Press "Enter" to skip to content

வெள்ளை காண்டாமிருகத்தின் காதல் பயணம்: தைவானில் இருந்து ஜோடி தேடி ஜப்பான் சென்றது

பட மூலாதாரம், Getty Images

காதலிப்பதற்காகவே தைவானில் இருந்து ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ளது எம்மா என்கிற வெள்ளை காண்டாமிருகம்.

5 வயது எம்மா ஜப்பான் நாட்டின் டொபு உயிரியல் பூங்காவில் உள்ள மொரான் என்கிற 10 வயது ஆண் காண்டாமிருகத்துடன் ஜோடி சேர்கிறது.

ஜப்பான் அனுப்புவதற்கு ஆலோசிக்கப்பட்ட 23 காண்டாமிருகங்களில் இருந்து எம்மா தேர்வு செய்யப்பட்டதற்குக் காரணம் அதன் மென்மையான குணம்தான். மிக அரிதாகவே அது சண்டையில் இறங்குகிறது என ஊழியர்கள் கூறுகிறார்கள்.

ஆசியாவில் பிடித்து வளர்க்கப்படும் வெள்ளை காண்டாமிருகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஒரு திட்டத்தில்தான் எம்மா ஜப்பான் உயிரியல் பூங்காவில் தங்குகிறது.

வேர்ல்ட் வைட் ஃபண்ட் ஃபார் நேச்சர் நிறுவனம் இந்த வெள்ளை காண்டாமிருகத்தை கிட்டத்தட்ட ஆபத்துக்கு உள்ளாகியிருக்கும் விலங்கினம் என்று வகைப்படுத்தியிருக்கிறது. காட்டில் இந்த வகை காண்டாமிருகம் சுமார் 18 ஆயிரம்தான் எஞ்சியிருக்கிறது என்கிறது அந்த அமைப்பு.

தைவானில் இருக்கும் லியோஃபூ சஃபாரி பூங்காவில் இருந்து 16 மணி நேரம் பயணம் செய்து ஜப்பானில் இருக்கும் உயிரியல் பூங்காவுக்கு வந்து சேர்ந்தது எம்மா.

“கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சிக்கலால் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு, தெற்கத்திய வெள்ளை காண்டாமிருகமான எம்மா எங்கள் உயிரியல் பூங்காவுக்கு ஜூன் 8-ம் தேதி மாலை வந்து சேர்ந்தது” என்று சைதமா டொபு உயிரியல் பூங்கா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“எம்மாவை கொண்டுவந்த பெட்டகத்தை அது உறங்கப்போகும் அறைக்கு முன்பாக வைத்து மெதுவாகத் திறந்தோம். சிறிதும் தயக்கம் காட்டாமல் நேராக தன் உறங்கும் அறைக்கு சென்றுவிட்டது எம்மா,” என அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

முதலில் எம்மா மார்ச் மாதமே ஜப்பான் வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸால் மனிதர்களின் பயணத் திட்டம் மாறுவதைப் போலவே எம்மாவின் பயணத்திட்டமும் மாற்றத்துக்கு உள்ளானது. ஆனால், எப்படி இருந்தாலும் எம்மாவின் பயணத் திட்டம் தாமதமாகித்தான் இருக்கும். ஏனென்றால், வா… இல்லை என்பது போன்ற ஜப்பானிய சொற்களை எம்மாவுக்கு அதன் பராமரிப்பாளர்கள் கற்பிக்கவேண்டி இருந்ததால் இந்த தாமதம் ஏற்பட்டிருக்கும்.

ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்த காரணத்தாலும் எம்மாவை ஜப்பான் அனுப்பிவைப்பது எளிதான செயலாக இருந்ததாக லியோஃபூ பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.

வெள்ளை காண்டாமிருகம் அழிந்து வரும் நிலையில் உள்ள விலங்கு. தென்னாப்பிரிக்கக் காடுகளில் இந்த வகை காண்டாமிருகம் வெறும் 18 ஆயிரமே மிஞ்சியிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

தெற்கத்திய வெள்ளை காண்டாமிருக கூட்டங்களின் எண்ணிக்கை வலு அதிகரிப்பதற்கு, உயிரியல் பூங்காவில் வைத்து விலங்குகளின் இனப்பெருக்கத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள் முக்கியக் காரணமாக இருந்துள்ளன.

ஆனால், வடக்கத்திய வகை வெள்ளை காண்டாமிருகங்களை இப்படிப் பெருக்குவது சாத்தியமாக இல்லை. அந்த வகையில் இரண்டே காண்டாமிருகங்கள்தான் எஞ்சி உள்ளன. இரண்டுமே பெண் பால். எனவே, இந்த இனத்தைக் காப்பாற்றுவதற்கு விஞ்ஞானிகள் புதுமையான முயற்சிகள் எதையும் மேற்கொள்ளாவிட்டால், இந்த இனம் அழிந்தே போகும்.

எல்லா காண்டாமிருக இனங்களும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தல் வேட்டைதான்.

ஆண்மை பெருக்கத்துக்கும், புற்றுநோய் சிகிச்சைக்கும் பயன்படுவதாகக் கூறி மோசடிக்காரரர்கள் காண்டாமிருகத்தின் கொம்பை கொள்ளை விலைக்கு விற்கிறார்கள். இதுவே காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட முக்கியக் காரணமாக இருக்கிறது.

நகங்களையும், மயிரையும்போல காண்டாமிருகத்தின் கொம்பும் கேரட்டின் என்ற பொருளால் ஆனதுதான். இவை புற்றுநோய் சிகிச்சையிலோ, ஆண்மை ஊக்கியாகவோ உண்மையாகவே பலன் பலன் தரும் என்று கூறுவதற்கு எந்த அறிவியல்ரீதியான நிரூபணமும் இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »