Press "Enter" to skip to content

இலங்கையில் ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் வன்முறைக்கு தூண்டல்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க

பட மூலாதாரம், Getty Images

(இன்றைய (மே 11) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)

ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்கு சமூக விரோதிகள் பயன்படுத்தப்படலாம் என்று இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளதாக, ‘தினக்குரல்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

போராட்டம் நடத்தும் பொதுமக்கள் வன்முறைக்கும், ராணுவ ஆட்சிக்கும் இடமளிக்காத வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர், “நீதி மற்றும் ஜனநாயக ஆட்சிக்காக அமைதியான முறையில் போராட்டத்தை நடத்திவரும் அனைத்து குடிமக்களுக்கும் நான் எச்சரிக்கையொன்றை விடுக்கின்றேன். ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்கு சமூக விரோதிகள் பயன்படுத்தப்படலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

“கட்சி சாரா பிரதமர் தலைமையில் 15 பேர் அடங்கிய சர்வகட்சி இடைக்கால அரசாங்கம்”

கோட்டாபய ராஜபக்ஷ

பட மூலாதாரம், AFP

இலங்கை நெருக்கடி நிலைமைகளுக்கு துரித தீர்வு காணும் வகையில் கட்சி சாராத பிரதமர் ஒருவர் தலைமையில் 15 பேரை உள்ளடக்கிய சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவும் சிவில் தரப்பின் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய விசேட ஆலோசனை குழுவை அமைக்கவும் சர்வமதத் தலைவர்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக, ஓமல்பே சோபித தேரர் தெரிவித்ததாக, ‘வீரகேசரி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில், “முழு நாடும் யுத்தகளமாக மாறியமைக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும். போலீசாரின் செயற்பாடுகள் வெறுக்கத்தக்கவை. பொலிஸ் மா அதிபர் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க அவதானம் செலுத்தியுள்ளோம் எனவும் ஓமல்பே சோத தேரர் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகலை தொடர்ந்து சர்வமதத் தலைவர்கள் நேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் போதே ஜனாதிபதி இவ்வாறு இணக்கம் தெரிவித்ததாக ஓமல்பே சோபித தேரர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது தெரிவித்தார்.

நாட்டை யுத்தகளமாக மாற்றியதன் பொறுப்பை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் ஏற்க வேண்டும்.

காலி முகத்திடல் போராட்டம் குறித்து ஜனாதிபதியிடம் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினோம். சம்பவம் தொடர்பில் முறையான மற்றும் துரிதகரமான விசாரணைகளை முன்னெடுப்பதாக அவர் உறுதியளித்தார்” என அவர் தெரிவித்ததாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டுக்கு சேவையாற்ற தயார்

இலங்கை நெருக்கடி

நாட்டுக்கு சேவையாற்றத் தயாராக இருப்பதாக, இலங்கை முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளதாக, ‘தமிழ் மிரர்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில், “அனைத்து அரசியல் கட்சிகளும் இணங்கும் பட்சத்தில் உரியவாறான செயற்திட்டத்துடன் குறுகிய காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டு நாட்டுக்கு சேவையாற்றத் தயாராக இருப்பதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பதவியேற்கும் பட்சத்தில் தற்போதைய நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்கத் தக்கவாறான செயற்திட்டத்தை உருவாக்குவதற்கு தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு சேவையாற்ற விருப்பம்; 10 வயது சிறுவன் 2,600 கி.மீ. மிதிவண்டி பயணம்

தேசப்பற்று

பட மூலாதாரம், MITCHELL GUNN

இந்தியாவில், நாட்டுப்பற்று மற்றும் தேச ஒற்றுமைக்கான செய்தியை பரப்ப 10 வயது சிறுவன் 2,600 கி.மீ. மிதிவண்டி பயணம் செய்து வருவதாக, ‘தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

10 வயது அராப் என்ற சிறுவன் நாட்டின் மீது உள்ள பற்று மற்றும் தேச ஒற்றுமையை சமூக மக்களிடம் பரப்பும் நோக்கோடு சீரிய முயற்சியை எடுத்துள்ளார்.

இதற்காக மணிப்பூரில் இருந்து டெல்லி வரையிலான 2,600 கி.மீ. தொலைவை சைக்கிளில் கடந்து செல்வது என முடிவு செய்து, அதற்கான பயணம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கியது.

ஏப்ரல் 26ஆம் தேதி மேற்கு வங்காளத்தின் அலிபூர்துவார் பகுதிக்கு சென்ற அராப், நேற்று உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூரை சென்றடைந்து உள்ளார்.

இதுவரை 1,700 கி.மீ. தொலைவை நிறைவு செய்துள்ள அராபுக்கு, தந்தை மற்றும் தாத்தா ஷாஜகான்பூரில் சிறந்த வரவேற்பு அளித்தனர். அராப், சிறுவர்கள் விளையாட்டில் சேர வேண்டும் என வலியுறுத்தியதுடன், வருங்காலத்தில் அதனால் நல்ல தடகள வீரர், வீராங்கனைகளை நாடு பெற முடியும் என கூறியுள்ளார்.

“2ஆம் வகுப்பு படிக்கும்போதே, சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகளை கேட்டேன். இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்காற்றிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. நாட்டுக்காக நேதாஜி போராடியது பற்றி அறிந்து ஊக்கம் பெற்றேன்” என தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜா மீது விமர்சனம்: ஈவிகேஎஸ் இளங்கோவன், கி.வீரமணி மீது நடவடிக்கை?

கி.வீரமணி

பிரதமர் மோதியையும், அம்பேத்கரையும் ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா அண்மையில் புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை எழுதியிருந்தார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் வெளியாகின. சில அமைப்பினர், இளையராஜா தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், இளையராஜா மறுத்துவிட்டார்.

இந்நிலையில், அண்மையில் ஈரோட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்த விழாவில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், இசையமைப்பாளர் இளையராஜா குறித்து சாதி ரீதியில் அவதூறான கருத்துகளை கூறியதாகவும் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “சென்னையைச் சேர்ந்த புரட்சித் தமிழகம் நிறுவனத் தலைவர் விமான நிலையம் த.மூர்த்தி, இது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் குறித்து விசாரணை செய்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், சென்னை பெருநகர காவல் துறை ஆணையருக்கும், சென்னை ஆட்சியருக்கும் ஒரு அறிவிப்பு அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய கி.வீரமணி, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸின் அடிப்படையில் கி.வீரமணி, ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்” என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »