Press "Enter" to skip to content

அமெரிக்காவில் அமேசான் நிறுவனம் ட்ரோன் மூலம் டெலிவரி செய்யத் திட்டம்

பட மூலாதாரம், AFP

அமெரிக்காவில் அமேசானில் வாங்குதல் செய்கிறவர்களுக்கு ட்ரோன் மூலம் டெலிவரி செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் முதல் முறையாக இந்த முறையில் டெலிவரி தொடங்கும் என்று தெரிகிறது.

ஆனால், உரிய அனுமதி கிடைத்த பிறகே இந்த திட்டம் செயல்படுத்தப்படுவது உறுதியாகும்.

கலிஃபோர்னியா மாநிலம் லாக்கீஃபோர்டு நகரைச் சேர்ந்த மக்கள் ட்ரோன் மூலம் பல்லாயிரம் பொருள்களை தங்கள் வீட்டிலேயே டெலிவரி பெறுவதற்கு வாங்குதல் செய்ய முடியும் என்று அமேசான் தெரிவித்துள்ளது.

ட்ரோன் டெலிவரி குறித்து அமேசான் நிறுவனம் பல ஆண்டுகளாக கூறிவந்தாலும், இந்த திட்டம் பலமுறை தாமதத்தையும், பின்னடைவுகளையும் சந்தித்துள்ளது. ஆனால், முதல் முதலில் லாக்கீஃபோர்டு நகரில் ட்ரோன் டெலிவரியை அறிமுகம் செய்த பிறகு பரவலாக இந்த வசதியை விரிவுபடுத்த உள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.

[ஆனால்] இந்த ஆண்டு கடைசியில், கலிபோர்னியா லாக்கீஃபோர்டு நகரில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் முதல் முதலாக ப்ரைம் வான் வழி டெலிவரியை முதல் முதலாகப் பெறப்போகும் மக்களில் ஒரு பிரிவாக இருப்பார்கள்.

“இந்த சேவையைப் பற்றிய பின்னூட்டம், மற்ற இடங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விரிவுபடுத்தும் வகையில் ஒரு சேவையை உருவாக்க எங்களுக்கு உதவும்,” என்றும் அமேசான் தெரிவித்துள்ளது.

இந்த சேவையில் பயன்படுத்தப்படவுள்ள ட்ரோன்கள் வாடிக்கையாளர்களின் புழக்கடையில் பொட்டலம்களைப் போடும் வகையில் நிரல் செய்யப்பட்டதாக இருக்கும். இந்த நகரின் மக்கள் தொகை சுமார் 4 ஆயிரம்.

கண் பார்வையில் தெரியும் இடத்தில் இருந்து இந்த ட்ரோன்களை ஒருவர் கட்டுப்படுத்தவேண்டும் என்ற தேவை இல்லை. அதற்குப் பதிலாக சென்சார்களைப் பயன்படுத்தி, பிற விமானங்கள், மக்கள், தடைகள் ஆகியவற்றின் மீது மோதாமல் இந்த ட்ரோன்கள் தவிர்த்துக்கொள்ளும்.

ஒரு மணி நேரத்துக்குள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பாக பொட்டலம்களை டெலிவரி செய்வதே நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை முயற்சியும், விமர்சனமும்

அமேசான் ட்ரோன்.

பட மூலாதாரம், Getty Images

கடந்த காலங்களில் ட்ரோன் டெலிவரி என்ற வாக்குறுதி செய்திகளில் இடம் பெற்று, பிரைம் சந்தாதாரர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் உத்தி என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.

2013ல் டெலிவரி ட்ரோன் தொகுதி ஒன்றின் மூலம் 5 ஆண்டுகளில் வான்வெளியை நிரப்பப் போவதாக அமேசான் நிறுவனத்தின் நிறுவனரும் முன்னாள் தலைவருமான ஜெஃப் பெசோஸ் வாக்குறுதி கொடுத்திருந்தார். சில மாதங்களில் ட்ரோன் டெலிவரியை அறிமுகம் செய்யப்போவதாக 2019ல் கூறியது அமேசான்.

இந்த ட்ரோன்களில் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் இருப்பதாக ப்ளூம்பெர்க் தளத்தில் செய்தி வெளியானது. ஆனால், எல்லா கட்டுப்பாடுகளுக்கும் உரிய வகையில் தங்கள் ட்ரோன்கள் இருப்பதை உறுதி செய்ய கடும் சோதனைகள் மேற்கொண்டதாக அமேசான் கூறியது.

2016 டிசம்பரில் இந்த நிறுவனம் கேம்பிரிட்ஜில் வெற்றிகரமாக சோதனை அடிப்படையில் ட்ரோன் டெலிவரியை செய்தது. 13 நிமிடங்களில் பொட்டலம் டெலிவரி செய்யப்பட்டது.

அப்போதில் இருந்து சில்லரை வணிக நிறுவனமான வால்மார்ட், தனியார் அஞ்சல் நிறுவனங்களான ஃபெடெக்ஸ், யு.பி.எஸ். ஆகியவற்றோடு இணைந்து ட்ரோன் டெலிவரி சோதனைகளை நடத்தி வந்தது அமேசான்.

இந்த சேவை லாக்கீஃபோர்டு நகரில் எப்படி செயல்படும் என்பதை விவரித்த அமேசான், “இந்த நகரைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் தளத்துக்குள் நுழைந்தவுடன் பிரைம் ஏர் டெலிவரிக்கு தகுதியான பொருள்கள் எவை என்பதை அவர்கள் பார்க்க முடியும். அதையடுத்து அவர்கள் வழக்கமாக வாங்குதல் செய்வதைப் போலவே வாங்குதல் செய்ய முடியும். பிறகு, எவ்வளவு நேரத்தில் டெலிவரி கிடைக்கும் என்ற தகவலையும், ட்ராக்கரையும் வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். குறிப்பிடப்பட்ட இடத்துக்கு வரும் ட்ரோன், வாடிக்கையாளரின் புழக்கடையில் தன் உயரத்தைக் குறைக்கும். பாதுகாப்பான உயரத்தில் நின்றபடி பறந்துகொண்டு பொட்டலத்தை கீழே போடும். பிறகு உயரத்தை அதிகரித்துப் பறக்கத் தொடங்கும்,” என்று கூறியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »