Press "Enter" to skip to content

முகமது நபி பற்றிய பாஜக செய்தித் தொடர்பாளர்களின் கருத்துக்கு அரபு ஊடகங்களின் எதிர்வினை

பட மூலாதாரம், NupurSharmaBJP

முகமது நபி குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளியிட்ட விவகாரத்தில், தங்கள் கட்சி செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவை பாஜக இடைநீக்கம் செய்துள்ளது, டெல்லி பாஜக ஊடகப் பிரிவுத் தலைவர் நவீன் குமார் ஜிண்டாலின் கட்சி உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ.க நிர்வாகிகள் முகமது நபியைப் பற்றி இப்படிப் பேசியது வளைகுடா நாடுகளில் பெரும் சர்ச்சையாகிவிட்டது. சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆவது முதல் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் வரை பாஜக தலைவர்களின் கருத்துகளுக்கான எதிர்வினைகளே நிரம்பி வழிகின்றன.

செய்தித் தாள்கள் கூறுவது என்ன?

துபாயில் இருந்து வெளியாகும் கல்ஃப் நியூஸ் செய்தித்தாள், “முகமது நபி குறித்து பாஜக நிர்வாகிகள் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மறுநாள், அக்கட்சி அந்த பேச்சைக் கண்டித்து, அதன் செய்தி தொடர்பாளர் நூபுர் ஷர்மாவை பணியிடைநீக்கம் செய்தது, டெல்லி பாஜக தலைவர் நவீன் குமார் ஜிண்டாலை கட்சியில் இருந்து நீக்கியது.”

நூபுர் ஷர்மா பேச்சு தொடர்பாக மும்பையில் பல எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தித்தாள்கள் எழுதுகின்றன. ஜூன் 3ஆம் தேதி நூபுர் ஷர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிறகுதான் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வன்முறை வெடித்தது. இதில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து வெளிவரும் அல் ஜசீரா ஊடகம், இந்தியாவின் ஆளும் கட்சியான பிஜேபிக்கு எதிராக ராஜதந்திர புயல் தாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

நூபுர் ஷர்மா

பட மூலாதாரம், ANI

இந்த சர்ச்சைக்கு நடுவே முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த தலைவர்களை கட்சியை விட்டு வெளியேற்றியது பிரதமர் நரேந்திர மோதியின் கட்சி” என அல்ஜசீரா எழுதுகிறது.

இந்தக் கருத்துக்களால் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வன்முறை வெடித்ததாகவும், இந்தியாவில் நூபுர் ஷர்மாவை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அந்தச் செய்தியில் மேலும் எழுதப்பட்டுள்ளது.

ஆளும்கட்சி செய்தித் தொடர்பாளரை ‘ஃப்ரிஞ்ச்’ என குறிப்பிட்ட இந்தியா

குவைத்தில் இருந்து வெளிவரும் ‘அராப் டைம்ஸ்’ நாளிதழ் இந்தச் செய்தியை முக்கியமாக வெளியிட்டுள்ளது.

குவைத் வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை இந்தியத் தூதரை வரவழைத்து பாஜக தலைவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்கு எழுத்துப்பூர்வமாக கடும் ஆட்சேபனை தெரிவித்ததாக இந்த இதழ் எழுதியுள்ளது.

“இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா இடைநீக்கம், டெல்லி பாஜக ஊடகப் பொறுப்பாளர் ஜின்டால் கட்சியை விட்டு நீக்கம் போன்ற நடவடிக்கைகளைக் குவைத் வரவேற்றுள்ளது. இருப்பினும், குவைத் அமைச்சகம் இதுபோன்ற கண்டிக்கத்தக்க பேச்சுகளுக்காக தலைவர்களை விமர்சித்துள்ளது. அவர் சார்பாக பகிரங்க மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.” என்பது அதில் வெளியாகியுள்ள செய்தி.

“இந்தியா உள்ளிட்ட நாகரிகங்கள் மற்றும் தேசங்களைக் கட்டியெழுப்புவதில் இஸ்லாமின் பங்கையும் இஸ்லாமின் அமைதியான தன்மையையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதை இத்தகைய பேச்சுகள் தெளிவாகக் காட்டுகின்றன,” என்று அமைச்சகம் கூறுகிறது.

வெளியுறவு அமைச்சகத்துக்குப் பதிலளித்த இந்தியத் தூதர், “இந்த பேச்சுகள் அரசாங்கம், ஆளும் கட்சி ஆகியவற்றின் சித்தாந்தத்தைப் பிரதிபலிக்கவில்லை, மாறாக வேறுபட்ட கருத்துள்ள உதிரிக் குழுக்களின் கருத்தையே பிரதிபலிக்கின்றன. எங்கள் வலுவான கலாச்சார மரபுகளான நாகரிகம், பாரம்பரியம், வேற்றுமையில் ஒற்றுமை, ஆகியவற்றின் அடிப்படையில், இந்திய அரசு அனைத்து மதங்களையும் மிக உயர்ந்த மரியாதையுடன் அங்கீகரிக்கிறது,” என்று விளக்கமளித்தார்.

இந்தியப் பொருட்கள், கடைகளிலிருந்து அகற்றம்

சௌதி பட்டத்து இளவரசர்

பட மூலாதாரம், Getty Images

ரியாத்தில் வெளியாகும் அராப் நியூஸ் நாளிதழில் வெளியான செய்தியில், வளைகுடா நாடுகளில் உள்ள கடைகளில் இருந்து இந்தியப் பொருட்கள் அகற்றப்படுவதாக எழுதப்பட்டுள்ளது.

கான்பூரில் வன்முறை நடந்ததாகவும், இந்தப் பேச்சுக்கு முஸ்லிம் நாடுகளில் கடும் கோபம் இருப்பதாகவும் எழுதப்பட்டுள்ளன.

பாஜக தலைவர் நூபுர் ஷர்மா ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது நபிகள் நாயகத்தைப் பற்றி ஆத்திரமூட்டும் கருத்துக்களைத் தெரிவித்தார், அதன் பிறகு முஸ்லிம் நாடுகளில் இதற்கெதிரான எதிர்வினை தொடங்கியது.

சௌதி அரேபிய அரசாங்கம் இந்த அறிக்கையை “அட்டூழியமானது” என்று குறிப்பிட்டதோடு “அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும்” என்றும் கூறியதாக இந்த செய்தித்தாள் எழுதியுள்ளது.

மற்றொரு கணினி மயமான செய்தி நிறுவனமான மிடில் ஈஸ்ட் ஐ, இந்தியாவின் ஆளும் கட்சி, முகமது நபி, இஸ்லாம் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக அதன் தலைவர்களை இடைநீக்கம் செய்து வெளியேற்றியுள்ளது என்று எழுதியுள்ளது.

அந்த இதழ், “பாஜக அதன் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது தெரிவித்த ஆட்சேபகரமான கருத்துக்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவரைக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளது.

பாஜக

பட மூலாதாரம், Getty Images

நூபுர் ஷர்மாவின் அறிக்கைக்குப் பிறகு பல முஸ்லீம் நாடுகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக இந்த இதழ் தெரிவித்துள்ளது. சௌதி அரேபியா, குவைத், பஹ்ரைன் போன்ற நாடுகள் இந்தியத் தூதர்களை வரவழைத்தன. பல வளைகுடா நாடுகளில் இந்த அறிக்கையின் சீற்றம் காரணமாக, இந்தியப் பொருட்கள் கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து அகற்றப்பட்டன.

ஜெத்தாவிலிருந்து வெளிவரும் சவுதி கெஜட் என்ற செய்தித்தாள் இந்த சர்ச்சை தொடர்பான செய்தியை தனது முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ஆளும் கட்சித் தலைவர்களின் அவதூறான பேச்சுக்கு சௌதி அரேபியா அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் இது கூறுகிறது.

இஸ்லாமின் சின்னங்களை அவமதிக்கும் எந்தவொரு செயலையும் சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் எதிர்க்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இடைநீக்கம் செய்த பாஜகவின் நடவடிக்கையை வரவேற்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »