Press "Enter" to skip to content

இலங்கை நெருக்கடி: “இரண்டு ஆண்டுகளுக்கு தொடரும்; மக்கள் தாங்கித்தான் ஆக வேண்டும்” – நிதியமைச்சர்

பட மூலாதாரம், ALI SABRY FB

(இன்றைய (மே 9) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)

இலங்கை அதன் பொருளாதார நெருக்கடிகளை குறைந்தது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தாங்க வேண்டியிருக்கும் என்று அந்நாட்டின் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளதாக, ‘தினகரன்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பல மாதங்களாக நிலவும் மின்சாரத்தடை மற்றும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு ஆகியவை, நாடு முழுவதும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய அலி சப்ரி, நிலைமையின் தீவிரத்தை மக்கள் உணர்ந்து கொள்கிறார்களா என்று தமக்கு தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் இந்த நெருக்கடியை தீர்க்க முடியாது, எனினும் தற்போது எடுக்கும் நடவடிக்கைகள் இந்த பிரச்னைக்கான தீர்வின் காலத்தை தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்காக எதையும் தியாகம் செய்வோம் – சஜித்

சஜித் பிரேமதாச

பட மூலாதாரம், Getty Images

நாடு பேரழிவுக்கு உள்ளாகியுள்ள இந்த வேளையில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டமைப்பு தொடர்ந்து முன்நிற்கும் என்றும் அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயங்காது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக, ‘தமிழ் மிரர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய நெருக்கடிக்கு சர்வாதிகார நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையே பிரதான காரணம் எனவும், அது உடனடியாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்த அவர், இந்த விடயத்தில் சட்டத்தரணிகள் சங்கம் தலையிட்டு, நாட்டில் ஜனநாயகத்தை கொண்டு வருவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் முற்போக்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் தற்போதைய நிலையில், கிரீடங்களையோ பதவிகளையோ அணிவது முக்கியமல்ல. மாறாக, சமூக மற்றும் தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதே முக்கியமானது. அதற்காக அனைத்து தியாகங்களையும் செய்ய தயாராக இருப்பதாக அவர் கூறினார். நாடு முன்னேற வேண்டுமாயின் 21ஆவது திருத்தத்தை அமல்படுத்தி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை உடனடியாக இல்லாதொழிக்க வேண்டும் என தெரிவித்த அவர், அதன் அடிப்படையில் எந்தச் சவாலையும் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

“இந்த நெருக்கடிக்கு முதல் காரணமான நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது குறித்து எமது தீர்மானத்தை தெரிவித்தோம். நாட்டு மக்களின் துயரங்களை நாம் அறிவோம். ஜனாதிபதியை சந்திக்கவுள்ளோம்; அவரது அபிப்ராயங்களை தெரிந்துகொள்ளவுள்ளோம்” என்று அவர் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழுதடைந்த அரிசியை நுகர்வோருக்கு விநியோகிக்க திட்டம்

இலங்கை பொருளாதார நெருக்கடி

பட மூலாதாரம், Getty Images

பழுதடைந்த அரிசியை நுகர்வோருக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் துஷான் குணவர்த்தன தெரிவித்துள்ளதாக, ‘வீரகேசரி’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “நாட்டில் அரிசி விலையை கட்டுப்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன வர்த்தக அமைச்சராக இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மியான்மரில் இருந்து அரிசி இறக்குமதி செய்திருந்தார்.

வர்த்தக அமைச்சகத்தினால் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட 11 ஆயிரம் டன் அரிசி வெயன்கொட பிரதேசத்தில் தனியார் களஞ்சியசாலை ஒண்றில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த அரிசி நுகர்வோருக்கு பாவனைக்கு எடுக்க முடியாதளவுக்கு பழுதடைந்துள்ளது.

என்றாலும் குறித்த அரிசி தொகையை தற்போது வெளியில் கொண்டு வந்து அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கை தொடங்கி உள்ளதாகவும் அதனை நுகர்வோருக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது. அதனால் இது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் மதத்துக்கு எதிரான கொலை”

அசாதுதீன் ஓவைசி

பட மூலாதாரம், TWITTER.COM/AIMIM_NATIONAL

ஹைதராபாத்தில் நடைபெற்ற கொலை முஸ்லிம் மதத்துக்கு எதிரானது என, எம்.ஐ.எம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளதாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹைதராபாத் அடுத்துள்ள ரங்காரெட்டி மாவட்டம், மார் பல்லி கிராமத்தைச் சேர்ந்த நாக ராஜுவும், பக்கத்து கிராமமான கன்பூர் கிராமத்தைச் சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானாவும் காதலித்தனர். இதற்கு சுல்தானா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்பை மீறி கடந்த ஜன. 31-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த புதன்கிழமை இரவில், சூரூர்நகர் பகுதியில் நாகராஜுவும், அஷ்ரின் சுல்தானாவும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது சுல்தானாவின் சகோதரர் சையத் மோபின் அகமது, அவரது நண்பர் மசூத் அகமது இவர்களை பின்தொடர்ந்து சென்று, சுல்தானாவை கீழே தள்ளிவிட்டு, நாகராஜுவை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தனர். கொலையாளி இருவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து, எம்.ஐ.எம் கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசதுதீன் ஒவைசி கூறும்போது, ”இந்த கொலை முஸ்லிம் மதத்துக்கு எதிரானது. காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு அவர்களை கொல்ல யாருக்கும் உரிமை இல்லை. இதுபோன்ற சம்பவங்களுக்கு நாங்கள் யாருக்கும் ஆதரவு தர மாட்டோம்” என கூறியுள்ளார்.

திராவிட இயக்கம் இந்தி கற்றுக்கொள்ளும் தனிமனித உரிமையை பறித்தது – நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், ANI

ஆங்கிலம் பேசும் அளவுக்கு இந்தி பேச முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது என, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது..

‘துக்ளக்’ இதழின் 52-வது ஆண்டு நிறைவு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிர்மலா சீதாராமன் பேசுகையில், “மத்திய அரசு தமிழகத்துக்கு போதிய நிதி உதவி வழங்கவில்லை என்று தமிழக அரசு அண்மைக்காலமாக குற்றம்சாட்டி வருகிறது. குறிப்பாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) நிலுவைத் தொகை தொடர்பாக தமிழக அரசு கூறும் கருத்துகள் தவறானவை என்று ஏற்கெனவே பாஜக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு ஓரவஞ்சனை செய்யவில்லை.

இந்தி திணிக்கப்படவில்லை. இந்தி கற்றுக்கொண்டு பேசினால் தவறில்லை. ஆங்கிலம் பேசும் அளவுக்கு இந்தி பேச முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. திராவிட இயக்கம் இந்தி கற்றுக்கொள்ளும் தனிமனித உரிமையை பறித்தது. அதிக வரி செலுத்தும் தமிழகத்துக்கு அதிக திட்டங்களை கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கருத்து தெரிவிக்கின்றனர். பிரிவினைவாத மனநிலை கொண்டதால்தான் இப்படியான கருத்துகள் முன்வைக்கப்படுகிறது.

சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜி.எஸ்.டி.) இருந்து பிப்ரவரி, மார்ச் ஆகிய 2 மாதங்களுக்கான மத்திய அரசின் பங்கு தொகை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழங்க வேண்டியுள்ளது. குறிப்பாக ரூ.7.35 லட்சம் கோடியில் ரூ.78 ஆயிரம் கோடி மட்டுமே பாக்கி உள்ளது. அதுவும் விரைவில் வழங்கப்படும். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைய வேண்டும்” என்று அவர் பேசியதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »