Press "Enter" to skip to content

டொனால்ட் ட்ரம்ப்: ரகசிய அரசு ஆவணங்களை வீட்டில் வைத்திருந்தாரா ட்ரம்ப்? லாக்கரை உடைத்து எஃப்.பி.ஐ சோதனை

பட மூலாதாரம், Getty Images

புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், அவர்கள் தனது வீட்டில் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்ததாகவும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கிறார்.

தனது மார்-எ-லாகோ இல்லம் “எஃப்.பி.ஐ. ஏஜென்டுகளின் குழுவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது” என்று ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

அமெரிக்க நேரப்படி திங்கள்கிழமை இரவில் இந்தச் சோதனை நடந்திருக்கிறது. அதிபராக இருந்த போது நாட்டின் அதிகாரப்பூர்வ ஆவணங்களைக் கையாண்ட விதம் குறித்த விசாரணையுடன் இந்தச் சோதனை தொடர்புடையது என்று கூறப்படுகிறது.

தன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையை கடுமையாக விமர்சித்துள்ள ட்ரம்ப், “இது நாட்டின் இருண்ட காலம்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டு, இதற்கு முன் எந்த அமெரிக்க அதிபருக்கும் இதுபோன்று எதுவும் நடந்ததில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தச் சோனை குறித்து எஃப்.பி.ஐ. அமைப்போ, அமெரிக்காவின் நீதித்துறையோ கருத்து எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

அமெரிக்கச் சட்டப்படி அதிபராக இருந்தவர்கள் பதவிக் காலத்தில் தாங்கள் கையாண்ட அனைத்து ஆவணங்களையும் தேசிய ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

அமெரிக்காவின் மைய அரசின் சட்டங்களும் ரகசிய ஆவணங்களை கையாள்வது குறித்து விவரிக்கின்றன.

இந்தச் சோதனையின்போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக ட்ரம்பின் வழக்கறிஞர் கிறிஸ்டினா என்பிசி நியூஸிடம் கூறியுள்ளார்.

அதிபர் தேர்தலுக்கு இன்னும் இரு ஆண்டுகளே இருக்கும் நிலையில், ட்ரம்ப் வீட்டில் நடைபெற்றிருக்கும் சோதனை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

ட்ரம்ப் வீடு

பட மூலாதாரம், Getty Images

அனைத்து அரசு அமைப்புகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி வந்ததாகவும், அதனால் “அறிவிக்கப்படாத இந்தச் சோதனை அவசியமில்லை, ஏற்புடையதில்லை” என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அதிபர் தேர்தலில் மீண்டும் தாம் போட்டியிடுவதைத் தடுக்கவே நீதித்துறையை ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் ட்ரம்ப் குற்றம்சாட்டியிருக்கிறார்.

“இத்தகைய தாக்குதல்கள் மூன்றாம் உலக நாடுகளில் மட்டுமே நடக்கும் சாத்தியம் உண்டு. கெடுவாய்ப்பாக, இதுவரை காணாத ஊழலில் திழைக்கும் அமெரிக்கா இப்போது அந்த நாடுகளில் ஒன்றாக மாறிவிட்டது” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

புளோரிடாவில் சோதனை நடந்தபோது நியூயார்க் நகரில் உள்ள ட்ரம்ப் டவரில் ட்ரம்ப் இருந்ததாக சிபிஎஸ் நியூஸ் கூறுகிறது.

(இந்தச் செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »