Press "Enter" to skip to content

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக்கொலை: பாதுகாப்பான நாட்டில் குற்றம் நடந்தது எப்படி?

  • ரூபர்ட் விங்ஃபீல்ட் – ஹேய்ஸ்
  • பிபிசி நியூஸ், நாரா

பட மூலாதாரம், Getty Images

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று காலை மர்ம நபர் ஒருவரால் சுடப்பட்டு உயிரிழந்தார்.

இந்த செய்தி வந்ததிலிருந்து, எனது நண்பர்கள் எனக்கு தெரிந்தவர்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியைதான் கேட்கின்றனர். இம்மாதிரியான ஒரு நிகழ்வு ஜப்பானில் எப்படி நடந்தது என்று?

எனக்கும் அதே உணர்வுதான். இங்கு வாழ்பவராக நீங்கள் இருந்தால் மிக மோசமான குற்றங்கள் குறித்து எல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.

ஆனால் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் குறித்த விவரம் வெளியானபோது எனக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது.

ஷின்சோ அபே ஜப்பானின் முன்னாள் பிரதமர்தான், ஆனால் ஜப்பானின் புகழ் பெற்ற அரசியல் தலைவர் அவர். நீண்ட நாட்களுக்கு பிரதமராக இருந்தவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. கிட்டதட்ட 30 ஆண்டுகள் ஜப்பானின் புகழ்பெற்ற அரசியல் தலைவராக திகழ்ந்தவர் அவர்.

அப்படியிருக்கும்போது அபேவை யார் கொல்ல நினைத்திருப்பார்கள்? அதுவும் ஏன்?

இதேபோன்றதொரு மோசமான அரசியல் வன்முறை குறித்து நினைவுகூர நான் விரும்புகிறேன். உடனே என் நினைவுக்கு வருவது 1986ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து பிரதமர் ஓலஃப் பால்மே சுடப்பட்ட நிகழ்வுதான்.

ஜப்பானில் இருப்பவர்கள், மோசமான வன்முறைகள் குறித்தோ அல்லது குற்றங்கள் குறித்தோ யோசிக்க வேண்டியதில்லை என்று சொன்னது மிகைப்படுத்தல் அல்ல.

ஆம். ஜப்பானில்தான் புகழ்பெற்ற யாசுகா என்ற வன்முறை கும்பல் உள்ளது. ஆனால் அவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எந்த தொடர்பும் ஏற்படாது.

ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச் செயலில் ஈடுபடும் யாசுகாவினர் கூட துப்பாக்கியை பயன்படுத்த யோசிப்பர். ஏனென்றால் சட்டவிரோதமாக நீங்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்காக நீங்கள் செலுத்தும் அபராதம் மிகப் பெரியதாக இருக்கும்.

ஜப்பானில் துப்பாக்கி வைத்திருப்பது என்பது மிக கடினம். துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்றால், குற்றவியல் வழக்குகள் ஏதும் இருக்கக் கூடாது, கட்டாய பயிற்சி பெற்றிருக்க வேண்டும், மனநிலை சோதனையில் ஈடுப்படுத்தப்படுவீர்கள், மேலும் காவல்துறையினர் மற்றும் உங்கள் அக்கம்பக்கத்தினரிடம் எல்லாம் மிக தீவிரமான விசாரணைகள் நடைபெறும்.

அதேபோல துப்பாக்கி குற்றங்கள் இங்கு நடைபெறுவதும் இல்லை. ஒரு வருடத்திற்கு 10க்கும் குறைவான துப்பாக்கி தொடர்பான மரணங்களே இங்கு நடைபெறும். 2017ஆம் ஆண்டில் அது வெறும் மூன்றாக இருந்தது.

சரி குற்றத்தில் ஈடுபட்டது யார்? அவருக்கு எங்கிருந்து துப்பாக்கி வந்திருக்கும்?

அபேவை சுட்டதாக கைது செய்யப்பட்ட 41 வயது நபர், நாட்டின் முன்னாள் தற்காப்பு படை வீரர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தற்காப்புப் படை ராணுவத்திற்கு நிகரானது.

ஷின்சோ அபேவைவை சுட்டுக்கொன்றவராக கருதப்படும் இந்த நபரை சம்பவ இடத்திலேயே காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

பட மூலாதாரம், Reuters

சற்று உற்று நோக்கினால் அவர் கடற்படையில் வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே இருந்துள்ளார். அதேபோல அவர் பயன்படுத்திய துப்பாக்கியும் வித்தியாசமாக உள்ளது. துப்பாக்கிச் சுடும் சம்பவம் நடைபெற்ற பின் பகிரப்பட்ட புகைப்படத்தில் துப்பாக்கி கீழே இருப்பதை பார்க்க முடிந்தது. அதில் அது வீட்டில் செய்யப்பட்ட துப்பாக்கியை போல உள்ளது.

அது ஏதோ இணையதளத்தில் பார்த்து செய்யப்பட்ட துப்பாக்கியை போல இருந்தது.

சரி. இது திட்டமிட்ட ஒரு அரசியல் தாக்குதலா? அல்லது புகழ்பெற்ற ஒரு நபரை சுட்டு தானும் பிரபலமாக வேண்டும் என்ற மோசமான ஆசையா? என்ன காரணம் என நமக்கு இதுவரை தெரியாது.

ஜப்பானில் இதற்கு முன்பும் அரசியல் கொலைகள் நடந்துள்ளன.

1960ஆம் ஆண்டில் ஜப்பானின் சோஷியலிஸ்ட் கட்சியை சேர்ந்த இனேஜிரோ ஆசானுமா வலதுசாரி நபர் ஒருவரால் சாமுராய் வாலால் வயிற்றில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். ஜப்பானில் தீவிர வலதுசாரி நபர்கள் இன்றும் உள்ளனர். இருப்பினும் வலதுசாரி தேசியவாதியான அபே ஒரு தாக்குதல் இலக்காக இருக்க வாய்ப்பில்லை.

கடந்த சில வருடங்களாக வேறு சில குற்றங்கள் இங்கு அதிகரித்து வருவதை நம்மால் காண முடிகிறது.

தனிமையில் இருக்கும் ஒரு ஆண் பிறரிடம் வன்மத்தை வளர்த்து அதனால் ஏற்படும் குற்றம்.

2019ஆம் ஆண்டு க்யூடூ என்னும் புகழ்பெற்ற அனிமேஷன் ஸ்டூடியோ அமைந்துள்ள கட்டடம் ஒன்றிற்கு ஒருவர் தீ வைத்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.

தனது வேலைகளை அந்த ஸ்டுடியோ திருடிவிட்டதால் அதன் மீது கோபமாக இருந்ததாகவும் எனவே அந்த குற்றத்தில் ஈடுபட்டதாகவும் அந்த நபர் காவல்துறையிடம் தெரிவித்தார்.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த ஜப்பான் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

பட மூலாதாரம், Getty Images

இதேபோன்று 2008ஆம் ஆண்டு மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர், டோக்யோவின் அகிஹாபாரா மாவட்டத்தில் உள்ள கடைவீதியில் ட்ரக் ஒன்றை ஓட்டிச் சென்றார். பின் அங்கிருந்து வெளியேறி அங்குள்ளவர்களை கத்தியால் தாக்கினார்.

இதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு முன்பு இணையத்தில், “அகிஹபாராவில் உள்ள மக்களை நான் கொல்லுவேன். எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை, நான் அழகாக இல்லை என்பதால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறேன். நான் குப்பையைக் காட்டிலும் கேவலமாக மதிக்கப்படுகிறேன்” என்ற செய்தியை அந்த இளைஞர் பதிவிட்டிருந்தார்.

அபேவின் கொலை இதில் எந்த காரணத்திற்காக நடைபெற்றது என்று தெரியவில்லை. ஆனால் இந்த சம்பவம் ஜப்பானை நிச்சயம் மாற்றிவிடும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

ஜப்பான் பாதுகாப்பான ஒரு நாடாக இருந்தாலும், இங்கு இறுக்கமான பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை. தேர்தல் பிரசாரங்களின் போது அரசியல் தலைவர்கள் கடை வீதிகளில் உள்ள மக்களிடம் கைக் குலுக்கி சகஜமாக பேசுவார்கள். சாலைகளில் நின்று உரையாற்றுவார்கள்.

இதே காரணத்தால்தான் அபேவை துப்பாக்கிதாரியும் நெருங்கி தாக்க முடிந்தது. எனவே இன்றைய சம்பவத்திற்கு இந்த சூழ்நிலை நிச்சயமாக மாறிவிடும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »