Press "Enter" to skip to content

சீன மக்கள் தொகை 60 ஆண்டுகளில் முதன் முறையாக சரிவு – என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Images

சீன மக்கள் தொகை கடந்த 60 ஆண்டுகளில் முதன் முறையாக சரிவு கண்டுள்ளது. தேசிய குழந்தை பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத வகையில் ஆயிரம் பேருக்கு -6.77ஆக குறைந்துள்ளது. 

சீனாவின் மக்கள் தொகை 2022-ம் ஆண்டு 141.18 கோடி. முந்தைய 2021-ம் ஆண்டில் இருந்து இது 8.5 லட்சம் குறைவு ஆகும். 

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர சீன அரசு கடைபிடித்த கொள்கைகளால் அங்கு குழந்தை பிறப்பு விகிதம் பல ஆண்டுகளாகவே குறைந்து வந்தது. 

ஆனால், ‘ஒரு குடும்பம் ஒரு குழந்தை’ கொள்கையை துறந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தொகை குறையும் யுகத்தில் சீனா நுழைந்திருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

2021-ம் ஆண்டு 7.52 சதவீதமாக இருந்த குழந்தை பிறப்பு விகிதமும் 2022-ம் ஆண்டில் வீழ்ச்சி கண்டிருப்பதாக சீன தேசிய புள்ளியியல் கழகம் செவ்வாயன்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ஒப்பீட்டளவில், 2021-ம் ஆண்டு அமெரிக்காவில் ஆயிரம் பேருக்கு 11.06 குழந்தைகளும், ஐக்கிய ராஜ்யத்தில் 10.08 குழந்தைகளும் பிறந்தன. மக்கள் தொகை அடிப்படையில் சீனாவை விரைவில் விஞ்சும் என்று கணிக்கப்பட்டுள்ள இந்தியாவில் அதே காலகட்டத்தில் 16.42-ஆக இருந்தது. 

சீன மக்கள் தொகை சரிவு

பட மூலாதாரம், Getty Images

முன்னதாக, சீன அரசு அளித்த புள்ளிவிவரம் மக்கள் தொகை நெருக்கடி வரக்கூடும் என்று அறிவித்தது. நீண்ட கால அடிப்படையில் நோக்கின், சீனாவின் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறையும், மூத்தோர் எண்ணிக்கை உயரும் என்பதால் சுகாதாரம், மருத்துவம் போன்ற பிற சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு சுமை அதிகரிக்கும்.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம் 2021-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி, பல தசாப்தங்களில் மிகக் குறைவான மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை சீனா கொண்டிருந்தது. ஜப்பான், தென் கொரியா போன்ற கிழக்கு ஆசிய நாடுகளிலும் மக்கள் தொகை சரிவு, வயது மூத்தோர் அதிகரிப்பு போன்ற நெருக்கடி நிலவுகிறது.

“இந்த போக்கு தொடரும், கொரோனா பேரிடருக்குப் பிறகு மேலும் மோசமடையக் கூடும்,” என்கிறார் பொருளாதார புலனாய்வுப் பிரிவின் முதன்மையான பொருளாதார நிபுணர்  யூ சூ. 2023-ம் ஆண்டில் சீன மக்கள் தொகை மேலும் சரிவை சந்திக்கும் என்று நம்பும் நிபுணர்களுள் அவரும் ஒருவர். 

“இளைஞர்களிடையே நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்னையும், எதிர்பார்த்த வருவாய் கிடைக்காததும் திருமணம், குழந்தை போன்ற எதிர்கால திட்டங்களை தள்ளிப் போடுகிறது. இதனால் குழந்தை பிறப்பும் குறைகிறது,” என்று அவர் மேலும் கூறுகிறார். 

சீன மக்கள் தொகை சரிவு

பட மூலாதாரம், Getty Images

கொரோனா எதிரொலியாக, முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் 2023-ம் ஆண்டில் சீனாவில் உயிரிழப்பு விகிதமும் அதிகமாக இருக்கும் என்று அவர் கூறுகிறார். கடந்த மாதம் பூஜ்யம் கோவிட் கொள்கை கொள்கையை சீனா கைவிட்ட பிறகு அங்கு கொரோனா  தொற்று வேகமாக அதிகரித்துள்ளது. 

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த 1979-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, சர்ச்சைக்குரிய ‘ஒரு குடும்பம் ஒரு குழந்தை’ திட்டமே சீனாவின் தற்போதைய மக்கள் தொகை சரியும் போக்கிற்கு காரணம். இந்த கொள்கையை மீறும் குடும்பங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது; உச்சக்கட்டமாக வேலையும் பறிக்கப்பட்டது.

வரலாற்று ரீதியாக, பெண் குழந்தையை விட ஆண் குழந்தையையே அதிகம் விரும்பும் சீன கலாசாரத்தில், இதன் எதிரொலியாக கருக்கலைப்புகள் அதிக அளவில் நடந்தன. இதனால், 1980-களில் ஆண் – பெண் விகிதம் மோசமாகத் தொடங்கியது. 

சீன மக்கள் தொகை சரிவு

பட மூலாதாரம், Getty Images

‘ஒரு குடும்பம் ஒரு குழந்தை’ கொள்கை 2016-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, தம்பதியர் 2 குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். சமீப ஆண்டுகளில், குழந்தை பிறப்பு விகிதம் குறையும் போக்கை கட்டுப்படுத்தும் பொருட்டு, ஒன்றுக்கு மேல் குழந்தை பெற்றால் வரிச்சலுகைகள், பேறுகால மருத்துவ பராமரிப்பு மற்றும் ஊக்கத்தொகை வழங்கவும் சீன அரசு முன்வந்தது. 

ஆனால், சீன அரசின் முயற்சி பலன் தரவில்லை. இதனால், குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்கப்படுத்தும் அரசின் அறிவிப்புகளில், குழந்தை பராமரிப்பு உள்ளிட்ட வேலைக்குச் செல்லும் பெண்களின் சுமையை குறைக்கவும், குழந்தையின் பள்ளிக் கல்விக்கு உதவவும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதே காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

2022, அக்டோபரில் குழந்தை பிறப்பை அதிகரிக்கச் செய்ய முன்னுரிமை அளிக்கப்படும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் அறிவித்தார். பெய்ஜிங்கில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற கூட்டத்தில், நாட்டின் மக்கள் தொகை சராசரியை இளமையாக வைத்திருக்க முன்னெச்சரிக்கையாக தேசிய அளவிலான உத்தியை தனது அரசு கடைபிடிக்கும் என்று அவர் உறுதியளித்தார். 

சீன மக்கள் தொகை சரிவு

பட மூலாதாரம், Getty Images

குழந்தை பிறப்பை ஊக்கப்படுத்துவது மட்டுமின்றி, வீடுகளிலும், பணியிடங்களிலும் பாலின சமத்துவத்தை மேம்படுத்த வேண்டும் என்று குடும்பம் மற்றும் மக்கள் தொகை ஆராய்ச்சிக்கான சிங்கப்பூர் மையத்தின் தேசிய பல்கலைக் கழக இயக்குநர் பஸ்ஸராவன் தீராவிச்சிட்செய்னன் தெரிவித்துள்ளார். 

ஸ்காண்டிநேவியன் நாடுகளில் அதுபோன்ற முயற்சிகள் குழந்தைப் பேற்றை அதிகரிப்பதில் நல்ல பலனை தந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். 

மக்கள் தொகை நெருக்கடியை சமாளிக்க சீனா ஏராளமான மனித வளத்தையும், நேரத்தையும் கொண்டிருக்கிறது என்பது சிங்கப்பூரின் முன்னாள் தலைமை புள்ளியியலாளர் பால் செயுங் கூற்று. 

“உடனடியாக ஒரு  பேரழிவை சந்திக்கும் நிலையில் சீனா இல்லை,” என்று அவர் கூறுகிறார். 

குழந்தைப் பிறப்பை அதிகரிப்பது மட்டுமே சீனாவின் பொருளார வளர்ச்சி வேகக் குறைவுக்கு பின்னால் உள்ள பிரச்னைகளை தீர்த்து விடாது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

“குழந்தைப் பேற்றை ஊக்கப்படுத்துவது உற்பத்தியையோ அல்லது உள்நாட்டு நுகர்வையோ கூடிய விரைவில் எந்த வகையிலும் அதிகரிக்கப் போவதில்லை,” என்கிறார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தி ஹாங்காங் பல்கலைக் கழக பேராசிரியர் ஸ்டூவர்ட் ஹீட்டல்-பாஸ்டென். 

“அமைப்பு ரீதியான பிரச்னைகளை சீனா எவ்வாறு கையாள்கிறது என்பதே மிகவும் முக்கியமானது,” என்பது அவரது கருத்து. 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »