Press "Enter" to skip to content

மோதி குறித்த பிபிசி ஆவணப்படத்தை புதுவை பல்கலையில் திரையிட மறுப்பு: கைபேசி, மடிக்கணினிபில் பார்த்த மாணவர்கள்

இந்திய பிரதமர் மோதி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை புதுவை பல்கலைக்கழகத்தில் திரையிட அனுமதி மறுத்த நிலையில், மாணவர்கள் அவர்களது தொலைபேசி மற்றும் மடிக்கணினிபில் பதிவிறக்கம் செய்து பார்த்தனர். பாதுகாப்பு கருதி புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள புதுவை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. பி.பி.சி.யின் ‘இண்டியா: தி மோதி க்வெஸ்டின்’ (India: The Modi question) ஆவண படம் பல்கலைக்கழக வளாகங்களில் திரையிடப்படும் என்று இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகள் அறிவித்திருந்தன.

இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் பொதுவெளியில் திரையிடக்கூடாது என தெரிவித்திருந்த நிலையில் விடுதி அறைகளில் திரையிடப்படும் என அறிவித்தனர்.  அதற்கும் பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதிக்க முடியாது என அறிவித்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை குவிக்கப்பட்டனர். இந்த நிலையில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது தொலைபேசி மற்றும் மடிக்கணினிபில் பதிவிறக்கம் செய்யப்பட்ட  பிபிசி ஆவணப் படத்தை பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே கூடி பார்த்தனர்.

இதே போன்று கேரளா மாநிலத்தில் உள்ள புதுச்சேரி மாஹே பிராந்தியத்திலும் பிபிசி வெளியிட்ட மோதி ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு(DYFI) சார்பில் இந்த ஆவணப்படத்தை திரையிட்டுள்ளனர். அதை அவர்களது பேஸ்புக் பக்கத்திலும் நேரடியாக ஒளிப்பரப்பு செய்தனர்.

மின்சாரம் , வைஃபை துண்டிப்பு

இதுகுறித்து புதுவை பல்கலைக்கழகத்தில் பிபிசி வெளியிட்ட மோதி ஆவணப்படத்தை பார்த்த மாணவர்களில் ஒருவரை பிபிசி தொடர்பு கொண்டு பேசியது. 

ஆராய்ச்சி மாணவரான அவர் பேசுகையில், ” பிபிசி வெளியிட்ட மோதி குறித்த ஆவணப்படத்தை திரையிட இருப்பதாக இந்திய மாணவர் சங்கம் சார்பில்  அறிவித்தனர். ஆனால் அதற்கு பல்கலைக்கழகம் நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கவில்லை. மேலும் பிற்பகல் மூன்று மணிக்கு மேல் பல்கலைக்கழகம் முழுவதும் மின்சாரம் மற்றும் வைஃபை(wifi) இணைய வசதி துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள ஜென்டர் கேட் அருகே சுமார் 300 மாணவர்கள் இணைந்து எங்களது தொலைபேசி மற்றும் மடிக்கணினியில் பிபிசியின் ஆவணப்படத்தை பார்த்தோம்.

அப்போது ஏபிவிபி அமைப்பை சேர்ந்த 10 பேர் எங்களுக்கு எதிராக ஜெய் ஸ்ரீ ராம், மோதி மோதி, சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷங்களை எழுப்பினர். மேலும் இந்தியில் எங்களை பார்த்து சுட்டுக் தள்ளுங்கள் என்று கத்தினர். மேலும் இரு தரப்பினரும் இடையே மோதல் ஏற்பட இருந்த நிலையில் பல்கலைக்கழக தனியார் காவலர்கள் பாதுகாத்தனர். தற்போது மின் இணைப்பு வந்துள்ளது. ஆனால் இணைய வசதி வரவில்லை,” என்று ஆராய்ச்சி மாணவர் தெரிவித்துள்ளார்.

பி.பி.சி.யின் ‘இண்டியா: தி மோதி க்வெஸ்டின்’ ஆவணப்படம்

டெல்லி ஜே.என்.யூ. வளாகத்திலும் திரையிடல்

முன்னதாக, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிபிசியின் ஆவணப் படம் நேற்று திரையிடப்பட்டது. நர்மதா மாணவர் விடுதியின் முன்புள்ள ஜே.என்.யூ. மாணவர் சங்க அலுவலகத்தில் நேற்று இரவு 9 மணிக்கு இந்த ஆவணப்படம் திரையிடப்படுதாக இருந்தது. இதுகுறித்து ஒரு நாள் முன்னதாகவே ஜே.என்.யூ. மாணவர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 

மாணவர் சங்கத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஆவணப்படத்தை திரையிட அனுமதி பெறப்படவில்லை, ஆகவே அந்நிகழ்ச்சியை மாணவர்கள் ரத்து செய்ய வேண்டும் என்று ஜே.என்.யூ. நிர்வாகம் அறிவுறுத்தியது. இதனை மீறும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது. 

பி.பி.சி.யின் ‘இண்டியா: தி மோதி க்வெஸ்டின்’ ஆவணப்படம்

ஆவணப்படம் திரையிடப்படவிருந்த இடத்தில் இரவு 8 மணி முதலே மாணவர்கள் கூடத் தொடங்கி விட்டனர். ஆனால், ஆவணப்பட திரையீட்டிற்கு முன்பாக இரவு 8.30 மணியளவில் ஒட்டுமொத்த வளாகத்திலும் மின்தடை ஏற்பட்டது. 

அங்கே கூடியிருந்த மாணவர்கள், நிர்வாகமே மின்சாரத்தை துண்டித்துவிட்டதாக குற்றம்சாட்டினர். ஆவணப்பட திரையீட்டிற்கு சற்று முன்னதாக மின் தடை ஏற்பட்டது ஏன் என்பதற்கு ஜே.என்.யூ. நிர்வாகம் சார்பில் எந்தவொரு பதிலும் இல்லை. 

ஆவணப்படத்தை பார்க்க கூடியிருந்த மாணவர்களிடையே, கைபேசி வெளிச்சத்தில் இரவு 9.10 மணியளவில் ஜே.என்.யூ. மாணவர் சங்க தலைவர் அய்ஷே கோஷ் உரையாற்றினார். 

“உண்மை வெளியே வந்துவிடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். நீங்கள் மின்சாரத்தை தடை செய்யலாம், எங்களிடம் இருந்து திரையை, மடிக்கணினிபை பறித்துக் கொள்ளலாம், ஆனால் எங்களது கண்களையும், உத்வேகத்தையும் உங்களால் பறிக்கவே முடியாது,” என்று அவர் கூறினார். 

பிபிசியிடம் பேசிய அவர், “பொதுவெளியில் ஆவணப்படம் திரையீட்டை வேண்டுமானால் மோதி அரசு தடுக்கலாம். ஆனால், பொதுமக்கள் அதனை பார்ப்பதை தடுக்க முடியாது” என்றார். 

மின்தடை காரணமாக, பெரிய திரையில் ஆவணப்படத்தை திரையிட முடியவில்லை. ஆனால், அங்கே கூடியிருந்த மாணவர்களுக்கு கியூஆர் குறியீடு அச்சிடப்பட்ட ஏ4 பேப்பர்களை மாணவர்கள் சங்கத்தினர் விநியோகிக்கத் தொடங்கினர். அதன் உதவியுடன், மாணவர்கள் அவர்களது கைபேசி வாயிலாக ஆவணப்படத்தை பார்க்க முடிந்தது. 

இரவு 10.20 மணியளவில், ஆவணப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது கற்கள் விழத் தொடங்கின. அதன் அருகே அமைந்துள்ள டெஃப்லாஸ் உணவகத்தில் இருந்து அந்த கற்கள் வீசப்பட்டன. 

கல் மட்டுமல்ல, செங்கற்களும் கூட வீசப்பட்டன. கல்வீச்சு தொடங்கியதுமே ஆவணப்படம் பார்ப்பதை பாதியில் அப்படியே நிறுத்திவிட்டு அந்த இடத்தை விட்டு மாணவர்கள் ஓட முயன்றதால் நெரிசல் ஏற்பட்டது. 

கல்வீச்சு தொடங்கிய ஐந்தே நிமிடங்களில் மாணவர் சங்க அலுவலகத்திற்கு வெளியே மாணவர்கள் கூடியிருந்த இடம் காலியாகிவிட்டது. ஆவணப்பட திரையிடலுக்காக அங்கே கூடிய மாணவர்கள் ஜே.என்.யூ. பிரதான நுழைவு வாயிலுக்கு ஊர்வலமாகச் சென்று முழக்கங்களை எழுப்பினர். 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »