Press "Enter" to skip to content

விவாகரத்தை எளிமைப்படுத்தும் நிபுணர்கள் – என்ன செய்வார்கள் இவர்கள்?

பட மூலாதாரம், Getty Images

விவாகரத்து மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியது. அதற்கான நடைமுறையும், உணர்வுபூர்வமாக அதைக் கையாளுவதும் மிகவும் கடினம். விவாகரத்து கோருபவர்களின் அந்தச் சுமையை குறைக்க உதவுகின்றனர் புதிய நிபுணர்கள் குழு.

60 வயதான கேட்டிக்கு, தன்னுடைய கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் இருக்கும் தொடர்பு தெரியவந்ததும் அடுத்த ஆறு மாத வாழ்க்கைத் தெளிவற்றதாக இருந்தது. அவர் விவாகரத்து செயல்முறையை, ‘நெருங்கிய ஒருவர் உயிரிழந்த துக்கத்துடன்’ ஒப்பிடுகிறார். இங்கிலாந்தின் பாத் அருகே வசிக்கும் கேட்டி, தனது 35 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தபோது மிகவும் மனமுடைந்திருந்தார். வழக்கறிஞராக இருந்த அவரது உடன்பிறந்தோரின் தோழி அவருக்கு ஒரு யோசனை கூறினார்.

“நான் விவாகரத்து பயிற்சியாளரின் உதவியைப் பெற முடிந்தால், அது என்னுடைய சிறந்த முதலீடாக இருக்கும் என்று அவர் என்னிடம் கூறினார்” என்கிறார் கேட்டி.

பிரிஸ்டலைச் சேர்ந்த விவாகரத்து பயிற்சியாளரைத் தொடர்பு கொண்ட கேட்டி, அதன் பிறகு தனக்கு ஏற்பட்டதை, வாழ்வை மாற்றிய அனுபவமாக விவரிக்கிறார். முன்னாள் வழக்கறிஞரான அவரது பயிற்சியாளர், விவாகரத்தைக் கையாள்வதில் உணர்வுபூர்வமான விஷயங்களில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். அது, புதிய வாழ்க்கையை ஒரு வாய்ப்பாகப் பார்க்க தனக்கு உதவியதாக கேட்டி கூறுகிறார். தனது திருமணத்தை நினைவூட்டும் பொருட்களை வீட்டிலிருந்து அகற்றிய கேட்டி, உலகம் முழுவதும் பயணம் செய்ய ஒரு வருட இடைவெளி எடுக்க முடிவு செய்தார்.

இந்த விவாகரத்து என்னை வரையறுக்கப் போவதில்லை என்று தான் உறுதியாக நினைத்ததை கேட்டி நினைவுகூருகிறார். “எனக்கு ஓர் அமர்வு நினைவிருக்கிறது, எனது விவாகரத்து பயிற்சியாளர் அலைகளில் பயணம் செய்வது பற்றி பேசினார். அலைகள் கடலில் கரடுமுரடானதாக பெரியதாக இருக்கலாம். ஆனால் நீங்கள் கரையை அடையும்போது என்ன நடக்கிறது என்பதுதான் மிகவும் முக்கியம்” என்கிறார் கேட்டி.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

வெவ்வேறு வாழ்க்கை நிகழ்வுகளால் ஏற்படும் மன அழுத்தத்தை அளவிடும் ஹோம்ஸ் மற்றும் ரஹே ஸ்ட்ரெஸ் ஸ்கேல் கூற்றுப்படி, மனிதர்களுக்கு அதிக மன அழுத்தத்தை தரும் நிகழ்வுகளில் விவாகரத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் வாழ்க்கைத் துணையின் மரணம் உள்ளது. ஆனால், விவாகரத்து பயிற்சியாளர்கள் விவாகரத்து நடைமுறையை சற்று எளிதாக்குவதாக உறுதியளிக்கின்றனர்.

திருமண உறவை முறித்துக்கொள்வது தொடர்பாக வழிகாட்ட விவாகரத்துப் பயற்சியாளரை நாடும் தம்பதிகள் மற்றும் தனிநபர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பல விவாகரத்து வழக்கறிஞர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை திருமண வாழ்வை முறித்துக் கொள்வதில் உள்ள உணர்ச்சி, நிதி மற்றும் பொருளாதார சவால்களைக் கையாள விவாகரத்து பயிற்சியாளரிடம் அனுப்புவதாகவும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

விவாகரத்து

பட மூலாதாரம், Getty Images

யாருக்கு விவாகரத்து பயிற்சியாளர் தேவைப்படும்?

டொராண்டோவைச் சேர்ந்த விவாகரத்து பயிற்சியாளரான நடாலியா ஜுவரெஸுக்கு, இத்தகைய உதவிகள் வழங்குவது மிகவும் தனிப்பட்டதாக இருந்தது. அவர் தனது 20 வயதில் நிச்சயதார்த்த வாழ்க்கை முடிவுக்கு வந்த பிறகு, இந்தப் பயிற்சி சேவையைத் தொடங்கினார். தற்போது நிச்சயதார்த்த மற்றும் திருமண வாழ்வு முடிக்கு வந்தவர்களுக்கு வழிகாட்டுகிறார்.

ஜுவரெஸ் நீண்ட செயல்முறையைக் கடைப்பிடிக்கிறார். முதற்கட்டமாக விவாகரத்துக்கு வழிவகுத்த பிரச்னையக் கண்டறிவதை உள்ளடக்கிய வாராந்திர அமர்வு நடத்துகிறார். அதனைத் தொடர்ந்து, மூன்று மாதப் பயிற்சியை அவர் பரிந்துரைக்கிறார். தன்னுடைய வாடிக்கையாளர்களில் பாதி பேர் ஆரம்பக்கட்ட அமர்விற்குப் பிறகும் அவருடன் தொடர்ந்து பயணிப்பதாக ஜுவரெஸ் கூறுகிறார்.

அவர் ஒரு முழுமையான அமர்வுக்கு 300 அமெரிக்க டாலர் கட்டணமாக வசூலிக்கிறார். மூன்று மாதப் பயிற்சிக்கு 3000 அமெரிக்க டாலர் வரை வசூலிக்கிறார்.

“மக்கள் விவாகரத்துப் பயிற்சியை நாடுவதற்கு பொதுவான காரணம், அவர்கள் உணர்ச்சி ரீதியாகவும் மனரீதியாகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்கிறார் ஜுவரெஸ்.

“அவர்கள் பல சிக்கலான உணர்ச்சிகளை எதிர்கொள்கிறார்கள். தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் உதவியை எதிர்பார்த்து அவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை” என்றும் அவர் கூறுகிறார்.

விவாகரத்து பயிற்சிக்கான கட்டணம் வசதியான நபர்களுக்கு உரியதாகவே உள்ளது. விவாகரத்து செயல்முறையின் போது ஏற்கெனவே மக்கள் பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். தனது வாடிக்கையாளர்கள் 30 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், அவர்களில் 60% ஆண்கள் என்றும் ஜுவரெஸ் கூறுகிறார்.

இது விவாகரத்தின்போது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து பெண்களுக்கு அதிக ஆதரவு கிடைப்பதைக் காட்டுவதாக அவர் கூறுகிறார்.

விவாகரத்து

பட மூலாதாரம், Getty Images

அவருடைய 80 சதவிகித வாடிக்கையாளர்கள் தனிநபராக இருந்தாலும், ஜோடிகளாக அவரை அணுகுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது.

தங்களுக்கு ஒரு மூன்றாம் தரப்பு தேவை என்பதை உணரும்போது அவர்கள் ஜோடிகளாக வருவதாக ஜுவரெஸ் கூறுகிறார். அவர்களுக்கு இடையே தகவல் தொடர்பு பிரச்சனை இருந்தாலோ, கடினமான உரையாடல்களால் சங்கடம் ஏற்படும் என்று உணர்ந்தாலோ அல்லது இருவரில் ஒருவர் விவாகரத்து வேண்டாம் என்று நினைத்தாலோ அவர்கள் ஜோடியாக வருவதாகவும் ஜுவரெஸ் கூறுகிறார்.

இணக்கமான பிரிவுகளில் கூட தம்பதிகள் விவாகரத்து மேற்கொள்ள ஒரு பயிற்சியாளரைப் பயன்படுத்தலாம் என்று கூறும் ஜுவரெஸ், பயிற்சியாளருடன் இணைந்து செயல்படுவது தனிப்பட்ட முறையில் அதை எடுத்துக்கொள்ளாமல் விவாகரத்துக்கான செயல்முறையில் கவனம் செலுத்த உதவும் என்கிறார்.

விவாகரத்து பயிற்சியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, திருமண உறவை முடிக்கும் செயல்முறையை முடிந்தவரை நேரடியானதாக மாற்ற மக்கள் எவ்வாறு முதலீடு செய்ய அதிக அளவில் தயாராகி வருகின்றனர் என்பதைக் காட்டுகிறது.

“விவாகரத்து விகிதங்கள் அதிகரித்ததால், விவாகரத்து சாதாரணமாகிவிட்டது” என்கிறார் மருத்துவ உளவியலாளரும் நியூயார்க் நகரத்தில் உள்ள மேடிசன் பார்க் உளவியல் சேவைகளின் நிறுவனருமான யாஸ்மின் சாட்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

“நிபுணத்துவத்தைத் தேடுவதில் நாம் மேலும் மேலும் வசதியாகி விட்டோம். இனி விவாகரத்து குணத்தின் குறைபாடாகவோ அல்லது ஒருவரது சொந்த வாழ்க்கைத் தோல்வியாகவோ பார்க்கப்படாது. இது உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு முன் நிதி ஆலோசனை நாடுவது போன்றது. இந்த விஷயத்தில், வேறொரு வாழ்க்கை முறைக்கு மாறுவதற்கு முன் சட்ட, உணர்ச்சி மற்றும் நடைமுறை ஆலோசனை நாடுகிறார்கள்” என்கிறார் யாஸ்மின் சாட்.

அமெரிக்காவைச் சேர்ந்த குடும்ப சட்ட வழக்கறிஞரான நிக்கோல் சோடோமா, தன்னிடம் விவாகரத்து கோரி வரும் தம்பதிகளைப் பயிற்சியாளர்களின் உதவியையும் நாடச் சொல்கிறார். “ஒரு விவாகரத்து பயிற்சியாளர் உங்களை அடையாளம் காணவும், நீண்ட காலத்திற்கு உங்களுக்குத் தேவைப்படும் விஷயங்கள் குறித்து ஆராயவும் நேரத்தை செலவிடுவார். அதே நேரத்தில் தற்போது நீங்கள் சந்திக்கும் சவால்களையும் எதிர்கொள்ள உதவுவார்” என்று நிக்கோல் சோடோமா கூறுகிறார்.

தற்போது, சோடோமா போன்ற பல வழக்கறிஞர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு விவாகரத்துப் பயிற்சியாளர்களைப் பரிந்துரைக்கின்றனர். சில தருணங்களில் அவர்களே பொருத்தமான பயிற்சியாளருடன் வாடிக்கையாளர்களை இணைக்கின்றனர். இது விவாகரத்து நடைமுறைக்கும், இந்த முறையை பிரபலப்படுத்துவதற்கும் உதவுகிறது.

ஆனால் விவாகரத்து செயல்முறைக்குள் மூன்றாம் தரப்பினரைக் கொண்டுவருவதில் சில ஆபத்துகளும் உள்ளன. “விவாகரத்துப் பயிற்சியாளர்கள் உரிமம் பெறாதவர்கள் மற்றும் அவர்களின் நிபுணத்துவம் பரவலாக வேறுபடுகிறது” என்கிறார் சாத்.

நீங்கள் நல்ல விவாகரத்துப் பயிற்சியாளரை அணுகியிருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த உங்கள் பயிற்சியாளரின் பின்னணியை சரிபார்ப்பது மிகவும் முக்கியம்” என்றும் சாத் கூறுகிறார்.

விவாகரத்து என்னை வரையறுக்காது

பயிற்சியாளரைப் பயன்படுத்தியது விவாகரத்துக்குப் பிந்தைய தனது வாழ்க்கைப் பாதையை முற்றிலும் மாற்றியதாக கேட்டி நம்புகிறார். விவாகரத்தான சில காலங்களிலேயே அவர் புதிய துணையை தேர்ந்தெடுத்தார். புதிய உறவில் நுழைவதற்கான சக்தி, நம்பிக்கை மற்றும் மீண்டுவரும் தன்மையை பயிற்சி அமர்வுகள் தனக்கு ஏற்படுத்தியதாக அவர் பாராட்டுகிறார்.

விவாகரத்துப் பயிற்சியாளரை நியமிப்பது விலை உயர்ந்ததாக இருந்தாலும், அது பயனுள்ள முதலீடு என்று கேட்டி நம்புகிறார். ஒரு தனிநபராக தன் மீது ஏற்படுத்திய தாக்கம் காரணமாக விவாகரத்துப் பயிற்சியாளரில் முதலீடு செய்ததற்கு தான் மிகவும் நன்றிக்கடன்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார்.

“நீங்கள் மனமுடைந்திருக்கலாம் அல்லது காயப்பட்டிருக்கலாம், ஆனால் இறுதியில் தகுதியான மாற்றத்திற்கு நீங்கள் தயாராக இருக்கும்போது, இந்தப் பயிற்சியானது உங்களுக்கு உதவும் எனக் கூறும் கேட்டி, விவாகரத்து தன்னை வரையறுக்கவில்லை என்றும் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாகத் தான் உணர்வதாகவும் கூறுகிறார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »