Press "Enter" to skip to content

யுக்ரேன் போரால் சிங்கப்பூரில் கோழிக்கறி ரைஸ் தட்டுப்பாடு ஏன்?

  • அனபெல் லியாங் & டெரெக் சை
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், Getty Images

வாரத்தில் மூன்று முறை சாப்பிடும் அளவுக்கு கோழிக்கறி ரைஸ் என்றால் ரேச்செல் ஷாங்குக்கு மிகவும் பிடிக்கும்.

“என்னுடைய உணவுப்பட்டியலில் முதல் இடம் கோழிக்கறி ரைஸுக்குதான். இது மிகவும் சௌகரியமான ஓர் உணவு. மேலும், எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது,” என்கிறார் ரேச்செல். அவர் கோழிக்கறி ரைஸ் சாப்பிடும் ‘ஏ கீட் கோழிக்கறி ரைஸ்’ கடையில் அந்த உணவு 4 சிங்கப்பூர் டாலர்களிலேயே (2.90 டாலர்; 2.30 பவுண்ட்) கிடைக்கக்கூடியதாக உள்ளது.

ஒரு தட்டில் மணமூட்டப்பட்ட சோற்றுக்கு மேல் வேக வைக்கப்பட்ட அல்லது வறுக்கப்பட்ட கோழி இறைச்சியை வைத்து சாப்பிடுவது பெரும்பாலான சிங்கப்பூர் மக்களுக்கு பிடித்தமான உணவாக உள்ளது. சிங்கப்பூரின் தேசிய உணவு எனவும் இது அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. கோழிக்கறி ரைஸை விற்கும் கடையொன்றின் உரிமையாளர் ஒருவர் பிபிசியிடம் கூறுகையில், “கோழிக்கறி ரைஸ் இல்லாமல் சிங்கப்பூர் இருக்க முடியாது. அப்படி இருப்பது நியூயார்க் நகரம் பீட்சா இல்லாமல் இருப்பது போன்றது,” என்கிறார்.

அனைவருக்கும் பிடித்த, எளிதில் கிடைக்கக்கூடிய இந்த உணவு கூடிய விரைவில் கிடைப்பதற்கு கடினமான ஒன்றாகவும் விலை உயர்ந்ததாகவும் மாறிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், இந்த உணவுக்குத் தேவையான முக்கியமான உணவுப்பொருளான கோழி இறைச்சி, ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் கிடைப்பது கடினமானதாக உள்ளது.

உணவுக்காக பிற நாடுகளை நம்பியிருக்கும் சிங்கப்பூர்

உலகம் முழுவதிலும் விலைவாசி உயர்ந்துவரும் நிலையில், சில ஆசிய நாடுகள் தங்கள் நாட்டில் முக்கியமான உணவுப் பொருட்களின் விநியோகத்தைப் பாதுகாக்க அவற்றின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளன அல்லது கட்டுப்படுத்தியுள்ளன. மலேசியா தங்கள் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கோழி இறைச்சியின் அளவில் இந்த வாரம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், உணவுப் பொருட்களுக்காக இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகள் மத்தியில் இந்த நடவடிக்கைகள் கவலையை அதிகரித்துள்ளன. குறிப்பாக, 90 சதவீத உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடான சிங்கப்பூருக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தீவு நாடான சிங்கப்பூர், தாங்கள் நுகரும் மொத்த கோழி இறைச்சியில் மூன்றில் ஒரு பங்குக்காக மலேசியாவை நம்பியுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் வந்தவுடன், ஆச்சர்யத்திற்கு இடமின்றி கோழிக்கறி ரைஸ் கடைகள் முன்பு நீண்ட வரிசைகளில் மக்கள் அதனை பெறுவதற்கு காத்திருந்தனர். இந்த கடைகள் சிங்கப்பூரின் ஒவ்வொரு ஃபுட் கோர்ட் மற்றும் கூவிவிற்கும் சந்தைகளிலும் இடம்பெற்றிருக்கும்.

“இந்த முறை கோழி இறைச்சிக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அடுத்த முறை வேறு எதற்காவது இந்த நிலைமை ஏற்படும். இதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்,” என சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லான் தெரிவித்துள்ளார்.

கோழிக்கறி ரைஸுக்கு பயன்படுத்தப்படும் கோழிகள் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு உயிருடனேயே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதன்பின் அவை சிங்கப்பூரில் அறுத்து சமைக்கப்பட்டு பின்னர் பரிமாறப்படுகின்றது.

கோழி இறைச்சிக்கான ஏற்றுமதியை மலேசியா தடுத்துள்ள நிலையில், இனி அதற்கு சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், “உள்நாட்டில் விலைவாசி மற்றும் உற்பத்தி நிலையாகும் வரை” இந்த தடை நடைமுறையில் இருக்கும் என, மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உணவு ஏற்றுமதி கட்டுப்பாடுகள்

யுக்ரேன் போருக்கும் இதற்கும் என்ன தொடர்பா?

‘ஏ கீட் கோழிக்கறி ரைஸ்’ கடையின் உரிமையாளர் லிம் வெய் கீட் கூறுகையில், யுக்ரேன் போர் காரணமாக எரிபொருள் மற்றும் சோளத் தீவனத்தின் விலை உயர்வால், தங்களுக்கு கோழி இறைச்சியை விநியோகிக்கும் மலேசிய நபர் இந்தாண்டில் 20 சதவீதம் அதிகமாக விலை வைத்தாலும், கோழிக்கறி ரைஸ் விலையை உயர்த்துவதில் தாம் ஆர்வம் காட்டவில்லை என தெரிவித்தார்.

“கோழிக்கறி ரைஸ் விலையை நாங்கள் உயர்த்த விரும்பவில்லை. ஏனெனில் அவ்வாறு செய்தால் எங்கள் வாடிக்கையாளர்கள் இங்கிருந்து சென்றுவிடுவார்கள்,” என லிம் தெரிவித்தார். “ஒரு மாதத்திற்கு இந்த விலையை தாங்கிக்கொள்ளலாம் என எதிர்பார்க்கிறேன். இந்த நிலைமை இன்னும் மோசமானால் ஒரு தட்டுக்கு அரை சிங்கப்பூர் டாலர் (50 சென்ட்டுகள்) என்ற ரீதியில் விலையை அதிகரிக்கத் தொடங்க வேண்டும்” என்கிறார்.

ஆனால், வரும் நாட்களில் தங்களுக்கு போதுமான கோழி இறைச்சி கிடைக்காத நிலை ஏற்படலாம் என அவர் கவலை கொள்கிறார்.

இந்த பற்றாக்குறையை சமாளிக்க தாம் உறைய வைக்கப்பட்ட கோழி இறைச்சியை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என கூறுகிறார். ஆனால், அவ்வாறு செய்வது அவருடைய வாடிக்கையாளர்களுக்கு சுவையூட்டக் கூடியதாக இருக்காது.

“உறைய வைக்கப்பட்ட உணவில் அதன் வாசனை மற்றும் சுவையில் வித்தியாசம் இருக்கும் என்ற பார்வை இருக்கிறது,” என்கிறார் லிம். “ஆனால், உண்மையில் பெரிய வித்தியாசத்தை நான் பார்க்கவில்லை. துரித உணவுக் கடைகளில் நாம் கோழி இறைச்சியை சாப்பிடுகிறோம். அவை சுவையானதாகவே உள்ளது” என்கிறார்.

இறைச்சி விற்பனையாளர்களுக்கு இதில் சில வாய்ப்புகளே உள்ளன. ஒரு தசாப்தத்திற்கும் மேல் பிரபலமான இறைச்சி சந்தையொன்றில் கோழி இறைச்சி விற்பனை செய்து வருபவர் ஹமித் பின் புவாங்.

சமீப காலமாக தனது வாடிக்கையாளர்கள் அதிக இறைச்சியை வாங்குவதாக கூறும் அவர், மலேசியா ஏற்றுமதி தடையை விலக்கும் வரை தனது கடையை மூடுவதற்கு திட்டமிட்டுள்ளார். கோழி இறைச்சி இருப்பு எப்போது மறுபடியும் அதிகரிக்கும் என்பது அவருக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

“எல்லோரும் இப்போது கவலை கொண்டுள்ளனர். கோழி இறைச்சி இல்லாததால், எல்லோரும் கடினமான சூழலில் சிக்கியுள்ளனர்” என்கிறார் அவர்.

கோழி இறைச்சி ஏற்றுமதிக்கு தடை விதித்த மலேசியா

பண்ணையிலிருந்து உணவு மேசைக்கு…

நாடுகள் ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை விதிக்கும்போது உற்பத்தியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் என, விநியோக சங்கிலியின் அனைத்து மட்டங்களிலும் அது உணரப்படுவதாக, எஸ்.ராஜரத்னம் ஸ்கூல் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்டடீஸ் பேராசிரியர் பால் டெங் கூறுகிறார்.

சில உற்பத்தியாளர்கள் “உயிர்பிழைப்பது, வாழ்வாதாரங்கள் மற்றும் எதிர்கால ஒப்பந்தங்கள் குறித்து கவலை கொண்டுள்ளனர்” என பிபிசியின் ஆசியா வணிகம் அறிக்கைடுக்கு அளித்த சமீபத்திய பேட்டியில் டெங் கூறியுள்ளார்.

“சில்லறை விற்பனையை பொறுத்தவரையை நீங்கள் விலைவாசியை உயர்த்தினால், உங்களின் வாடிக்கையாளர்கள் சென்றுவிடுவார்கள்” என டெங் கூறியுள்ளார்.

மேலும், யுக்ரேன் போரால் ஏற்பட்டுள்ள உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கம் ஆகியவை தொடரும் என தான் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் அதிகம் உட்கொள்ளப்படும் இறைச்சியாக உள்ள கோழி இறைச்சியின் விலை உயர்வுக்கும் இது காரணமாக அமைந்துள்ளது.

இந்தியா விதித்துள்ள தடைகள்

ஆசிய நாடான இந்தியா கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. மேலும் சர்க்கரை ஏற்றுமதிக்கு 10 மில்லியன் டன்கள் என்ற அளவில் கட்டுப்பாடு விதித்துள்ளது.

உலகளவில் அதிகமாக சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. மேலும் உலக நாடுகளில் அதிகளவில் சர்க்கரை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

யுக்ரேனில் போர் தொடங்கிய உடன் அந்நாட்டின் கோதுமை ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையிலும், கோதுமையை அதிகமாக உற்பத்தி செய்யும் மற்ற நாடுகள் வறட்சி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாலும், இந்த பற்றாக்குறையை தீர்க்க வர்த்தகர்கள் இந்தியாவை எதிர்பார்த்தனர்.

“இந்தியா தற்போது ஏற்படுத்தியிருக்கும் உதாரணம் மிகவும் பிரச்னைக்குரியது, இந்தியா இதை செய்தால் தாங்களும் செய்ய வேண்டும் என பொருளாதார ரீதியில் சிறிய நாடுகள் நினைக்கின்றன,” என, வாஷிங்டன் டிசியில் உள்ள இண்டர்நேஷனல் ஃபுட் கொள்கை ரிசர்ச் மூத்த ஆய்வாளராக (Fellow) உள்ள டேவிட் லாபோர்ட் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பதப்படுத்தப்பட்ட உணவு முதல் சோப்பு வரை தயாரிக்க பயன்படுத்தப்படும் பாமாயில் எண்ணெய்யின் விலையை தங்கள் நாட்டில் குறைக்க அதனை அதிகளவில் உற்பத்தி செய்யும் இந்தோனேசியா மூன்று வாரங்களுக்கு அதன் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகள் இன்னும் அதிகளவிலான தாக்கம் ஏற்படும் என, லாபோர்ட் எச்சரித்துள்ளார்.

“உணவின் விலை தற்போது அதிகமானதாக உள்ளது. இதனால் முதலில் பாதிக்கப்படுபவர்களாக ஏழைகளே உள்ளனர். சில சமயங்களில் அவர்கள் தங்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவுகளை தங்கள் செலவுகளிலிருந்து நீக்க வேண்டியுள்ளது” என்கிறார் அவர்.

விலைவாசி உயர்வு தனக்கு பிடித்த கோழிக்கறி ரைஸை சாப்பிட முடியாத நிலைக்கு இட்டுச் செல்லாது என தான் நம்புவதாக ரேச்செல் ஷாங் நம்புகிறார்.

“அவற்றை நம்மால் வாங்க முடிந்தால் நாம் இன்னும் காபி ஷாப்கள் மற்றும் உணவகம் போன்ற தொழில்களை ஆதரிக்க வேண்டும். சில சிங்கப்பூர் டாலர்கள் உயர்ந்ததால் அவற்றை புறக்கணித்துவிடக்கூடாது,” என அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »