Press "Enter" to skip to content

ஈலோன் மஸ்க்: பில்லியன் டாலர்களை இழக்கும் டெஸ்லாவின் புதிய தொழிற்சாலைகள்

  • அனபெல் லியாங்
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், Reuters

கார் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விநியோகத்தில் சீனாவில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் மின்கலவடுக்கு (பேட்டரி) தட்டுப்பாடுகள் காரணமாக, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் உள்ள டெஸ்லாவின் புதிய தொழிற்சாலைகள், “பில்லியன் கணக்கான டாலர்களை இழந்துவருவதாக” அதன் நிறுவனர் ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

பெர்லின் மற்றும் டெக்சாஸின் ஆஸ்டினில் உள்ள டெஸ்லா தொழிற்சாலைகளில் “பிரம்மாண்டமான உலையில் இடப்படும் பணத்தைப் போல” இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா தொழிற்சாலை அமைந்துள்ள ஷாங்காய் உட்பட சீனாவில் இந்தாண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்குகள், உற்பத்தியாளர்கள் செயல்படுவதை கடினமாக்கியுள்ளது.

சமீப காலமாக, அந்நிறுவனத்தில் வேலை இழப்புகள் குறித்தும் ஈலோன் மஸ்க் எச்சரித்துவருகிறார்.

“பிரம்மாண்டமான உலையில் இடப்படும் பணத்தைப் போல, பெர்லின் மற்றும் ஆஸ்டின் தொழிற்சாலைகளில் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று மின்சார வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த தொழிற்சாலைகள், “தற்போது பில்லியன் கணக்கான டாலர்களை இழந்துவருகின்றன. இத்தொழிற்சாலைகளுக்கென பெரும் செலவு செய்யப்படுகிறது, ஆனால் எந்த உற்பத்தியும் நடைபெறவில்லை,” என அந்நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ‘டெஸ்லா ஓனர்ஸ் ஆஃப் சிலிக்கான் வேலி’ என்ற கிளப்புக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.

ஜிகா ஃபேக்டரிகள் என சொல்லப்படும் அத்தொழிற்சாலைகள் (பெரிய உற்பத்தி வசதியை கொண்டுள்ள தொழிற்சாலைகள்), இந்தாண்டின் தொடக்கத்தில்தான் தொடங்கப்பட்டதால், அவை உற்பத்தியை பெருக்குவதில் போராடுகின்றன என அவர் தெரிவித்தார்.

இழப்பு ஏற்பட்டுள்ளது ஏன்?

கார் உற்பத்திக்குத் தேவையான மின்கலவடுக்கு (பேட்டரி)க்கான சில மூலப்பொருட்களை சீன துறைமுகத்திலிருந்து “வெளியேற்ற யாரும் இல்லாமல்” அங்கேயே சிக்கியுள்ளதால், ஆஸ்டினில் உள்ள தொழிற்சாலையில் “சிறிய” எண்ணிக்கையிலேயே கார்கள் உற்பத்தி செய்யப்படுவதாக, அவர் தெரிவித்தார்.

“இவை அனைத்தும் வேகமாக சரிசெய்யப்படும். ஆனால், அதற்கு அதிகமான கவனம் தேவை” எனவும் மஸ்க் தெரிவித்தார்.

கடந்த மாத இறுதியில் பதிவு செய்யப்பட்ட இந்த நேர்காணலின் இந்த பகுதி புதன்கிழமை (ஜூன் 22) தான் வெளியானது.

ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம், Reuters

கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பால் இந்தாண்டின் தொடக்கத்தில் சீனாவின் பல்வேறு நகரங்களில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

மக்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும்வகையிலான பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் பொருளாதாரம், உற்பத்தி, ஏற்றுமதி மையமாக உள்ள ஷாங்காயிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஷாங்காயில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, டெஸ்லாவுக்கு “மிக மிக கடினமான தருணம்” என ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். இதனால், அத்தொழிற்சாலையில் பெருமளவு உற்பத்தியை பல வாரங்களுக்கு நிறுத்த வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது.

தொழிற்சாலையின் மேம்பாட்டு பணிகளுக்காக அத்தொழிற்சாலை மீண்டும் அடுத்த மாதம் இரு வாரங்கள் மூடப்பட்ட உள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை அந்நிறுவனத்தின் குறிப்பேட்டை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.

இது தொழிற்சாலையின் உற்பத்தியை பெருக்குவதை, அதாவது வாரந்தோறும் 22,000 கார்கள் உற்பத்திக்கு அருகில் செல்வதை இலக்காகக் கொண்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிபிசி தொடர்புகொண்டு கேட்டபோது டெஸ்லா நிறுவனம் கருத்து தெரிவிக்கவில்லை.

அலுமினியம் மற்றும் லித்தியம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்ந்ததால், அமெரிக்காவில் கார்களின் விலையை சுமார் 5 சதவீதம் டெஸ்லா நிறுவனம் கடந்த வாரம் உயர்த்தியது.

இந்த வாரம், தனது பொருளாதாரத்தைப் பற்றி “மிக மோசமான உணர்வு” தனக்கு இருப்பதாக மஸ்க் முன்னர் கூறியிருந்த நிலையில், டெஸ்லாவின் உலகளாவிய பணியாளர்களில் 3.5 சதவீதத்தை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

இதற்கிடையில், ஜெர்மன் தேர் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூ, வடகிழக்கு சீன நகரமான ஷென்யாங்கில் உள்ள அதன் புதிய 2.2 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டிலான (1.8 பில்லியன் யூரோக்கள்) தொழிற்சாலையில் முறையாக உற்பத்தியைத் தொடங்கியதாக ஜூன் 23 அன்று தெரிவித்தது.

சீனாவில் அந்நிறுவனத்தின் மூன்றாவது ஆலையான இங்கு, நாட்டில் அதன் ஆண்டு உற்பத்தியை 7,00,000லிருந்து 8,30,000 ஆக உயர்த்தும் என்று பி.எம்.டபிள்யூ. கூறியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »