Press "Enter" to skip to content

தேவன்ஷி சங்வி: 8 வயதில் மகளை துறவியாக்கிய வைர வியாபாரி – விமர்சிக்கும் ஆர்வலர்கள்

பட மூலாதாரம், RUPESH SONAWANE

எட்டு வயதான தேவன்ஷி சங்வி, வளர்ந்த பிறகு பல கோடி டாலர்கள் மதிப்பிலான வைர வியாபாரத்தை நடத்தியிருக்கலாம்.

ஆனால், ஒரு பணக்கார இந்திய வைர வியாபாரியின் மகளான இவர், இப்போது வெள்ளை ஆடை அணிந்து, வெறும் காலோடு, வீடு வீடாகச் சென்று யாசகம் செய்து வாழும், மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார்.

அதற்குக் காரணம் கடந்த வாரம் தனேஷ், அமி சங்வியின் இரண்டு மகள்களில் மூத்தவரான தேவன்ஷி, உலக வாழ்வைத் துறந்து துறவி ஆகியுள்ளார்.

2,500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய, உலகின் பழைமையான மதங்களில் ஒன்றான சமண மதத்தைப் பின்பற்றும் 45 லட்சம் சமணர்களில் சங்வி குடும்பத்தாரும் அடக்கம்.

கடந்த சில ஆண்டுகளாக உலக வாழ்வைத் துறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், இவ்வளவு சிறு வயதில் தேவன்ஷியை போன்ற குழந்தைகள் அதில் வருவது மிகவும் அசாதாரணமான விஷயம் என்று அந்த மதம் சார்ந்த அறிஞர்கள் கூறுகின்றனர்.

கடந்த புதன் கிழமையன்று மேற்கு குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் மூத்த சமண துறவிகள் முன்னிலையில் தேவன்ஷி “தீட்சை” – துறவு சபதம் எடுத்த விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள்.

பெற்றோருடன், சூரத்தின் புறநகர் பகுதியான வெசுவில் உள்ள அரங்குக்கு, நகைகளை அணிந்து, நேர்த்தியான பட்டுப்புடவைகளை உடுத்திக்கொண்டு அவர் வந்தார். அவருடைய தலையில் வைரம் பதித்த கிரீடம் இருந்தது.

விழா முடிந்தபோது, அவர் மற்ற துறவிகளுடன் நின்று, மொட்டையடித்த தலையோடு வெள்ளைப் புடவை அணிந்திருந்தார். அவர் காலடி எடுத்து வைக்கும்போது, காலடியில் ஏதேனும் பூச்சிகள் இருந்தால் தற்செயலாகக்கூட அவற்றை மிதித்துவிடக் கூடாது என்பதற்காக நடக்கும் பாதையைப் பெருக்கிக்கொண்டே செல்வதற்குப் பயன்படும் துடைப்பத்தை அவர் கையில் வைத்திருந்தார்.

அப்போதிருந்து, சமண துறவிகளும் துறவிகளும் வசிக்கும் மடாலயமான உபாஷ்ரயா ஒன்றில் தேவன்ஷி வசித்து வருகிறார்.

“அவர் இனி அவருடைய வீட்டில் வாழ முடியாது. அவருடைய பெற்றோர் இனி அவருடைய பெற்றோர் இல்லை. அவர் ஒரு சாத்வி,” என்று சங்வி குடும்பத்தின் நண்பரும் உள்ளூர் பாஜக உறுப்பினருமான சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி கீர்த்தி ஷா கூறுகிறார்.

“சமண மதத்தில் ஒரு பெண் துறவியின் வாழ்க்கை மிகவும் கடினமானது. அவர் இப்போது அனைத்து இடங்களுக்கும் நடந்து செல்ல வேண்டியிருக்கும். அவரால் எந்தவிதமான போக்குவரத்தையும் பயன்படுத்த முடியாது, அவர் தரையில் வெள்ளைத் துணியை விரித்துதான் தூங்க வேண்டும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சாப்பிட முடியாது,” என்று அவர் மேலும் கூறினார்.

சமண மதத்தின் பிரிவுகளில், குழந்தைத் துறவிகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரிவு ஒன்று மட்டுமே. சங்வி குடும்பத்தார் அதைச் சேர்ந்தவர்கள். மற்ற மூன்று பிரிவுகளும் பெரியவர்களை மட்டுமே துறவியாவதற்கு அனுமதிக்கிறார்கள்.

தேவன்ஷியின் பெற்றோர், “தீவிர மத நம்பிக்கை கொண்டவர்கள்” என்று கூறப்படுகிறது. மேலும், இந்திய ஊடகங்கள் அவர்களுடைய குடும்ப நண்பர்களை மேற்கோள் காட்டி, “சிறுவயது முதல் ஆன்மிக வாழ்வில் நாட்டம் கொண்டவர்,” என்று குறிப்பிட்டுள்ளன.

தேவன்ஷி சங்வி

பட மூலாதாரம், RUPESH SONAWANE

“தேவன்ஷி, தொலைக்காட்சி, திரைப்படம் பார்த்ததில்லை, மால்கள், உணவகங்களுக்குச் சென்றதில்லை,” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

“சிறு வயதில் இருந்தே, தேவன்ஷி ஒரு நாளைக்கு மூன்று முறை பிரார்த்தனை செய்கிறார். மேலும், இரண்டு வயதில் விரதம் கூட இருந்தார்,” என்று அந்தச் செய்தித்தாள் கூறியது.

அவரது துறவு விழாவுக்கு ஒரு நாள் முன்னதாக, அவருடைய குடும்பம் சூரத்தில் ஒரு பெரிய கொண்டாட்ட ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தது.

ஒட்டகங்கள், குதிரைகள், மாட்டு வண்டிகள், டிரம்மர்கள், தலைப்பாகை அணிந்தவர்கள் தெருக்களில் செல்வதை ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்.

தேவன்ஷியும் அவரது குடும்பத்தினரும் யானை இழுத்துச் சென்ற தேரில் அமர்ந்திருந்தனர். மக்கள் ரோஜா இதழ்களை அவர்கள் மீது பொழிந்தனர்.

சங்வி குடும்பத்திற்கு தொழில்கள் இருக்கும் மும்பை, பெல்ஜிய நகரமான ஆண்ட்வெர்ப் ஆகிய இடங்களில் ஊர்வலங்கல் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்த நடைமுறைக்கு சமண சமூகத்தில் இருந்து ஆதரவு இருந்தாலும், தேவன்ஷி துறவி ஆனது விவாதப் பொருளாகியுள்ளது. அவர் சார்பாக இதுபோன்ற முக்கியமான தேர்வுகளைச் செய்வதற்கு ‘முன்பு அவர் குறிப்பிட்ட வயதை எய்தும் வரை அவருடைய குடும்பத்தால் காத்திருக்க முடியாதா?’ என்று பலரும் கேட்கின்றனர்.

தேவன்ஷி சங்வி

பட மூலாதாரம், RUPESH SONAWANE

தீட்சை விழாவுக்கு அழைக்கப்பட்ட ஷா, ஒரு குழந்தை உலகைத் துறக்கும் எண்ணம் அவரைச் சங்கடப்படுத்தியதால் விலகியிருந்தார். “எந்த மதமும் குழந்தைகளைத் துறவிகளாக அனுமதிக்கக்கூடாது,” என்று வலியுறுத்தினார்.

“அவர் ஒரு குழந்தை. அவருக்கு இதைப் பற்றி என்ன புரிதல் இருக்கும்? குழந்தைகள் 16 வயது வரை கல்லூரியில் என்ன படிப்பைப் படிக்க வேண்டும் என்றுகூட முடிவு செய்ய முடியாது. அவர்களுடைய முழு வாழ்க்கையையும் பாதிக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி அவர்கள் எப்படி முடிவெடுப்பார்கள்?” என்று கேட்கிறார் அவர்.

உலகைத் துறக்கும் ஒரு குழந்தை தெய்வமாகி, சமூகத்தால் கொண்டாடப்படும்போது, அது ஒரு பெரிய விஷயமாகத் தோன்றலாம். ஆனால், மும்பையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசகரான பேராசிரியர் நீலிமா மேத்தா, “குழந்தை படும் சிரமம் மிகப் பெரியதாக இருக்கும்,” என்கிறார்.

“சமண துறவியாக வாழ்வது மிகவும் கடினமானது,” என்கிறார் அவர்.

ஒரு குழந்தை இவ்வளவு இளம் வயதிலேயே தன் குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருப்பதைப் பற்றி பல சமூக உறுப்பினர்களும் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் செய்தி வெளியானதில் இருந்து, பலரும் சமூக ஊடகங்களில் சங்வி குடும்பத்தை விமர்சிக்கின்றனர். சங்வி குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளின் உரிமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டினர்.

குழந்தைகள் உலகைத் துறக்கும் இந்த நடைமுறையை அரசாங்கம் தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று ஷா கூறுகிறார்.

ஆனால், அது நடக்க வாய்ப்பில்லை. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரான பிரியங்க் கனுங்கோவின் அலுவலகத்தை நான் தொடர்புகொண்டு தேவன்ஷியின் விஷயத்தில் அரசு ஏதாவது செய்யப் போகிறதா என்று கேட்டேன்.

தேவன்ஷி சங்வி

பட மூலாதாரம், RUPESH SONAWANE

இது “உணர்ச்சிகள் சம்பந்தப்பட்ட விஷயம்,” என்பதால் இதில் கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் தேவன்ஷியின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

குழந்தை “தனது சொந்த விருப்பத்திற்கு மாறாக” துறவியாக மாறுகிறது எனக் கூறுபவர்களுக்கு, “குழந்தையின் சம்மதம் இருப்பினும், சட்டப்படி அது சம்மதம் இல்லை,” என்று பேராசிரியர் மேத்தா சுட்டிக்காட்டுகிறார்.

“சட்டபூர்வமாக 18 வயது என்பது ஒருவர் சுதந்திரமாக முடிவெடுக்கௌம் வயது. அதுவரைக்கும் அவர் சார்பாக பெரியவர் ஒருவர், சான்றாக அவருடைய பெற்றோர் போன்றவர்களால் முடிவு எடுக்கப்படும். அவர்கள் தொடர்பாக எடுக்கப்படும் முடிவு, அந்தக் குழந்தைகளின் நலனுக்குரியதா என்பதை அவர்கள் பரிசீலிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

“அந்த முடிவு குழந்தையின் கல்வி, பொழுதுபோக்குகளை பறித்தால், அது அவருடைய உரிமைகளை மீறுவதாக அர்த்தம்.”

ஆனால், மும்பை பல்கலைக்கழகத்தில் சமண தத்துவத்தைக் கற்பிக்கும் மருத்துவர் பிபின் தோஷி, “நீங்கள் ஆன்மிக உலகில் சட்டக் கொள்கைகளைப் பயன்படுத்த முடியாது,” என்று கூறுகிறார்.

“குழந்தைகள் இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் அளவுக்கு முதிர்ச்சியடையவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், சிறந்த அறிவார்ந்த திறன்களைக் கொண்ட குழந்தைகள் சிறு வயதிலேயே பெரியவர்களைவிட அதிகமாக சாதிக்க முடியும். அதேபோல், ஆன்மிக நாட்டமுள்ள குழந்தைகளும் உள்ளனர். ஆகவே, அவர்கள் துறவிகள் ஆவதில் என்ன தவறு?” என்று அவர் கேட்கிறார்.

மேலும், தேவன்ஷி எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவர் தோஷி வலியுறுத்துகிறார்.

தேவன்ஷி சங்வி

பட மூலாதாரம், RUPESH SONAWANE

“அவர் வழக்கமான பொழுதுபோக்கை இழந்திருக்கலாம். ஆனால், அது உண்மையில் அனைவருக்கும் அவசியமா? அவர் அன்பையோ கல்வியையோ இழக்கிறார் என்பதில் நான் உடன்படவில்லை. அவர் தன் குருவிடம் இருந்து அன்பைப் பெறுவார். அவர் நேர்மை மற்றும் பிடிப்பில்லாமையை கற்றுக்கொள்வார். அது சிறந்தது இல்லையா?”

மருத்துவர் தோஷி, தேவன்ஷி பிறகு தனது மனதை மாற்றிக்கொண்டு, “தனது குருவின் பேச்சுக்களால் தவறான முடிவை எடுத்துவிட்டதாக” நினைத்தால், அவர் எப்போது வேண்டுமானாலும் அதை விடுத்து இயல்பு வாழ்வுக்குத் திரும்ப முடியும் என்கிறார்.

அப்படியானால், அவர் 18 வயதைக் கடந்த பிறகு ஏன் முடிவு செய்யக் கூடாது என்று பேராசிரியர் மேத்தா கேட்கிறார்.

“இந்த வயதில் அவருக்கு இதில் விருப்பம் ஏற்படலாம். ஆனால், சில ஆண்டுகளில் அவர் விரும்பும் வாழ்க்கை இதுவல்ல என்று நினைக்கலாம். பெண்கள் வளர்ந்தவுடன் மனம் மாறிய நிகழ்வுகள் உள்ளன,” என்று அவர் கூறுகிறார்.

தேவன்ஷி சங்வி

பட மூலாதாரம், Getty Images

பேராசிரியர் மேத்தா, சில ஆண்டுகளுகு முன்பு ஓர் இளம் சமண துறவி தனது மையத்தை விட்டு ஓடிப்போன விஷயங்களைத் தான் கையாண்டதாகக் கூறுகிறார்.

ஒன்பது வயதில் துறவியாக மாறிய வேறொரு பெண், 2009ஆம் ஆண்டில் 21 வயதை எட்டிய பிறகு பிரச்னையை ஏற்படுத்தி, தனது காதலனைத் திருமணம் செய்துகொண்டார்.

கடந்த காலங்களில், நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இது உணர்வுரீதியிலான பிரச்னை என்பதால் எந்தவித சமூக சீர்திருத்தமும் சவாலானது என்கிறார் பேராசிரியர் மேத்தார்.

“இது சமணர்களிடையே மட்டுமில்லை. இந்து பெண்கள் தெய்வங்களை திருமணம் செய்து தேவதாசிகளாக மாறுகிறார்கள்(இந்த நடைமுறை 1947இல் தடை செய்யப்பட்டிருந்தாலும்), சிறுவர்கள் அகடாக்களில்(மத மையங்களில்) இணைகிறார்கள், புத்த மதத்தில் குழந்தைகள் மடங்களில் துறவிகளாக வாழ அனுப்பப்படுகிறார்கள்.

குழந்தைகள் அனைத்து மதங்களின் கீழும் துன்பப்படுகிறார்கள். ஆனால், அதைக் கேள்வி கேட்பது தெய்வ நிந்தனையாகக் கருதப்படுகிறது,” என்று கூறுகிறார் அவர்.

“குழந்தை உங்கள் உடைமை இல்லை” என்று குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் கற்பிக்கப்பட வேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »