Press "Enter" to skip to content

“தென்னாப்பிரிக்க கலவரங்கள் திட்டமிடப்பட்டவை” அதிபர் ரமபோசா – காவல் துறை பாதுகாப்போடு கொண்டு செல்லப்படும் உணவுகள்

  • சிங்காய் நயோகா
  • பிபிசி செய்திகள், டர்பன்

பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES

தென் ஆப்பிரிக்காவில் நடந்த வன்முறைகள் திட்டமிடப்பட்டவை என தென் ஆப்பிரிக்காவின் அதிபர் சிரில் ரமபோசா கூறியுள்ளார். இது தென் ஆப்பிரிக்காவின் ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் கூறியுள்ளார் ரமபோசா.

முன்னாள் அதிபர் ஜேக்கப் சூமாவை சிறையில் அடைப்பதைத் தொடர்ந்து மிகப் பெரிய கலவரங்கள் மூண்டன. இந்த கலவரத்தால் இதுவரை சுமார் 212 பேர் உயிரிழந்து இருப்பதாக அரசாங்கத் தரப்பு கூறியுள்ளது.

கடந்த பல நாட்களாக வழிப்பறிக் கொள்ளைகள் நடந்து வருகின்றன. இது பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. எனவே தற்போது உணவு விநியோகம் காவலர்களின் பாதுகாப்போடு நடைபெற்று வருகிறது.

க்வாசுலு நடல் பகுதியில் குறைந்தபட்சமாக 800 சில்லறை வணிகக் கடைகளில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. என அப்பிராந்தியத்தின் மேயர் கூறியுள்ளார்.

“இந்த கலவரங்கள் மற்றும் கொள்ளை சம்பவங்கள் தூண்டப்பட்டவை என்பது தெளிவாகிறது. இந்த கலவரங்களை திட்டமிட்டவர்கள் மற்றும் ஒருங்கிணைத்தவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்” என தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா க்வாசுலு நடல் பகுதிக்கு வந்த போது கூறினார்.

இந்த க்வாசுலு நடல் மாகாணம்தான் முன்னாள் அதிபர் ஜேக்கப் சூமாவின் மாகாணம், மேலும் நடந்த கலவரங்கள் மற்றும் வன்முறைகளின் மையப் புள்ளியும் இப்பிராந்தியம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்காவின் ஜனநாயகத்தை கைப்பற்ற நடந்த முயற்சிகள் தான் இந்த கலவரங்கள். கலவரத்தை தூண்டியவர்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என தன் ஆதரவாளர்கள் முன் கூறினார் அதிபர் ரமபோசா, ஆனால் அது குறித்து விரிவான விவரங்களை அவர் வெளியிடவில்லை.

“நாங்கள் அவர்களைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்” என கூறினார்.

சிரில் ரமபோசா, தென்னாப்பிரிக அதிபர்

பட மூலாதாரம், Getty Images

க்வாசுலு நடல் பிராந்தியத்தில் உணவுக்காக மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். சில சமயங்களில் மிகச் சில உணவுப் பொருட்களைப் பெற அதிகாலையில் இருந்து வரிசைகட்டி நிற்கிறார்கள் மக்கள்.

தங்கள் குடும்பத்துக்கு உணவளிப்பது தொடர்பாகவும், தங்கள் குழந்தைகளுக்கு தேவையான உனவுகளைப் பெறுவதும், செல்ல பிராணிகளுக்கு உணவைத் தேடுவதும் அவர்களுக்கு கவலையளிப்பதாக உணவுக்காக வரிசையில் நின்று கொண்டிருந்த மக்கள் பிபிசியிடம் கூறினர்.

வன்முறையால் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன அல்லது கலவரக்காரர்களால் மறித்து தடை செய்யப்பட்டு இருக்கின்றன. அரசோ உணவு விநியோகம் பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய விரும்புகிறது என்கிறார் பொறுப்பு அமைச்சர் கும்புட்சோ ஷவ்ஹேனி.

கலவரம் நடக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கும் இடங்களில் எல்லாம் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். காவல் துறையினரோ ஆக்சிஜன், மருந்து பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல உதவிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் அவ்வமைச்சர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்பட்ட அதிபர் ரமபோசாவின் உரையில், உணவுத் தட்டுப்பாடோ அல்லது அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகளோ இல்லை எனவும், எனவே மக்கள் பயத்தில் அதிக பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

இந்த கலவரத்துடன் தொடர்புடைய 2,500-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்திருப்பதாகவும், தென்னாப்பிரிக்கர்கள் தற்போது ஒன்றாக வேண்டும் எனவும் கூறியுள்ளார் ரமபோசா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »