில் அடைக்கப்பட்டனர். அங்குதான் அனுமதியின்றி ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சமீபத்தில் சுகவீனம் அடைந்த தாருணிகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதால் அவருடன் அவரது தாய் பிரியா இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், தாருணிகாவின் தந்தை நடேஸும் சகோதரி கோபிகாவும் கிறிஸ்துமஸ் தீவிலேயே இருக்க நிர்பந்திக்கப்ட்டார்கள்.

அடைக்கலம் தேடி வந்த அகதி குடும்பம் இப்படி கஷ்டப்பட வேண்டுமா என்ற குரலை இவர்களுக்காக வாதிடும் செயல்பாட்டாளர்கள் முழங்க, இந்த விவகாரம் தற்போது ஆஸ்திரேலியா முழுவதுமாக பெரிதாகியிருக்கிறது. இந்த குடும்பத்தை கிறிஸ்துமஸ் தீவில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று எதிர்கட்சியினரும் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் கோருவோருக்கு விசா வழங்குவதற்கான அதிகாரம் உள்துறை அமைச்சர் கெரென் ஆண்ட்ரூஸிடம் உள்ளது.

அந்த துறையின் செய்தித்தொடர்பாளர் கிறிஸ்டினா கெனியல்லியும், இந்த குடும்பம் தடுப்பு முகாமில் இருப்பதை விட அவர்களின் சமூகம் வாழும் பில்லோவீலாவிலேயே இருப்பதே சரி என்று கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், நடேஸ், பிரியா தம்பதி மற்றும் அவர்களின் குழந்தைகளை நியூஸிலாந்துக்கோ அமெரிக்காவுக்கோ மீள்குடியேற்றம் செய்யும் வாய்ப்பை பரிசீலித்து வருவதாக ஆஸ்திரேலிய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட குடும்பத்தை அரசு தரப்பு தொடர்பு கொள்ளவில்லை என்று அவர்களின் வழக்கறிஞர் கெரினா ஃபோர்ட் தெரிவித்தார். இருந்தபோதும், உடனடி நடவடிக்கையாக அந்த குடும்பத்தை குவீனஸ்லேண்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர்களின் ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.

“பில்லோவீலாவிலேயே சிறப்பான மீள்குடியேற்ற வாய்ப்பு உள்ளது. எனவே அமைச்சர் கெரென் ஆண்ட்ரூஸ் தமது அதிகாரத்தை பயன்படுத்தி நமது நண்பர்கள் தாங்கள் பாதுகாப்பாகவும் நேசிக்கும் இடத்திலும் இருக்க உதவ வேண்டும்,” என்று #HomeToBilo என்ற வலையொட்டு (ஹேஷ்டேக்)குடன் இந்த தமிழ் குடும்பத்தின் பாதுகாப்பான மீள் குடியேற்றத்துக்காக இணையப் பயனாளர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் கடுமையான கொள்கை

கிறிஸ்துமஸ் தீவு

பட மூலாதாரம், HOMETOBILO CAMPAIGN

ஆஸ்திரேலியாவில் கடுமையான அகதிகள் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி படகு மூலம் நாட்டுக்குள் வர முற்படுவோரை அகதியாக கருதி அடைக்கலம் வழங்குவதை அந்நாட்டு அரசின் விதிகள் அனுமதிப்பதில்லை.

மேலும், படகு மூலம் ஒரு நாட்டில் இருந்து மக்கள் கடத்தப்பட்டு வரும் வழக்கத்தை நிறுத்தவே இந்த கொள்கை கடுமையாக கடைப்பிடிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு கூறுகிறது. ஆனால், அரசின் இந்த போக்கு, அகதிகள் உரிமைகளை மீறும் வகையில் இருப்பதாக மனித உரிமைகள் குழுக்கள் விமர்சித்து வருகின்றன.

ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்து அகதியாக தஞ்சம் கோருவோரை பிரதான நிலப்பகுதிக்குள் சேர்க்காமல் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கும் திட்டத்தை 2013இல் ஆஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், அப்போதே அடைக்கலம் கோரி ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். பிரதான நிலப்பகுதி நீதிமன்றங்களிலும் அகதிகள் விவகாரங்களை கவனிக்கும் துறைகளிலும் இவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் மனுக்கள் ஆண்டுக்கணக்கில் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில் நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கையுடன் இன்னும் அந்த தீவிலேயே சில அகதிகள் காத்திருக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »