Press "Enter" to skip to content

ஈலோன் மஸ்க்கிற்கு எதிராக ‘விஷ மாத்திரை’ முறையை பயன்படுத்தும் ட்விட்டர் – காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

ட்விட்டர் நிறுவனத்தை சுமார் 43 பில்லியன் டாலர்களுக்கு வாங்க விருப்பம் தெரிவித்து, தொழிலதிபர் ஈலோன் மஸ்க் அறிவித்த அடுத்த நாளே, அதற்கான எதிர்வினையை ஆற்றியுள்ளது ட்விட்டர் நிறுவனம்.

அதாவது, விஷ மாத்திரை (Poison Pill) என்று அழைக்கப்படும் ஒரு மேலாண்மைக் கொள்கையைப் பயன்படுத்தியிருக்கிறது. இதன்படி, குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஒருவர் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க முடியாது.

இந்த நகர்வின் மூலம், ஒரு பங்குதாரர் அதிகபட்சம் 15% பங்குகளை மட்டுமே வாங்க முடியும். இதன் மூலம், மற்ற ஆர்வமுள்ள பங்குதாரர்களுக்கும் தள்ளுபடியில் பங்குகளை வாங்க வாய்ப்பு வழங்கப்படும்.

அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் ட்விட்டர் நிர்வாகக் குழு தெளிவாக ஒன்றை தெரிவித்துள்ளது. அதன்படி “யாரும் கேட்காதபோதும், ட்விட்டரை முழுமையாக வாங்குவதாக தொழிலதிபர் ஈலோன் மஸ்க் வெளியிட்ட அறிவிப்புக்குப் பிறகு, இந்த `விஷ மாத்திரை` முறைமையை அமல்படுத்த வேண்டியது அவசியமாகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலவந்தமாக கையகப்படுத்தல்

ஒரு நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் விருப்பத்துக்கு மாறாக, இன்னொரு நிறுவனம் அதை கையகப்படுத்துவதற்கு அல்லது வாங்குவதற்கு முன்வருமானால் அதை பலவந்தமானது அல்லது `விரோதமானது` என்று கருதலாம்.

இது தொடர்பாக, அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் முன்னாள் நிதி நிபுணர் ஜோஷ் ஒய்ட் பிபிசியிடம் பேசியபோது, “பலவந்தமாக கையகப்படுத்தல் என்ற நிலைக்கு எதிராக எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகளில் இந்த ‘விஷ மாத்திரை’ முறைமைதான் இறுதியானது. ”

ஈலோன் மஸ்க் குறிப்பிட்ட விலை இந்த நிறுவனத்துக்கான உயர் மதிப்பு அல்ல” என்று ட்விட்டர் நிர்வாகிகள் குழு தெளிவாக சொல்லிவிட்டது. ஆனால், கூடுதல் விலை குறித்து பேரம் பேச மஸ்க் எந்த அறிகுறிகளும் காட்டாத நிலையில், ட்விட்டர் நிர்வாகம் இந்த `விஷ மாத்திரை` முடிவை எடுத்துள்ளது.

“மஸ்க்கின் இந்த அணுகுமுறை எனக்கு ஆச்சரியமளிக்கிறது. ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்துவதுதான் முடிவு என்றால், இது சரியான அணுகுமுறை அல்ல. உண்மையிலேயே இந்த முயற்சியில் மஸ்க் தீவிரமாக இருந்தால், ஒரு விலையைச் சொல்லி அதிலிருந்து பேரத்துக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்க வேண்டும்,” என்கிறார் ஒய்ட்.

கருத்து சுதந்திரம் வழங்குவேன்

மஸ்க்கின் இந்த முயற்சியால், ட்விட்டர் நிறுவனம் பணயக்கைதியாக வைக்கப்படவில்லை என்று ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரி, பராக் அகர்வால் முன்பு தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், 2022 டெட் மாநாட்டில் பேசிய ஈலோன் மஸ்க், ” என்னால் இந்த நிறுவனத்தை வாங்க முடியுமா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால் என்னிடம் இன்னொரு திட்டமும் உண்டு” என்றும் சொல்லியிருந்தார். அது என்ன திட்டம் என்று சொல்லவில்லை.

இந்த மாத தொடக்கத்தில், 9.2% பங்குகளை தான் கொண்டிருப்பதாக மஸ்க் அறிவித்தார். ஆனால் வேங்காட் குழுமத்தின் பங்குகள் 10.3% ஆக இருக்கும் நிலையில், மஸ்க்கின் பங்குகளின் அளவு பெரியது இல்லை.

ட்விட்டர் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது என்று தான் நம்புவதாக மஸ்க் டெட்2022 மாநாட்டில் தெரிவித்திருந்தார். குறிப்பாக, குடிமக்களின் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தை (அமெரிக்க அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமை) அவர்களுக்கு வழங்குவதே தன் நோக்கம் என்றும் தெரிவித்திருந்தார்.

விஷ மாத்திரை முறைமை

james clayton

வேட்டை விலங்குகளிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கும் இரையை போல ட்விட்டர் நிறுவனம் முயற்சித்து வருகிறது. தன்னைத் தானே சுற்றி முட்களாலும் விஷத்தாலும் மூடிக் கொள்ள முயற்சிக்கிறது.

பல தசாப்தங்களாக இந்த விஷ மாத்திரை முறைமை இருக்கிறது. செயல்பட்டும் வருகிறது. ஈலோன் மஸ்க் 15%க்கு மேல் பங்குகளை வாங்கினால், ட்விட்டர் நிறுவனம் புதிய பங்குகளுடன் சந்தையை ஈர்க்கும். இதன்மூலம், மஸ்க்கின் பங்குகள் நீர்த்துப் போகும். இது ஒரு சிறந்த முடிவு. ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் மஸ்க்கின் முன்மொழிவுக்கு எதிராக ட்விட்டர் நிர்வாகக் குழு சண்டையிடுகிறது என்பதையே இது தெளிவாகக் காட்டுகிறது.

தம்மை இன்னொரு நிறுவனம் வாங்குவதை ட்விட்டர் நிறுவனம் விரும்பவில்லை என்று இதற்கு அர்த்தமில்லை. மாறாக, பலவந்தமாக கையகப்படுத்தும் முயற்சியை எதிர்க்க, நிர்வாகக் குழுவுக்கு கூடுதல் பலத்தை வழங்கும் ஒரு நுட்பத்தைக் கையாளுகிறது அவ்வளவுதான். இனி ஈலோன் மஸ்க் பங்குதாரர்களை அணுகலாம். இது தடுக்க முடியாதது என்றும் ஏற்கனவே ஈலோன் மஸ்க் தெரிவித்திருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »