Press "Enter" to skip to content

கூகுள் சுந்தர் பிச்சை முதல் ட்விட்டரின் பராக் அக்ரவால் வரை: அமெரிக்காவில் உயர் பொறுப்பை அலங்கரிக்கும் இந்தியர்கள்: வெற்றிக்கு காரணம் என்ன?

  • அருண் குமார் பொன்னுசாமி
  • தொடர் தொழில்முனைவோர், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் – தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினான்காவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்.)

‘அமெரிக்கா’ என்பது சிலருக்கு ஒரு நாட்டின் பெயராக மட்டுமே தெரியும், ஆனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலகின் வளரும் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அது இன்னமும் ‘கனவு நாடாகவே’ விளங்கி வருகிறது என்று உறுதியாக சொல்ல முடியும்.

ஒரு பட்டனை தட்டினால் எந்த விவரமும் விரல் நுனியில் கிடைத்துவிடும் இந்த காலத்திலேயே அமெரிக்கா மீதான மோகம் குறைந்தபாடில்லை, ஆனால் இன்றைய அமெரிக்கா எதற்காக அறியப்படுகிறதோ, நாளைக்கு எதற்காக அறியப்படப்போகிறதோ அதற்கு மிகப் பெரும் காரணமாக இந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து எண்ணற்ற கனவுகளுடன் ஒரு சில தசாப்தங்களுக்கு முன்னால் அமெரிக்காவுக்கு சென்றவர்களே இருக்கிறார்கள் என்று சொன்னால் மறுப்பதற்கில்லை.

உலக சந்தையில் பல நிறுவனங்களின் தலைமை செயலதிகாரிகள் (CEO) இந்தியாவை தாய்நாடாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கூகுளின் (Google) சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட்டின் சத்ய நாதெல்ல, நோர்வடிசின் (Norvatis) வசந்த் நரசிம்மன், ஐபிஎம்மின் (IBM) அரவிந்த் கிருஷ்ணா, ட்விட்டரின் (Twitter) பராக் அக்ரவால், அடோபியின் (Adobe) சாந்தனு நாராயண் ஆகியோர் பலரின் கவனத்தை ஈர்த்த வெற்றிகரமான தலைமை செயலதிகாரிகளாக விளங்குகின்றனர்.

நோர்வடிசின் (Norvatis) சி.இ.ஓ வசந்த் நரசிம்மன்

பட மூலாதாரம், Twitter/Vas Narasimhan

எப்படி இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் இவ்வளவு திறம்பட செயல் ஆற்றுகிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. மேலும் இந்தியர்கள் ஏன் தாய்நாட்டில் பணிபுரியாமல் மேலை நாடுகளுக்குச் செல்கின்றனர் என்ற கேள்வியும் உண்டு. இதை பற்றி சற்று விளக்கமாக பார்ப்போம்.

எப்போது இந்தியர்கள் அதிகளவில் வெளிநாடுகளை நோக்கி நகர்ந்தனர்?

Y2K என்ற மிகப் பெரிய தொழில்நுட்பம் சார்ந்த பிரச்னையை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? இதை ஆங்கிலத்தில் ‘Year 2000 Problem’ என்பார்கள். Y என்றால் Year என்றும் 2000-வது ஆண்டை சுருக்கி 2K என்றும் கூறினர். இந்த காலகட்டத்தில் தான் இந்தியர்கள் பலருக்கு அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் வாய்ப்புகள் அதிகளவில் கிடைத்தன. Y2K என்பது, 2000-ம் ஆண்டுக்கு முன்னர் வரை ஆண்டை இரண்டு இலக்கம் கொண்டே நாம் கணினியில் சேமித்து வந்தோம் எ.டு (1998-ஐ 98 என்று மட்டுமே குறிப்பிட்டோம்) 2000-வது ஆண்டு வந்த பிறகு ’00’ என்று கணினி சேமிப்பில் எடுத்துக்கொண்டதால் பல பிரச்னைகள் உருவாகின.

இந்த இரு எண் இலக்க பைனரி கோட் (Binary Code) என்பார்கள். இதனால் தொழில்நுட்ப துறையில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு அது உலகளாவிய பங்குச்சந்தை வீழ்ச்சிக்கும் வித்திட்டது. பைனரி கோட் முறையில் இந்தியர்கள் சற்று கைத்தேர்ந்தவர்களாக இருந்த காரணத்தினால் அவர்களுக்கு அயல் நாடுகளில் வேலைவாய்ப்பு அதிகளவில் கிடைத்தது. எனவே, அதை நோக்கி பலரும் நகர்ந்தனர். இப்படித்தான் லட்சக்கணக்கான இந்தியர்களின் அயல்நாட்டு படையெடுப்பு தொடங்கியது.

இந்த Y2K பிரச்னை சரியான பிறகு வெளிநாடுகளில் வேலை இருக்காது என்றனர் பலர். ஆனால், இந்தியர்கள் பொதுவாகவே புதிய விடயங்களை ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள நினைப்பவர்களாக அறியப்படுபவர்கள். அப்படி கற்றுக்கொண்டு இப்போது வரை பல துறைகளில் சாதித்துக்கொண்டே இருக்கின்றனர்.

இந்த தொடரில் வெளிவந்த கட்டுரைகள்:

இந்தியர்கள் இந்தியர்களாக இருப்பதாலேயே திறம்பட செயல் ஆற்றுகிறார்கள், அது எப்படி? பார்ப்போம் வாருங்கள்:

1. கூட்டு குடும்ப வாழ்க்கை முறை

இந்தியாவில் பல உறவு முறைகளை பாராட்டி வாழ்வதே வழக்கம். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, தங்கை, அண்ணன் என்று வாழும் வாழ்க்கை முறை இன்னும் வழக்கத்தில் உண்டு. அப்படி உறவின் மேன்மையை புரிந்து கொண்டு அவர்களை அனுசரித்து அன்புடன் பழகி, வாழ்க்கையை வழி நடத்தியதால் ஒரு தொழில் கட்டமைப்பிலும் அவர்களால் சிறப்பாக பணியாளர்களை அனுசரித்து, திறம்பட வேலை செய்து வெற்றி வாகை சூட முடிகிறது.

2. கலாசார பின்புலம்

இந்தியா மதம் மற்றும் மொழி சார்பற்ற நாடாக உலக அரங்கில் பார்க்கப்படுகிறது. இதனாலேயே இங்கு பல்வேறு மொழிகளும் மதங்களும் வாழ்கின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும் எந்த ஒரு இந்தியனுக்கும் சூழலுக்கேற்ப வாழும் தன்மை உண்டு. ஒவ்வொரு நிறுவனத்தின் மிக முக்கிய பதவியான தலைமை செயலதிகாரியாக பல முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை வரும். அப்போது சீனா, ரஷ்யா, அமெரிக்கா என்று பல நாடுகளின் நிலையில் இருந்து யோசித்து செயலாற்ற வேண்டும். அப்போது அந்த பொறுப்பை ஒரு இந்தியரிடம் கொடுக்கும் பட்சத்தில் சிறப்பாக மொழி தாண்டி, மதம் தாண்டி, உணர்வுபூர்வமாக முடிவெடுக்க உறுதுணையாக இருக்கும். இது இந்தியர்கள் மீது மற்ற நாட்டவருக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

மாதிரி படம்

பட மூலாதாரம், Getty Images

3. வாய்ப்பின் முக்கியத்துவம்

இந்தியாவில் உணவுக்கு வழியில்லா ஏழ்மை நிலையும் உண்டு, ஆடி காரில் ஒய்யாரமாக செல்லும் சொகுசு வாழ்க்கை முறையும் உண்டு. இதைப் பார்த்து வளர்ந்த எந்த ஒரு இந்தியனுக்கும் வாய்ப்பின் முக்கியத்துவம் புரியும். வாய்ப்பு கிடைத்தால் அதை சரியாக பற்றிக்கொண்டு செயலாற்ற வேண்டும் என்ற துடிப்பு இருப்பதால் அமெரிக்கா போன்ற பெரு நாடுகளில், அங்குள்ள புகழ்ப்பெற்ற நகரங்களில் கிடைக்கும் வாய்ப்பை நிச்சயம் நழுவ விடுவதில்லை.

இதுவரை இந்தியர்களை தொழில்நுட்பவாதிகள் என்று கூறிவந்தவர்கள் இப்போது தொழில்நுட்ப வல்லுநர்கள் என்கின்றனர். இந்திய வம்சாவளியை சார்ந்த பலரும் தத்தமது துறைகளில் சாதித்து வருவதே இதற்கு காரணம்.

4. சமமாக நடத்துதல்

நிறம், மதம், மொழி தாண்டிய வாழ்க்கையை இந்தியாவில் பார்த்துவிட்டதால் பணியாளர்களையும், சக தொழிலாளர்களையும் சமமாக நடத்தும் நோக்கம் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தலைமை செயலதிகாரிகளிடம் அதிகம் உண்டு. எடுத்துக்காட்டாக ஒருமுறை, சுந்தர் பிச்சையிடம் சண்டை இட்டுக்கொண்டு இரு பணியாளர்கள் வந்தபோது இருவரையும் விட்டுக்கொடுக்காமல், இருவரது வாதமும் சரியே என்று சுமூகமாக பேசி பிரச்னையை அவர் தீர்த்து வைத்ததாக கூறப்படுவதை சொல்லலாம்.

இந்த தொடரில் வெளிவந்த கட்டுரைகள்:

5. விசுவாசமும் விடாமுயற்சியும்

பராக் அக்ரவால் ட்விட்டரில் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் விடாமுயற்சியுடன் பணியாற்றிய பிறகே அந்த நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி என்ற அங்கீகாரத்தை பெற்றார். சத்யா நாதெல்ல 22 ஆண்டுகள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தொடர்ச்சியாக விடாமுயற்சியுடன் பணியாற்றிய பிறகே அதன் தலைமை செயலதிகாரி என்ற மாபெரும் பொறுப்புக்கு உயர்ந்தார். சுந்தர் பிச்சைக்கு பல வாய்ப்புகள் தேடி வந்தபோதும் அவர் கூகுளை விட்டு ஒருபோதும் நகர்ந்தது இல்லை. இப்படி இந்தியர்கள் தங்கள் தொழிலுக்கு உண்மையாகவும், விடாமுயற்சியுடன் செயல்பட்டதாலும் வெற்றி அடைந்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

6. கல்வி முறை

பொதுவாக மற்ற நாட்டவர்கள் ஒரு துறையை தேர்வு செய்து அதில் மட்டுமே கவனம் செலுத்தி கைத்தேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், இந்தியாவை பொறுத்தவரை STEM என்று அழைக்கக்கூடிய கல்வி முறை உண்டு. அதாவது (S – Science, T – Technology, E – Engineering, M – Mathematics) சிறுவயதில் இருந்தே இதைப் பற்றிய அடிப்படை அறிவு கொடுக்கப்படுகிறது. இதனால் எந்த துறையை எடுத்தாலும் அதில் குறைந்தபட்சம் மேலோட்டமான புரிதலாவது இந்தியர்களுக்கு இயல்பாகவே இருக்கத்தான் செய்கிறது. பொறியியல் (Engineering) பற்றி கூறவே தேவை இல்லை. கிட்டத்தட்ட 2,500 பொறியியல் கல்லூரிகள் இந்தியாவில் இருக்கின்றன. ஒரு வருடத்திற்கு சுமார் 15 லட்சம் பட்டதாரிகள் உருவாகிறார்கள். இதுபோல பல துறை சார்ந்து படித்து வரும் பட்டதாரிகளுக்கு உலகளாவிய தேவை இருப்பதால், இந்தியர்கள் போட்டியில் முந்துவதில் வியப்பேதுமில்லை. மேலும் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.

இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 140 கோடி. இதில் “நேஷனல் மேலாய்வு ஆஃப் இந்தியா” வெளியிட்ட அறிக்கையின்படி, கிட்டத்தட்ட 77.7% மக்கள் எழுத்தறிவு பெற்றவர்கள். இவர்கள் அனைவருக்கும் உயர்ந்த பதவி, கைநிறைய சம்பளம் வேண்டுமென்றால் எங்கே செல்வது? இதற்கான பதிலே இந்தியர்களின் உலகளாவிய தேடலின் மூலக்காரணம்.

கல்வி முறை

பட மூலாதாரம், Getty Images

7. பணமும் பொறுப்பும்

இயல்பாகவே இந்தியர்களுக்கு அமெரிக்கர்களை விட சேமிக்கும் பண்பும், பக்குவமும் அதிகம். ஒரு தலைமை அதிகாரிக்கு நிச்சயம் பண சுழற்சி பற்றி அறிந்திருத்தல் அவசியம். பணத்தை பொறுத்தே எந்த தொழிலும், தொழில்சார்ந்த வளர்ச்சியும் அடங்கியுள்ளது. அப்படிப்பட்ட பணத்தை திறம்பட பயன்படுத்துவதால் இந்தியர்களிடம் நிறுவனத்தின் உயர்ந்த பொறுப்பு சென்றடைகிறது என்பது குறிப்பிடத்தக்க காரணங்களில் ஒன்று.

அடுத்து பொறுப்பு, எந்த காரியத்தை எடுத்தாலும் அதை பொறுப்புடன் முடித்து காட்டவேண்டும் என்ற உத்வேகம் இந்தியர்களுக்கு அதிகம் உண்டு. அதனால் அவர்களிடம் கொடுத்த பொறுப்பை தட்டிக்கழிக்காமல் பல்வேறு சவால்கள் வந்தாலும் பொருட்படுத்தாமல் முடித்து காட்டுவர். இது பொதுவான ஒரு கண்ணோட்டமாக தெரியலாம், ஆனால், இதுவே அமெரிக்க பெரு நிறுவனங்களின் மதிப்பீடாகவும் உள்ளது.

இந்த தொடரில் வெளிவந்த கட்டுரைகள்:

தொடர்ந்து தடம் பதிக்கும் தமிழர்கள்

பெப்சி கோவின் (Pepsi. Co) முன்னாள் தலைவர் இந்திரா நூயி, கூகுளின் சுந்தர் பிச்சை, நோர்வடிசின் வசந்த் நரசிம்மன் எண்ணற்ற தமிழர்கள் உலக அரங்கில் முக்கிய பங்கை வகிப்பவர்களாக திகழ்கின்றனர். அதில் இவர்கள் மூவரும் பலரின் பாராட்டுக்குரியவர்கள். அதிலும் இந்திரா நூயி பெப்சி கோ நிறுவனம் மூழ்க இருந்த கட்டத்தில் சரியான பல முடிவுகளை எடுத்து அதை திறம்பட தூக்கி நிறுத்தியதை விளக்க வேண்டிய அவசியமில்லை. இப்படியாக உலகில் ஆதிக்கம் செலுத்தும் அரசாங்க அமைப்புகள் முதல் தொழில்நுட்ப உலகை ஆண்டு வரும் நிறுவனங்கள் வரை தமிழர்களின் பங்களிப்பு அளவிடற்கரியது.

MPI (Migration Policy Institute) அமைப்பின் தரவின்படி, அமெரிக்காவில் மட்டும் 26,88,000 தமிழர்கள் வாழ்கின்றனர். இது ஒரேயொரு நாட்டில் தமிழர்கள் ஏற்படுத்திய தாக்கம் மட்டுமே, இதுபோன்று உலக நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் முத்திரை பதித்து வருகின்றனர். பல்வேறு நாடுகளில் அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களின் திறமைகளை மேம்படுத்திக்கொண்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான தமிழர்களின் சாதனை இனிவரும் காலங்களிலும் தொடரும்; தொடர வேண்டும்.

இப்படி இந்திய நாட்டுக்கு பெருமை தேடி தந்த, தரும், தரப்போகின்றவர்களை அதிர்ஷ்டத்தினால் ஜெயித்தார்கள் என்று சிலர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. தர்க்க சிந்தனையினாலும், நுட்பமான அறிவினாலும் இவர்கள் பெற்ற வெற்றி உண்மையிலேயே மகத்தானது. தலைமை செயலதிகாரி என்பது போன்ற பெரிய பதவிகளை நோக்கி இவர்கள் சென்றார்கள் என்பதை விட தலைமை செயலதிகாரி என்ற மிகப் பெரும் பொறுப்பு இவர்களை நோக்கி வந்தது என்பதே பொருத்தமானதாக இருக்கும்.

மேலும், இந்தியர்கள் நடுத்தர மேலாண்மையிலும் (Middle Management) பணியாற்றி வருகின்றனர். இதில் நடுத்தர மேலாண்மை பற்றி விளக்கவேண்டுமெனில், எப்படி ஒரு உடலை தாங்க முதுகெலும்பு அவசியமோ அதைப் போன்று, நிறுவனங்களுக்கு நடுத்தர மேலாண்மை பணியும், பணிபுரிபவர்களும் மிகவும் அவசியம். இவர்களே “சி – லெவல்” என்று சொல்லக்கூடிய உயரதிகாரிகளிடம் சென்று தங்கள் நிறுவனத்தில் நடக்கக்கூடிய அடிப்படை நிகழ்வுகளை எடுத்துரைத்து, பல யோசனைகளைக் கூறி நிறுவனம் வளர வித்திடுவார்.

பெப்சி கோவின் (Pepsi. Co) முன்னாள் தலைவர் இந்திரா நூயி

பட மூலாதாரம், Getty Images

யார் அதில் திறம்பட செயல்படுகிறார்களோ அவர்களே தலைமை நிர்வாக அதிகாரி என்ற பொறுப்பு வரை செல்ல முடியும். ஒருவர் தலைமை அதிகாரி ஆக வேண்டுமெனில் அவர் ‘மிடில் மேனேஜ்மென்ட்’ என்று சொல்லக்கூடிய நடுத்தர மேலாண்மையில் சாதிக்க வேண்டியது அவசியம். இப்படிப்பட்ட பொறுப்பில் இந்தியர்கள் பலர் சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்கள். இப்போது இந்திய திறமைகள் மீதான வெளிநாட்டவர்களின் நம்பிக்கை முன்னெப்போதுமில்லாத அளவை அடைந்துள்ளது.

எனவே, இப்போது வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்து வந்து இங்கே தங்களது தொழிலை விரிவாக்கம் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை இந்தியாவில் $83.57 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அந்நிய நேரடி முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசு சமீபத்திய வெளியிட்ட தரவு கூறுகிறது. இது எந்த இதற்கு முந்தைய எந்த ஆண்டையும் விட மிக அதிகமான தொகையாகும். இந்தியர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்தாலும் சரி, இந்தியாவில் பணிபுரிந்தாலும் சரி, திறமைக்கும் பண்புக்கும் எப்போதும் மதிப்புண்டு என்பது உறுதியாகியுள்ளது.

(தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட தொடர் தொழில்முனைவோரான (Serial Entrepreneur) கட்டுரையாளர் அருண் குமார் பொன்னுசாமி, கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். மென்பொருளிலும், தொழில்நுட்பத்திலும் ஆர்வம் கொண்ட இவர், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலும், கோயம்புத்தூரிலும் சொந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். சமீபத்தில் இவரது நிறுவனம் உலகளாவிய தகவல் பரிமாற்ற, உரையாடல் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், பலருக்கும் தொழில் பற்றிய அறிவை கொண்டு செல்லவேண்டும் என்பதற்காக தமிழில் யூடியூப் சேனல் ஒன்றையும் இவர் நடத்தி வருகிறார்.)

தயாரிப்பு: சாய்ராம் ஜெயராமன், பிபிசி தமிழ்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »