Press "Enter" to skip to content

இலங்கை நெருக்கடி: வன்முறைகளில் ஈடுபடுவோரை எவ்வழியிலும் கட்டுப்படுத்துவோம் – ராணுவத் தளபதி

பட மூலாதாரம், Reuters

(இன்றைய (மே 12) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)

இலங்கையில் முப்படையினர் களமிறக்கப்பட்டு வீதித்தடைகள் ஏற்படுத்தி பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதால், அனாவசியமான முறையில் பொதுமக்கள் எவரும் வீதிகளில் நடமாட வேண்டாமெனவும், வன்முறைகளில் ஈடுபடுவோரை எந்தவொரு வழியிலும் கட்டுப்படுத்த போலீசாரும் முப்படையினரும் தயாராக உள்ளதாகவும் ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளதாக, ‘தமிழ் மிரர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் தெரிவித்ததாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டதாவது:

“நீர்கொழும்பில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை ராணுவத்தினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், இதனைப் பார்த்து எவரும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதற்கு இடமளிக்க முடியாது. முப்படையினரும் வீதித்தடைகளை அமைத்துள்ளனர். அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் செல்வதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. அனாவசியமான முறையில் வீதிகளில் நடமாட வேண்டாம். எமது கடமைகளுக்கும் இடையூறுகளை ஏற்படுத்த வேண்டாம்.

அமைதியான போராட்டங்கள் தற்போது வன்முறையாக மாறியிருப்பதாக தெரிவிக்கும் ராணுவத் தளபதி சவேந்திர சில்வா, வன்முறைகளில் ஈடுபடுவோரை எந்தவொரு வழியிலும் கட்டுப்படுத்த போலீசாரும் முப்படையினரும் தயாராக உள்ளனர்.

9, 10ஆம் தேதிகளில் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை அமைதியான முறையில் தீர்ப்பதற்கு நாம் முயற்சித்திருந்தோம். எனினும், தற்போது அமைதியான அணுகுமுறை சீர்குலைக்கப்பட்டு வன்முறைச் சம்பவங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த கட்டாயமாக நடவடிக்கை எடுப்போம். நாட்டு மக்கள் அமைதியான முறையில் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதற்கான பொறுப்பு காவல் துறையினருக்கும் ராணுவத்துக்கும் உள்ளது. எனவே, வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக எந்தவொரு வழிகளிலும் செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக முப்படையினரும் போலீசாரும் செயற்படுவார்கள். எனவே, பொதுமக்கள் வன்முறைகளில் ஈடுபடாது அமைதியான முறையில் செயற்பட வேண்டும்” என தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை பொறுப்பேற்க தேசிய மக்கள் சக்தி தயார் – அனுர குமார

கோட்டாபய ராஜபக்ஷ

பட மூலாதாரம், Getty Images

அராஜக நிலைக்கு தீர்வு கண்டு நாட்டை புதிய வழியில் கொண்டு செல்வதற்கான பொறுப்பினை ஏற்க தேசிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸநாயக்க தெரிவித்துள்ளதாக, ‘வீரகேசரி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு செயற்படுத்த வேண்டிய குறுங்கால திட்டங்களை முன்வைத்தார்.

அத்திட்டங்களுள் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும். வெற்றிடமாகும் ஜனாதிபதி பதவிக்கு இடைக்கால ஜனாதிபதியாக சபாநாயகர் நியமிக்கப்பட வேண்டும். அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றம் மீதான நம்பிக்கை இல்லாதொழிந்துள்ளதால் நாடாளுமன்றத்தினால் முன்னெடுக்கப்படும் எத்தீர்மானங்கள் மீதும் மக்கள் நம்பிக்கை கொள்ளப்போவதில்லை. ஆகவே, ஆறு மாத காலத்துக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

பொதுத்தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை இடைக்கால அரசாங்கம் அமைப்பது அவசியமாகும். தற்போதைய அரசியல் நெருக்கடி மற்றும் சமூக கட்டமைப்பில் நிலவும் அமைதியற்ற சூழலுக்கு தீர்வு கண்டு நாட்டை புதிய பாதைக்குக் கொண்டு செல்ல தேசிய மக்கள் சக்தி தயார். நாடாளுமன்றத்துக்குள் இடைக்கால அரசாங்கத்தை எவ்வித தடையுமில்லாமல் அமைக்கும் சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்” என அனுர குமார தெரிவித்ததாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

காலி முகத்திடலிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள் – நிராகரிக்கும் போராட்டக்காரர்கள்

காலிமுகத்திடல் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

ஊரடங்கு உத்தரவை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகையால் ஜனாதிபதியை பதவி விலகக்கோரி காலி முகத்திடலுக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் போராட்டக்காரர்களை உடனடியாக அங்கிருந்து கலைந்து செல்லுமாறு காவல் துறையினர் நேற்று மாலை அறிவித்த நிலையில், அங்கிருந்து கலைந்து செல்வதில்லையென போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளதாக, ‘தினக்குரல்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில், “ஜனாதிபதி செயலகத்தின் உச்சியில் கட்டப்பட்டுள்ள ஒலிபெருக்கி மூலம் இந்த அறிவித்தல் போலீசாரால் பல தடவை விடுக்கப்பட்டது.

ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்வரும் நாடு முழுவதும் தொடர்ச்சியாக போராட்டங்களும் வன்முறைச் சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டன. இதனால் நாடு முழுவதும் ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டது.

தாக்குதலில் சேதமடைந்த ‘கோட்டா கோ கம’ பகுதி மீண்டும் நிர்மாணிக்கப்பட்டு நேற்று 35 நாளாகவும் அமைதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையிலேயே, போராட்டக்காரகளை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசாரினால் நேற்று மாலை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் கூடாரங்களில் இருந்து அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 நாய்களுடன் 2 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்ட 11 வயது சிறுவன்

2 ஆண்டுகளாக 20க்கும் மேற்பட்ட தெரு நாய்களுடன் குடியிருப்பில் அடைத்து வைக்கப்பட்ட 11 வயது சிறுவன் நாய்களை போன்று செயல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில், “மஹாராஷ்டிராவின் புனே நகரில் கொந்தவா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 11 வயது சிறுவன் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்டு உள்ளார்.

இதனை அந்த பகுதியில் வசிக்கும் ஒருவர் முதலில் கவனித்து உள்ளார். இதுபற்றி நியான் தேவி குழந்தைகள் நல தொண்டு நிறுவனத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி தகவல் தெரிவித்து உள்ளார்.அந்த அமைப்பை சேர்ந்த சகஸ்ரபுத்தே இதுபற்றி கூறும்போது, கொந்தவா பகுதியில் குடியிருப்பில் அடைத்து வைக்கப்பட்ட சிறுவனை அந்த பகுதியில் வசிப்பவர்கள் ஜன்னல் வழியே பார்த்து உள்ளனர். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று காணப்படுகிறார்.எங்களுடைய உறுப்பினர்கள் சம்பவ பகுதிக்கு சென்றனர். குடியிருப்பின் கதவு வெளியே பூட்டியிருந்தது. ஆனால், சிறுவனும், நாய்களும் உள்ளே இருந்தனர். 4 நாய்கள் இறந்த நிலையில் கிடந்துள்ளன. அந்த குடியிருப்பில் இருந்து விலங்குகளின் கழிவுகள் அகற்றப்படாமல், தூய்மையற்ற நிலையில் இருந்தது. அந்த சூழலில் சிறுவன் அடைத்து வைக்கப்பட்டு உள்ளார்.போலீசாரும் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. இதன்பின் நாங்கள் சிறுவனின் பெற்றோரிடம் பேசினோம். அவர்கள் திரும்பி வந்து, குழந்தையை மீட்கும்படி போலீசாரிடம் உதவி கேட்டனர். ஒருவழியாக சிறுவனை மீட்டு விட்டோம். ஆனால், காவல் துறையினர் வழக்கு எதுவும் பதிய விரும்பவில்லை. இதுபற்றி குழந்தைகள் நல குழுவிடம் தெரிவித்து உள்ளோம் என கூறியுள்ளார்.2 ஆண்டுகளாக நாய்களுடன் சிறுவனை அடைத்து வைத்துள்ளனர். அதனால், அவனது செயல்களில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர் நாய்களை போன்றே செயல்பட தொடங்கியுள்ளார். இதனால், அவரது பள்ளி படிப்பும் நின்று விட்டது.சிறுவனுக்கு முறையான சிகிச்சை, கவுன்சிலிங் வழங்க போலீசாரிடம் வலியுறுத்தி உள்ளோம். குழந்தைகள் நல குழுவின் உத்தரவுகளையும் பின்பற்ற கேட்டு கொண்டுள்ளோம் என அவர் கூறியுள்ளார்.சிறுவனின் தந்தை கடை ஒன்றை நடத்தி வருகிறார். சிறுவனின் தாயார் பட்டப்படிப்பு படித்துள்ளார். அந்த பெற்றோர் நாய்களின் மீது அன்புடன் இருந்துள்ளனர். அதனால், அவற்றை வீட்டில் வைத்திருக்கின்றனர் என்றும் சகஸ்ரபுத்தே கூறியுள்ளார்.2 ஆண்டுகளாக நாய்களுடன் சிறுவனை அடைத்து வைத்து, அவனுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக, அவனது பெற்றோரை கைது செய்ய முடிவு செய்திருக்கிறோம் என்று மூத்த காவல் ஆய்வாளர் சர்தார் பாட்டீல் தெரிவித்து உள்ளார்” என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பர் பிளேட்களில் ‘G’அல்லது ‘அ’ என்ற எழுத்துக்களைப் பயன்படுத்தினால் நடவடிக்கை: போக்குவரத்து ஆணையர்

தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு அரசு வாகனங்களை தவிர மற்ற வாகனங்களின் நம்பர் பிளேட்களில் ‘G’ அல்லது ‘அ’ என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அரசு வாகனம் அல்லாத வாகனங்களில் தற்பொழுது தமிழகமெங்கும் பதிவெண் பலகையில் (Number Plate) ‘G’ அல்லது ‘அ’ என்ற எழுத்துகள் எழுதப்பட்டோ அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டோ மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 3 உட்பிரிவு (K)-ன் படி அரசு வாகனம் என்றால் தமிழ்நாடு அரசின் வாகனங்கள் மட்டுமே. அரசு வாகனங்களுக்கு வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்கு உள்ளது. எனவே, உரிய வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்கு பெற்ற தமிழ்நாடு அரசின் வாகனங்களில் மட்டுமே ‘G’ அல்லது ‘அ’ என்ற எழுத்துக்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

எனவே, தமிழ்நாடு அரசு வாகனங்களை தவிர மற்ற அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களில் ‘G’ அல்லது ‘அ’ என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என கூறப்பட்டுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »